Thursday, 25 February 2016

அவனும் அவர்களும்...(20.02.2016)




பச்சிளங் குழந்தையொன்று  

பதறி அழுகிறதென்றான் ’அவன்’..

அடடா கவிதையென்று 
மெச்சிக்கொண்டார்கள் ‘அவர்கள்’...

பசிமயக்கம் கண்கள் சூழ 
பச்சிளங் குழந்தையொன்று  
பதறி அழுகிறதென்றான் ’அவன்’.
”ப்ச்.. கழிவிறக்கம் இதுவன்றோ"வென 

குதூகலித்தார்கள் ‘அவர்கள்’..

ஸ்தூலமான துக்கப் பிரழ்வில் 
ஹாஸ்யங்களின் பெருவெளியில் 
பிச்சைக்காரியின் புடவை விலக 
பீப் பீப் பீப்… பீப் பீப் பீப் 
பூனைக்குட்டி வெளியே செல்ல  
பச்சிளங் குழந்தையொன்று  
பதறிஅழுததென்றான் ‘அவன்’...
நவீனக் கவிதையென  
நாக்கைச் சப்பினார்கள் ‘அவர்கள்’.... 

தனக்கான உணவை 
வல்லூறுகள் தட்டிப்பறிக்க 
பச்சிளங் குழந்தையொன்று  
பசியாலே அழுகிறதென்றான் ’அவன்’.
”இவன் கம்யூனிஸ்ட்டா இருப்பானோ..”  
மூக்கைச்சிந்திக்கொண்டு 
முனுமுனுத்தனர் ’அவர்கள்’... 

வல்லூறுகளை விரட்டியப்போம் 
குழந்தைகளின் பசியாற்றுவோம் 
நமது உணவு நமக்கே சொந்தம் 
அழுதது போதும் 
அணிதிறள்வீரென்றான் ’அவன்’…
”அய்யோ.. இலக்கியத்தில் அரசியல் பேசலாமா..”  
நெஞ்சு நெஞ்சாய் அடித்துக்கொண்டு  
பதறியழுதார்கள் ’அவர்கள்’… 

’அவர்கள்’ வல்லூறுகளின்  
கள்ளச் சேவகர்களென்பது 
’அவனு’க்குத் தெரிந்துவிட்டது – பாவம் 
’அவர்களு’க்கு இன்னும் தெரியவில்லை...

சாஜிதா... (25.02.2016)


இருபதடி தூரத்திலிருந்து அந்த திருப்பத்தைப் பார்த்தபோதே ஷாஜிதாவுக்கு லேசாக உதறலெடுத்தது. எங்கே அந்தச் சனியன் மீண்டும் அவிழ்த்துக் கொண்டு வந்துவிடுமோ என்ற நடுக்கம் அவள் மனதைச் சூழ்ந்திருந்தது. ’ஆ’ வெனப் பிளந்தபடி வரும் அதன் வாயையும், அதன் கூர்மையான பற்களையும் நினைத்தாலே படபடப்பாக இருந்தது. தனதருகே வந்து கொண்டிருந்த தனது தங்கை நிஷாவின் முகத்தைப் பார்த்தாள். நிஷாவின் வலது கையில் சாப்பாட்டுக் கூடை இருந்தது. இடது கை ஷாஜிதாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தது. அவள் முதுகில் தொங்கிய ரெக்சினால் செய்யப்பட்ட புத்தகப் பையின் ஜிப்பு கிழிந்து வாயைப் பிளந்தபடி இருந்தது. அந்த பிளவில் புத்தகங்கள் துறுத்திக்கொண்டு வெளியே தெரிந்தது. அவளும் அதே திருப்பத்தைக் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களும் கலவரமடைந்திருந்தது. ஷாஜிதாவின் கையை அச்சத்தால் அழுத்திப்பிடித்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள் ஷாஜிதா நான்காம் வகுப்பு. நிஷா இரண்டாவது. வீட்டிலிருந்து அந்த அரசுப்பள்ளிக்கு நடந்துசெல்லும் தூரம்தான். பள்ளிக்குச் செல்லும் பிரதான சாலையில் போனால் முக்கால் மணிநேரம் நடக்க வேண்டும். இன்னொரு குறுக்கு வழியும் உண்டு. காலையில் எட்டு ஐம்பதுக்கு புத்தகப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு குறுக்குச் சந்தில் புகுந்து நடக்க ஆரம்பித்தால் போதும். ஒன்பது மணி பெல் அடிப்பதற்கு சில நிமிடம் முன்பாகவே வகுப்புக்குள் சென்றுவிடலாம்.
ஆனால் சிக்கல் என்னவென்றால் வழியில் S வடிவத்தில் திரும்பும் ஒரு குறுகிய சந்தைக் கடந்து செல்லவேண்டும். அந்த சந்தில் ஒரு வீட்டின் முன்னே உள்ள வேப்ப மரத்தில் ஒரு பொமரேனியன் நாய் கட்டிப் போடப்பட்டிருக்கும். உடல் முழுதும் பஞ்சுமிட்டாயால் செய்து வைத்தது போல மொசுமொசுவென்று இருக்கும். பால் வெள்ளை நிறம். இரண்டு கருவண்டுகள் பறந்துவந்து அதன் முகத்தில் சரியான இடைவெளியில் ஒட்டிக்கொண்டது போல கண்ணங்கரேலென்ற கண்கள்.
