Tuesday, 26 April 2016

கம்யூனிஸ்ட்டுகள் மரிப்பதில்லை.. (08.09.2012)



அப்படியொன்றும் உன்னை
அனுமதித்திட முடியாது
நீ ஓய்வெடுக்க

நிச்சயமாய் உனக்கு
உரிமையில்லை
நீ ஓய்வெடுக்க

யார் தந்தது உனக்கு இந்த அதிகாரம்
யாரை கேட்டு முடிவு செய்தாய்
நீ ஓய்வெடுக்க

தந்தையாய், தோழனாய்
அறிஞனாய், ஆசானாய்
 உனக்குப்பின்னே
யாரையும் விரல் சுட்டாமல்
எப்படி கிளம்பினாய்
நீ ஓய்வெடுக்க?

கற்றுக்கொடுத்த உதடுகளை-தோள்
தட்டிக்கொடுத்த கைகளை-என்னை
குட்டிதிருத்திய விரல்களை-என்
புலம்பல்  சகித்த செவிகளை
இனியேங்கே நான் தேடுவேன்?

உன் கருணை பார்வையும்
கத்தி போன்ற நேர்மையும்
இனியேங்கே நான் பார்ப்பேன்?

உன் களங்கமில்லா சிரிப்பொலியும்
கண்ணியமான பேச்சொலியும்
இனியேங்கே நான் கேட்பேன்?

சாதியம் மறுத்து -நீ
சீறிய போதும்
பெண்ணியம் குறித்து- நீ
பேசிய போதும்
இமை மூட மறந்து -என்னை
இயங்காமல் அமரச்செய்த
வசீகர குரல் எங்கே?

மார்க்சியம் குறித்த உன் அறிவையும்
மானுடம் குறித்த உன் பார்வையையும் -நான்
மெல்லாமல் விழுங்கத் துடித்த
தருணங்கள் எங்கே  ?

வரலாறு சொல்லி தந்தாய்
வாசிப்பு சொல்லி தந்தாய்
வாழ்வியலை சொல்லி தந்தாய்
உன் வலிகளை மட்டும்
சொல்லாமலே இருந்தாயோ?

நீ காட்டிய கருணைக்கும்
நீ ஊட்டிய அறிவுக்கும்
கைம்மாறு செய்திட
வாய்ப்புகளே தராமல்- என்னை
நிரந்தர கடன்காரனாக்கி
நிமதியாய் உறங்கினாயோ?

காவலர் துப்பாக்கிகளுக்கு எதிரே
நீ கோசமிட்டபோது சொல்லிவந்தேன்
"கம்யூனிஸ்டுகள் தைரியமானவர்கள் "

காவலர் தடியடி தலையில் நீ
தாங்கியபோது சொல்லிவந்தேன்
"கம்யூனிஸ்டுகள் வீரமானவர்கள் "

தடியடி தாங்கியதால் -நீ
செவிப்புலன் இழந்தபோது
சொல்லிவந்தேன்
"கம்யூனிஸ்டுகள் தியாகமானவர்கள் "

உருக்கு போன்ற  கொள்கைக்காக
உன் வாழ்வை அர்ப்பணித்தபோது
சொல்லிவந்தேன்
"கம்யூனிஸ்டுகள் விசாலமானவர்கள்"

உலகப்பார்வை குறித்த
  உன் ஞானம் பார்த்து
சொல்லிவந்தேன்
"கம்யூனிஸ்டுகள் அறிவானவர்கள்"

உன்னையும் உன் குடும்பத்தையும்
பார்த்தபோது சொல்லிவந்தேன்
 "கம்யூனிஸ்டுகள் அன்பானவர்கள்"

ஆனால்
இப்போதெல்லாம்
யாரும் கேட்டால் சொல்கிறேன்
 கம்யூனிஸ்டுகள் உன்னைப்போன்றவர்கள்
"கம்யூனிஸ்டுகள் தி.ம.ராசாமணி போன்றவர்கள் "

இனி எங்கள் உதடுகளில் உன் குரல் ஒலிக்கும்


உலகின் கடைசி கம்யூனிஸ்ட்
இருக்கும் வரை நீ இருப்பாய்

கம்யூனிஸ்டுகள் மரிப்பதில்லை

நீ மரிக்கவில்லை ...

No comments:

Post a Comment