அது அதிக ஆள் நடமாட்டமில்லாத குறுக்குச் சந்து என்பதால் அந்த சந்தைக் கடக்கும்போது இருவருக்கும் திகிலாக இருக்கும். அதிலும் இந்த சனியன் வேறு. ஆமாம் அந்த பொமரேனியன் பஞ்சுமிட்டாய்க்கு சகோதரிகள் வைத்த பெயர் சனியன். அந்த நாயின் உரிமையாளர் ரோசியோ கீசியோ ஏதோவொரு பெயரை வைத்திருந்தார். ஆனால் சகோதரிகளைப் பொருத்தவரை அதன் பெயர் சனியன்தான்.
யாராவது அந்த சந்தைக் கடக்கும்போது உயிர் போவது போல வாள் வாள் என்று குரைத்துத் தொலையும். அதன் சத்தம் கம்பீரமாக இருக்காது. மெல்லிய சத்தமாக இருந்தாலும் ரசிக்கும்படியும் இருக்காது. தகர டப்பாவை தார் ரோட்டில் உரசியது போல நாராசமாய் இருக்கும். அதைக் கடந்துசென்ற பிறகும் வெகுநேரம் காதுக்குள் கொய்ய்ய்ய்ங்.. என்று அதன் சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பதுபோல அதன் பாதிப்பு இருக்கும்.
தோலால் ஆன, ஒரு பழுப்புநிற பட்டை கழுத்தைச்சுற்றி கட்டப்பட்டிருக்கும். அதிலுள்ள வளையத்துடன் ஒரு மெல்லிய இரும்புச் சங்கிலி பினைக்கப்பட்டு, அந்த வேப்ப மரத்தின் கிளையில் கட்டப்பட்டிருக்கும். யாரையாவது பார்த்து விட்டால் மரத்தை வேரோடு பெயர்த்துக்கொண்டு வந்துவிடுவது போன்ற மூர்க்கத்துடன் இழுக்கும். அதன் வயிற்றிலிருக்கும் குடலெல்லாம் வெளியே வந்து விழுந்துவிடுமோ என்று நினைக்கும்படி அடிவயிற்றிலிருந்து  குரைத்துக் கொண்டே இருக்கும். கோபத்தில் தன்னைத்தானே வட்டவடிவில் சுற்றிக் கொண்டு குரைக்கும். அந்த சந்தைக் கடந்து போகும்வரை சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுபோல இடைவிடாமல் குரைத்துக்கொண்டே இருக்கும்.
சில நாட்களுக்கு முன்புவரை அந்த சந்தைக் கடக்க இருவரும் பயந்ததில்லை. அதுபாட்டுக்கு குரைத்துக்கொண்டு இருந்தாலும் இவர்கள் ஓரமாகச் சென்றுவிடுவார்கள். சென்ற வாரத்தில் ஒருநாள் அந்த சந்தைக் கடக்கும்போது அந்த வெள்ளைநிறச் சனியன் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவந்தது. சிறுமிகள் இருவரும் பயந்து ஆளுக்கொரு திசையில் ஓடினர். புத்தகப் பையுடன் வேகமாக ஓடமுடியாமல் தத்தகா பித்தகா என ஓடிக்கொண்டிருந்த நிஷாவின் மீது பாய்ந்து அவளது புத்தகப்பையைக் கவ்வி இழுத்தது. புத்தகப்பைக்கு மேலே தலையையும் கீழே கால்களையும் கழித்துவிட்டால், புத்தகப்பையின் அளவில் பாதிதான் இருப்பாள் நிஷா. சனியனின் மூர்க்கத்தால் பையோடு கீழே விழுந்து அவள் பயந்து கத்திய சத்தம் அந்தப்பகுதி முழுதும் எதிரொலித்தது.
யாரோ ஒரு பெரியவர் சரியான நேரத்தில் அந்தப்பக்கமாய் வந்ததால் நாயை விரட்டி நிஷாவைக் காப்பாற்றினார். தரையில் உரசியதில் முழங்கால்களில் சிராய்ப்புக் காயம். கொதகொதவென இரத்தம் கசிந்திருந்தது. புத்தகப்பையும் கிழிந்துபோய் தெருவெல்லாம் புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. பையை எடுக்கக்கூட நிஷா திரும்பி வரவில்லை. சிறிதுநேரத்தில் தயங்கித் தயங்கி திரும்பி வந்த ஷாஜிதா சிதறிய புத்தகங்களை அவசர அவசரமாக எடுத்து பையினுள் தினித்துக் கொண்டு ஓடினாள். பாவம் அவளும் மிகவும் பயந்துபோய்விட்டாள். அந்த பெரியவர் மட்டும் வரவில்லை யென்றால் என்னவாகியிருக்கும்..? நினைக்கும் போதே குலை நடுங்கியது. அதிலிருந்து ஒவ்வொருமுறை அந்த சந்தைக் கடந்து போவதும் திரும்பி வருவதும் உயிர்போய் உயிர் வருகிற விசயமாகி விட்டது.
அந்தத் திருப்பத்தை நெருங்க நெருங்க இருவரின் வேகமும் அவர்களை அறியாமலே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே இருந்தது. அந்தத் திருப்பத்திற்கு சில அடி தூரத்தில் சொல்லிவைத்தாற்போல இருவரும் நின்றுவிட்டனர். அந்த வெள்ளைச் சனியன் அதே இடத்தில்தான் இருக்கிறது. ஏதோ மாராத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு இப்போதுதான் திரும்பி வந்ததைப்போல மூச்சிரைத்திக் கொண்டு இருந்தது. வாய்க்கு வெளியே நான்கு அங்குல நீலத்திற்கு அதன் நாக்கு எச்சிலைச் சுரந்தபடி தொங்கிக் கொண்டு இருந்தது. இவர்களுக்காகவே அது காத்திருப்பது போலத் தோன்றியது.
அதைக்கண்டதும் ஏதோ ஒரு மாயக்கரங்கள் அவர்களது கால்களைச் சட்டென பிடித்துக் கொண்டதுபோல இருவரும் நின்றுவிட்டனர். அந்தச் சனியனும் இவர்களைப் பார்த்துவிட்டது. வழக்கம் போலவே அதன் அருவெறுப்பான கரகரத்த குரலில் குரைக்கத் தொடங்கியது. சங்கிலியை அறுத்துக்கொண்டு வந்துவிடுமோ என்ற அச்சம் இருவருக்கும் இருந்தது.
“நிஷா.. அப்படியே ஓரத்திலையே போயிடலாமா..?”
“அல்லாவே..!! வேணாம் தீதி.. அன்னிக்கு மாதிரி சங்கிலிய அத்துட்டு வந்துரும்.. எனக்கு பயமா இருக்கு..?”
“இல்லளா நிஷா.. அதோட சங்கிலி மரத்துல நல்லா கட்டியிருக்கு.. நாம ஓரத்துல போயடலாம்…”
“ப்ளீஸ் தீதி.. எனக்கு பயமா இருக்கு..” சொல்லும்போதே நிஷாவின் குரல் தழுதழுத்தது. கண்கள் கலங்கியிருந்தது. இதற்குமேல் வற்புறுத்தினால் அழுதுவிடுவாள். எனவே ஷாஜிதா அமைதியாக இருந்துகொண்டாள்.
”இன்னிக்குனு பாத்து யாரையும் காணோமே..? எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறதோ..?” தனக்குள் முனுமுனுத்துக்கொண்டாள் ஷாஜிதா. ஆள் நடமாட்டமில்லாத அந்த சந்தில் இருவரும் திகிலோடு தனியாக நின்றிருந்தனர்.
“தீதி.. அங்க பாரு..”
நிஷா கைகாட்டிய திசையில் பார்த்தாள் ஷாஜிதா. ஒரு காய்கரி விற்பவர் தள்ளுவண்டியோடு அந்த நாய் கட்டப்பட்ட வீட்டின் வாசலில் வந்து நின்றார். அந்த வண்டி, நாயை மறைத்தபடி இருந்தது. அப்போதும் அது வண்டிக் காரரைப்பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது.
“தே.. ரோசி.. சுப்ப்..”
சனியனை அதட்டியபடியே அந்த வீட்டிலிருந்து நைட்டியணிந்த ஒரு பெண் வெளியே வந்து காய்கரி வண்டியருகே நின்றாள். சனியன் கப்பென அமைதியாகிவிட்டது. மழைபெய்து ஒய்ந்தது போலிருந்தது.
“வெண்டக்கா கிலோ எவ்ளோ..?
வண்டியிலிருந்து ஒரு வெண்டைக்காயை எடுத்து சொடக்கென்று உடைத்தபடி கேட்டாள்.
“தீதி.. வண்டி போறக்குள்ள சீக்கிரமா ஓடிர்லாம் வா தீதி..” நிஷா பரபரப்படைந்தாள்.
வேகமாக ஓடுவதற்கு உதவியாக நிஷாவின் புத்தகப்பையை ஷாஜிதா வாங்கிக்கொண்டாள். நிஷாவின் கையில் சாப்பாட்டுக்கூடை மட்டும் இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“ஓடு..”
இருவரும் ஓடத் துவங்கினர். அவர்கள் நின்ற இடத்துக்கும், நாய் கட்டப்பட்ட இடத்திற்கும் பத்தடி தூரம்தான். ஆனால் பல கிலோமீட்டர்கள் ஓடுவதுபோல பயனம் நீண்டுகொண்டே இருந்தது இருவருக்கும். அடிவயிற்றில் ஏதோ ஒரு இனம்புரியாத பயம் அலைக்கழித்தது. ஷாஜிதா கண்களை மூடிக்கொண்டு திப்புரு திப்புருவென்று ஓடினாள். அவள் முதுகில் மாட்டியிருந்த புத்தகப்பை இடமும் வலமுமாக தொம் தொம்மென்று தாளகதியில் குத்தித்துக் கொண்டு இருந்தது. நிஷா தள்ளுவண்டியின் சக்கரங்களுக்குக் கீழே பீதியுடன் பார்த்தபடி ஓடிக் கொண்டிருந்தாள். அவள் செருப்பு காலைவிட ஒரு சைஸ் பெரிதாக இருந்ததால் அவள் ஓடும்போது சப்பக் சப்பக்.. சப்பக் சப்பக்.. என்ற சத்தம் தாளகதியில் வந்துகொண்டு இருந்தது.
“இருவது ருவாய்க்கெல்லாம் வராது.. வேற வண்டிய பாரும்மா..?”
முகத்தைக் கடுப்பாக வைத்துக்கொண்டு வண்டிக்காரர் வண்டியை நகர்த்தினார். பேரம் படியவில்லை போல. ஷாஜிதா வண்டியைக் கடந்து ஓடிவிட்டாள். நிஷா வண்டிக்கு அருகில் வருவதற்கும், வண்டி நகர்வதற்கும் சரியாக இருந்தது. சனியன் அவளைப் பார்த்து விட்டது. வள் வள் என்று கத்திக்கொண்டு வெறியுடன் நிஷாவை நோக்கிப் பாய்ந்தது. அவளுக்கு மிக அருகில் வந்து சங்கிலியால் இழுபட்டு முன்னங்கால்களைத் தூக்கியபடி ஒர்ர்ர்ர்ர்ர்ர்…. என அச்சமூட்டும்படி கத்தியது. பயந்துபோன நிஷா வீரென்று கத்தியபடி சாப்பாட்டுக் கூடையை கீழே போட்டுவிட்டு ஓடினாள்.
வேப்பமரத்தின் சிறு குச்சியை உடைத்து சளேரென்று நாயின் மீது அடித்தாள் அந்தப் பெண். வண்டிக்காரர் மீதிருந்த கோபத்தை நாயின்மீது காட்டினாள்.
“சனியனே.. பெசாம இரு..” கோபத்தில், அந்த நாய்க்கு சிறுமிகள் வைத்த பெயரையே அவளும் உச்சரித்தாள்.
வீல்… வீல்… வீல்… என்று முனகியபடி சனியன் ஒடுங்கிப் படுத்துக்கொண்டது.
“பாப்பா.. ஒங் கூடைய எடுத்துக்க.. நாய நாம்புடிச்சுக்கறேன்.. ஒன்னுஞ் செய்யாது..”
நிஷா வரவில்லை. நடுங்கியபடி அங்கேயே நின்றிருந்தாள். ஷாஜிதாதான் தயங்கித் தயங்கி திரும்பிவந்தாள். கூடை, தண்ணீர் பாட்டில், டிபன் பாக்ஸ், குழம்பு ஊற்றும் சிறிய சில்வர் கொட்ரா எல்லாம் மூலைக்கொன்றாய் வாயைப் பிளந்தபடி சிதறிக்கிடந்தன. சாப்பாடு தெருவில் சிதறியிருந்தது. அவசர அவசரமாய் அனைத்தையும் பொருக்கி எடுத்து கூடைக்குள் தினித்துக்கொண்டு ஓடினாள். எடுக்கும் அவசரத்தில் அவளது பாவாடை சிந்தியிருந்த குழம்பில் உரசியதை அவள் கவனிக்கவில்லை.
அந்த S வடிவ சந்தைக் கடந்த பிறகுதான் இருவருக்கும் உயிரே வந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். ஷாஜிதாவிடமிருந்து புத்தகப்பையை வாங்கி தோளில் மாட்டிக்கொண்டு ஒரு பெரிய கண்டத்தைக் கடந்துவிட்ட நிம்மதியுடன் நடந்தாள் நிஷா. ஓரிடத்தில் நின்று தன் பாவாடையில் ஒட்டியிருந்த குழம்புக்கரையை தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். ’நாளைக்கும் இதே யூனிபார்மத்தான் போடனும்’
ஒரு  நடுத்தர வயதுள்ள பெண் இரண்டு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஸ்கூட்டியில் அவர்களைக் கடந்து சென்றாள். ஹினா அவர்களை ஏக்கத்தோடு பார்த்தபடியே நடந்தாள்.
“ஏன் தீதி.. அப்பா இருந்திருந்தா நம்மள வண்டிலயே கொண்டுபோய் ஸ்கூல்ல விட்டிருப்பாருல்ல..”
“அப்பா இருந்திருந்தா நாம பழைய ஸ்கூல்லியே படிச்சிருப்போம்.. இந்த ஸ்கூலுக்கு வந்தே இருக்கமாட்டோம்… இந்த சனியனோட தொல்லையும் இருந்திருக்காது..”
இருவரும் நடுத்தரமான தனியார் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தவர்கள். தினமும் காலையில் அப்பா பள்ளிக்கு கூட்டிச் செல்வார்.  மாலை அம்மா பள்ளியிலிருந்து வீட்டுக்கு கூட்டிச்செல்வாள். இருவருக்கும் தனித்தனியாக வண்டிகள் இருந்தன. அப்பா இறக்கும்வரை எல்லாமே நன்றாகத்தான் இருந்தது.
பள்ளிக்கு வெளியே காம்பவுண்டு சுவரைத் தொட்டதுபோல் விதவிதமான கடைகள் இருந்தன. பெரும்பாலும் மிட்டாய்க்கடைகள். மாங்காய், நெல்லிக்காய் விற்கும் சில்லரைக்கடைகளும். சீருடையனிந்த மாணவ மாணவியர் கூட்டம் கூட்டமாக போவதும் வருவதுமாக இருந்தனர்.
“பம்பாய் மிட்டாய்… ஓடியா ஓடியா.. பம்பாய் மிட்டாய்..”
ஒரு வயோதிகர் உச்சத்தொண்டையில் கத்திக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் சீருடையனிந்த நிறைய சிறுவர்களும் சிறுமியர்களும் சூழ்ந்திருந்தனர். அவரது கையில் ஆறடி உயர மெல்லிய மூங்கில் கம்பு இருந்தது. அதன் உச்சியில் ஒன்னரையடி உயர பாவாடை சட்டையனிந்த பொம்மை ஒன்று இருந்தது. அதிலிருந்து ஒரு கயிறு கீழ்நோக்கி வந்தது. சலங்கையுடன் கூடிய தட்டுகள் பொம்மையின் இரண்டு கைகளிலும் இருந்தது. அவர் அந்தக் கயிறை இழுக்கும் போதெல்லாம் அந்த பொம்மை கை தட்டுவதுபோல கைகளில் உள்ள தட்டுகளைத் தட்டி சல்..சல்..சல்.. என்று அழகிய ஒலியெழுப்பியது.
பொம்மைக்கு கீழே சவ்வுபோன்ற ஒருவகை மிட்டாய் பாலிதீன் தாள் கொண்டு இருக்கமாகச் சுற்றப்பட்டிருந்தது. அது இளகுவாக எந்த வடிவத்திலும் வளைக்கக்கூடியதாக இருந்தது. ஒரு சிறுவனுக்கு அதிலிருந்து கொஞ்சம் மிட்டாயைப் பிய்த்து கைக்கடிகாரம் போல செய்து கையில் கட்டிவிட்டார். இன்னும் ஒரு துண்டைப் பிய்த்தெடுத்து அதை மெல்லிய கயிறுபோல இழுத்து நீட்டி அவனது மூக்குக்குக் கீழே மீசை போல ஒட்டினார். அது பிஸ்கி. அதாவது இலவசம் என்று அர்த்தம். அவன் மீசையைப்பார்த்து மற்ற சிறுவர்கள் ஹே.. ஹே.. என உற்சாகத்தோடு கத்தினார்கள்.
ஷாஜிதாவும் நிஷாவும் அந்த பம்பாய் மிட்டாய்க்காரரைப் பார்த்தபடியே சென்றுகொண்டிருந்தனர்.
“தீதி எனக்கும் வாட்ச் மிட்டாய் வேனும் தீதி..”
“பெசாம இரீளா.. இப்ப வாங்கி சாப்பிட்டா அப்புறம் இண்ட்ரோல் பெல்லடிச்சதும் எதும் வாங்கித்திங்க முடியாது.. அப்ப நாம மத்தவங்க வாயப்பாத்துட்டுதான் இருக்கனும்..”
“எனக்கு இண்ட்ரோல்ல ஒன்னும் வேனா தீதி.. எனக்கு இப்ப வாட்சு மிட்டாய் வேணும்.. வாங்கிக்குடு தீதி.. ப்ளீஸ்..” கெஞ்சுவதுபோலக் கேட்டாள் நிஷா.
இருவரும் பம்பாய் மிட்டாய் பெரியவரை அனுகினர்.
“தாத்தா வாட்சு முட்டாயி எவ்ளோ..? ஷாஜிதா கேட்டாள்
“ரெண்ட்ருவா பாப்பா..”
ஷாஜிதா தன்னுடைய பாக்கெட்டிலிருந்த ஒரு நாணயத்தை எடுத்தாள். அது ஐம்பது பைசா நாணயம். சிறிது யோசித்தவள் சட்டென தன்னுடைய பையிலிருந்து பென்சில் பாக்சை எடுத்து கடித்துத் திறந்தாள். அதில் ஒரு ஐம்பது பைசா நாணயம் இருந்தது. நிஷாவின் பையிலிருந்த அவளது பென்சில் பாக்சைத் திறந்து பார்த்தாள். இரண்டங்குல நீளத்தில் ஒரு பென்சிலும், இரண்டு அழுக்கடைந்த எரேசர் துண்டுகளும், ஒரு ஷார்ப்னரும் மட்டும் இருந்தது. காசு எதுவும் இல்லை.
நிஷாவின் முகத்தைப் பார்த்தாள். அவள் புரிந்துகொண்டிப்பாள் போலும். ஆனாலும் ஏமாற்றத்தில் அவள் முகம் வாடிப்போனது. சட்டென ஏதோ யோசனை செய்த ஷாஜிதா..
“தாத்தா ஒர்ருவாய்க்கு சின்ன வாட்சு வராதா..?”
பெரியவர் இருவரையும் ஏற இறங்கப் பார்த்தார்.
“இவ சின்னப் பொன்னுதான.. சின்ன கைக்கு சின்ன வாட்சு போதும்.. ஒர்ருவாய்க்கு குடுங்க தாத்தா ப்ளீஸ்..?”
“பெரிய வாட்சே தர்றேன்.. நாளைக்கு வந்து மீதி ஒர்ருவாய கொடு.. சரியா..? “ என சிரித்தபடி மிட்டாயை உருவி வாட்சு வடிவில் வளைத்து நிஷாவின் கையில் கட்டிவிட்டார். நிஷாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்புபோல பளீரென ஒளிவீசியது. இன்னொரு துண்டை உருவி ஷாஜிதாவுக்கு மீசை ஒட்டினார். பிஸ்கி.. இருவரும் மகிழ்ச்சியோடு சிரித்தபடி நடந்தனர்.
“ஏண்டி.. போனவாரந்தான அம்மா பென்சில் வாங்கி குடுத்துச்சு.. குட்டியூண்டா தான் வெச்சிருக்க..? மீசையின் ஒரு முனையைப் பிய்த்து வாயில் தினித்தபடி ஷாஜிதா கேட்டாள்.
“இல்ல தீதி நேத்து என்னோட பிரண்டு அபிராமி இருக்கால்ல, பாவம் தீதி அவ. அவ பென்சில் கொண்டுவரலனு அழுதுட்டு இருந்தா நான் என்னோட பென்சில்ல பாதிய ஒடச்சு சீவி கொடுத்துட்டேன்.”
“ம்ம்.. செரி நீ இந்த வாரம் பூரா இதவெச்சுதான் எழுதனும். நாயித்துக் கெழமதா அம்மா கடக்கி கூட்டிட்டு போவாங்க. நடுவுல வேற எதாவது பென்சில் எரேசர்னு கேட்டா அம்மா திட்டுவாங்க.” சொல்லிவிட்டு நான் சொல்வது புரிகிறதா என்பதுபோல நிஷாவைப்பார்த்தாள்.
“ஏன் தீதி.. அப்பா இருந்திருந்தா எப்ப எது கேட்டாலும் வாங்கித் தருவார்ல..? வாட்சை நக்கியபடியே கேட்டாள் நிஷா. பென்சில்கள் எரேசர்கள் போன்றவை பெட்டி பெட்டியாக வீட்டில் இருந்த காலங்கள் அவள் நினைவுக்கு வந்து மறைந்தது.
ஒன்பது மணி பெல் அடிக்கும் சப்தம் கேட்டதும்..
“ஏ.. பெல் அடிச்சுட்டாங்க.. சீக்கிரம் வாளா..” இருவரும் கூட்டத்தோடு கூட்டமாக ஓடி பள்ளிக்குள் மறைந்தார்கள்.
இடைவேளை நேரம் பள்ளி வளாகம் முழுதும் பரபரப்பாக இருந்தது. பள்ளியிலிருந்து குழந்தைகள் வெளியே செல்ல அனுமதி இல்லை. பின்புறமுள்ள சிறிய கிரில் கதவின் வழியே வெளியிலிருந்து தின்பண்டங்களை வாங்கலாம். குழந்தைகள் ஆளுக்கொரு பதார்த்தத்தை வாங்குவதும் தின்பதுமாக இருந்தனர்.
அது ஒரு சிறிய மைதானம். ஷாஜிதா முன்னதாகவே வந்துவிட்டாள். அங்கு இரு சிறுமிகள் தரையில் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தனர். ஒருத்தி மனலை இரு கைகளால் வழித்தெடுத்து, முன்னும் பின்னும் நீட்டி நீளமான குன்றுபோல் செய்தாள். அது ஒரு குட்டியான மன்னுளிப்பாம்பு நெளியாமல் படுத்திருப்பது போல இருந்தது. தன் கையிலிருந்த ஒரு கூழாங்கல்லை எதிரே இருந்தவளிடம் காட்டிவிட்டு அந்த மனற்குன்றுக்குள் வெவ்வேறு இடங்களில் ஒளிப்பதுபோல போக்கு காட்டி ஏதோ ஒரு இடத்தில் ஒளித்துவைத்தாள். எதிரே இருந்த இன்னொருத்தி தனது கைகளின் விரல்களைக் கோர்த்துக் கொண்டு மனற்குன்றின்மேல் பொத்தியதுபோல ஓரிடத்தில் மூடினாள்.
“ஹே… தப்புத் தாளம்.. தலவலி மேளம்…”
என கத்திகொண்டு முதலாமவள், அவள் பொத்திய கைகளுக்குள் இல்லாமல், வேறொரு இடத்திலிருந்து ஒளித்துவைத்த கூழாங்கல்லை எடுத்தாள். இருவரும் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தனர். அருகிலிருந்த ஒரு சிறிய கல் மேடையின்மீது ஷாஜிதா அமர்ந்தாள். மனலில் விளையாடிய சிறுமிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள். சிவப்பு நிற அரைக்கால் சட்டையும் வெள்ளைச் சட்டையும் அனிந்த (சீறுடை) இரு சிறுவர்கள் ஒருவருக்கொருவர் தோள்களின் மீது கைகளைப் போட்டுக்கொண்டு நடந்து வந்தனர். அவர்களின் கண்களுக்குள் ஏதோ குறும்புத்தனமான திட்டமிருந்ததை காணமுடிந்தது. திடீரென்று அந்த இருவரும் ஓடிவந்து அந்த மனல் குன்றின் மீது ஏறி சதக் பொதக் என்று மிதித்து அதைக் கலைத்துவிட்டு ஓடினர்.
“டேய்.. மணிகண்டா.. நாயே.. பன்னி..” என்று கத்திக்கொண்டு அந்த சிறுமிகள் அவர்களை விரட்டிச் சென்றனர். ஷாஜிதா தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
சில நிமிடங்களில் நிஷாவும் வந்து விட்டாள். ஷாஜிதாவுக்குப் பக்கத்தில் அதே கல்லில் அமர்ந்தாள். ஷாஜிதா எதுவும் பேசாமல் அந்த சிறுமிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். நிஷாவுக்குப் புரிந்தது. அவள் தின்பண்டம் எதுவும் வாங்கப் போவதில்லை. அவளிடம்தான் காசு இல்லையே. எல்லோரும் தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிடுவதை பார்ப்பதைத் தவிர்க்க எண்ணி கீழே கிடந்த சிறு குச்சியை எடுத்து மனலில் பொம்மை வரைந்துகொண்டிருந்தாள். பொம்மை என்றால் மிகவும் எளிமையான பொம்மை. ஒரு சிறிய வட்டம். அதுதான் தலை. அதிலிருந்து கீழ்நோக்கி ஒரு கோடு. அதுதான் உடல். அதன்கீழே ஆங்கில எழுத்து V ஐ தலைகீழாக வரைந்ததுபோல இரு கோடுகள். அது கால்கள். தலையும் உடலும் சேருமிடத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரு கோடுகள். கைகள்.
ஷாஜிதா நிஷாவைக் குனிந்து பார்த்தாள். அவள் நிமிரவே இல்லை. முகத்தில் ஏக்கச்சாயல் படிந்திருந்தது. மும்மரமாக பொம்மைகள் வரைந்து கொண்டிருந்தாள்.
“நிஷா..”
“ம்ம்..” தலையைத் தூக்காமலே சொன்னாள்.
“இங்க பாரு.. ”
நிஷா தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.
“டொண்டொடொய்ய்ய்ய்ய்ங்…”
என்று தனது பாவாடையின் பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துப் பிரித்தாள் ஷாஜிதா. அதற்குள் காலையில் வாங்கிய பம்பாய் மிட்டாயின் ஒரு பகுதி மிச்சமிருந்தது. ஒரு பக்கத்து மீசையை சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்திருக்கிறாள். நிஷாவுக்கு முகமெல்லாம் சிரிப்பு. ஆளுக்கு கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டனர். அன்று மதிய உணவு இடைவேளையிலும் ஷாஜிதாவின் உணவை இருவரும் பரிமாறிக் கொண்டனர். அந்த சனியன் செய்த வேலையால் நிஷாவின் சாப்பாடு காலையில் கொட்டிப்போய் விட்டதே.
மாலையில் ஷாஜிதாவுக்கு முன்னமே நிஷா வந்து பள்ளியின் கதவருகே நின்றிருந்தாள். ஷாஜிதா அவளைப்பார்த்து சிரித்தாள். நிஷா சிரிக்கவில்லை. அவள் முகமெல்லாம் வாடியிருந்தது. அழுது கொண்டிருப்பதுபோல இருந்தது. கன்னங்களில் கண்ணீரின் சுவடு தெரிந்தது.
“என்னளா ஆச்சு..”
“தீதி அந்த மணிகண்டன் என்னோட பென்சில தரமாட்டேங்குறான்..”
“நீ எதுக்கு அவங்கிட்ட குடுத்த..”
“இல்ல தீதி.. ஓடி வரும்போது பேக்குல இருந்து பாக்ஸ் கீழ விழுந்துடுச்சு.. அதுலர்ந்த பென்சில் எடுத்துட்டு தரமாட்டேங்கிறான்.”
மணிகண்டன் ஐந்தாம் வகுப்பு. பள்ளியிலேயே பெரிய சண்டியர். இரட்டை வால். தூரத்தில் மணிகண்டனும் அவனது நண்பனும் மிளகாய்த்தூள் பூசிய மாங்காய்த் துண்டுகளைக் கடித்துகொண்டு இருந்தனர். ஷாஜிதா அவனருகில் சென்றாள். நண்பர்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசி நக்கலாக சிரித்துக்கொண்டனர்.
“டேய்.. ஏண்டா எந்தங்கச்சி பென்சில எடுத்த..?”
“கீழ கெடந்துச்சு எடுத்தேன்.. அதுல ஒந்தங்கச்சி பேரு எழுதிருக்கா.. போடி..”
சட்டென்று அவனது சட்டையைப் பிடித்து இழுத்தாள் ஷாஜிதா. இதை எதிர்பார்க்காத மணிகண்டன் தடுமாறிப்போனான். ஷாஜிதாவின் மூர்க்கத்தைப் பார்த்து பக்கத்திலிருந்தவன் பயந்து ஓடினான். மணிகண்டனும் ஷாஜிதாவும் தலைமுடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டனர். மனிகண்டனைக் கீழே தள்ளி அவன்மீது ஏறி அமர்ந்து அவன் முகத்தில் நகத்தால் பிராண்டினாள். அவனது சட்டைப்பையிலிருந்து பென்சிலை வலுக்கட்டாயமாக எடுக்க முயன்றாள். அவனது சட்டைப்பை பர்ர்ர்ரென்று கிழிந்து அவள் கையோடு வந்தது. முதலில் தடுமாறிய அவன் சட்டென சுதாரித்தான். திடீரென்று மண்ணை எடுத்து ஷாஜிதாவின் முகத்தில் வீசி, அவளைத் தள்ளிவிட்டு எழுந்து ஓடினான் மணிகண்டன். நல்லவேலையாக அவள் கண்களை மூடிக்கொண்டதால் தப்பித்தாள். பென்சில் போனது போனதுதான்.
சோகத்தோடு திரும்பிவந்தாள் ஷாஜிதா. அவள் பல்லில் மண் படிந்து பழுப்பு நிறமாய் இருந்தது. தலையெல்லாம் கலைந்து முகமெல்லாம் மண்ணாக இருந்தது. புறங்கையால் முகத்தைத் துடைத்துக்கொண்டே வந்தாள்.
“தீதி.. உன் சட்டையப்பாரு..”
நிஷா சொன்னதும்தான் கவனித்தாள். சட்டையின் நெஞ்சு வயிற்றுப் பகுதியெல்லாம் மஞ்சள் மஞ்சளாய் மாங்காய்க்கரை.
“ஐயையோ.. அம்மா பாத்தா அடிக்குமே.. நாளைக்கும் இததான் போடனும். இப்ப என்னளா பன்றது..? ” ஷாஜிதா பதறினாள். நிஷாவும்தான். இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் சீருடை மாற்றவேண்டும் என்பது அம்மாவின் உத்தரவு. இன்று காலையில்தான் மாற்றியிருந்தாள்.
‘’இருக்கறதே ரெண்டு செட்டுதான். ஒன்னு அழுக்குல கெடக்கு… இப்ப என்ன பன்றதுன்னு தெரியலையே..’’
ஷாஜிதா குழம்பினாள். அம்மா திட்டுவாள் என்ற பயத்தில் கண்கள் கலங்கிப்போயின. அவளைப்பார்த்து நிஷாவும் கலங்கினாள். இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அமைதியாக வந்து கொண்டிருந்தனர். அம்மா எப்படிப் பேசுவாள் என்று ஷாஜிதாவின் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
“தெனோம் துணிமாத்த எங்க போறது.. சோப்பு என்ன சும்மாவா வருது..? பகுமானமா வாழ்ற மாதிரி உங்கொப்ப என்ன சம்பாதிச்சு வெச்சுட்டா போயிருக்காரு..?”
திடீரென நிஷா பரபரப்படைந்தாள்.
“தீதி.. ஒரு ஐடியா.. இப்ப வீட்டுக்கு போனதும் தொவச்சுப் போட்டர்லாம். அம்மா வேல முடிஞ்சு வர்ரக்கு எட்டு மணியாகும்ல. அதுக்குல்ல காஞ்சிடும். அம்மாக்கு தெரியாதுல்ல.”
இந்த யோசனையால் ஷாஜிதாவின் முகம் சட்டென பிரகாசமடைந்தது. இருவரும் மகிழ்ச்சியுடன் வேகவேகமாக வீட்டை நோக்கி நடந்தனர். வீட்டை நெருங்கும்போது ஆர்வமிகுதியில் நடை, ஓட்டமாக மாறியது. எப்போதும் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுத்தான் போவாள் அம்மா பர்வீன். பக்கத்து வீட்டுக்கு ஓடினாள் நிஷா. வெகுநேரமாகியும் திரும்பி வராததால் ஷாஜிதாவும் அங்கே சென்றாள். கையில் சாவியுடன் கதவில் சாய்ந்தபடி நின்றிருந்தாள் நிஷா. உள்ளே எதையோ ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ஷாஜிதா அருகில் சென்று பார்த்தாள்.
அந்த வீட்டுக் குழந்தை தரையில் அமர்ந்து ஒரு லட்டை சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. அதன் சிறு சிறு துகள்கள் தரையில் சிதறியிருந்தன. நிஷாவைப் பார்க்க பாவமாக இருந்தது ஷாஜிதாவுக்கு. அப்பா இருக்கும் வரை தினமும் இரவு வரும்போது விதவிதமான பலகாரங்கள் கொண்டு வருவார். டைனிங் டேபிள் அருகில் ஒரு  மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பக்கெட் கைக்கெட்டும் உயரத்தில் வைக்கப்பட்டு இருக்கும். எப்போதுமே அது பலகாரங்களால் நிரம்பியே இருக்கும். நன்றாக சாப்பிட்டுப் பழகிய குழந்தைகள். இருந்தாலும் என்ன செய்ய..? இப்போது அதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.
பரபரப்பாக வேலை செய்தால் ஷாஜிதா. பிளாஸ்டிக் வாளியில் பாதியளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தாள். அதில் கொஞ்சம் சோப்பு பவுடரைப் போட்டு அவளது அழுக்கடைந்த சட்டையை முக்கிவைத்தாள்.
“கொஞ்சநேரம் ஊரட்டும்..”
கதவோரம் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிஷா திடீரென்று ஓடிவந்தாள்.
”தீதி அம்மா வர்ராங்க..”
“அல்லாவே..!!”
ஷாஜிதாவுக்கு திக்கென்று ஆனது. இன்று வேலை நேரத்திலேயே முடிந்து விட்டது போல. தெருவின் முனையில் அம்மாவைப் பார்த்துவிட்ட நிஷா பதட்டமடைந்தாள். கோபம் வந்தால் கன்னாபின்னாவென்று அடித்து விடக்கூடியவள்தான் பர்வீன். வீட்டு வாசலில் உள்ள முருங்கை மரத்திலிருந்து ஒரு கிளையை உடைத்து விளாசிவிடுவாள்.
மற்ற அம்மாக்களைப்போல அவளும் இயல்பாகத்தான் இருந்தாள். அப்பா இறந்த பிறகு ஏற்பட்ட மன உலைச்சல். அவளை அப்படி மாற்றிவிட்டது. எந்தக் கவலையுமில்லாமல் ஒரு ராணிபோல வாழ்ந்தவள். குடும்ப பாரத்தைச் சுமப்பதற்காக வேலைக்குப் போகவேண்டிய நிர்பந்தம்.
வாரம் முழுதும் மாடா பாடுபட்டாலும் கிடைக்கிற வருமானம் சாப்பாட்டுக்கே போதல. மேற்படி செலவுகளுக்கு வாரவட்டி, மாசவட்டினு கடன் வாங்கிதான் பொழப்பு ஓடுது. குழந்தைகளுக்கு வாய்க்கு பிடிச்சமாதிரி சமச்சுப் போட முடியல. ஒரு நல்ல துணிமனி போட்டுப்பாக்க முடியல.
ஆண்டவன் ரெண்டையும் பொட்டப்புள்ளையா கொடுத்துட்டான். கொழந்தைங்க பெருசானா அதுங்களுக்கு நல்லது கெட்டத எப்படி பன்னப் போறோம்ங்கிற பயம் வேற உறுத்திட்டே இருக்கு. எதிர்காலத்து மேல நம்பிக்கையில்லாத நிலை. இதையெல்லாம் நெனச்சா ராத்திரிகள்ல தூக்கம் வர்ரதில்ல. கண்ட கண்ட பலா மூசிபத்தெல்லாம் நெனப்புல ஓடுது. சைத்தான் மாதிரி கொட்டக் கொட்ட முழிச்சிட்டே படுத்திருக்க வேண்டியதா இருக்கு. தொண்டை அடச்சி துக்கம் வரும். இமை நெரஞ்சு கண்ணீர் வரும், கடசியா தூக்கம் வரும். ஆனா எப்ப வரும்னு தெரியாது. அவ எப்ப தூங்குவான்னு அவளுக்கே தெரியாது.
அதுபோக வேலைக்கு போற எடத்துல புருசன் இல்லாதவங்கிற எளக்காரத்துல மத்த ஆம்பளைங்களோட அனுகுமுறைய சொல்லவா வேனும். அதை எதிர்கொள்ள அவள் தன்னை கோபக்காரியா, எடுத்தெரிந்து பேசும் சுபாவம் கொண்டவளாக, மூர்க்கமானவளாக அவளை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிடுச்சு. அவ சிரிச்சா அவ்வளவு அழகா இருக்கும். ஆனா இப்பெல்லாம் அவ சிரிக்கிறதே. இப்ப ஊரு இவளுக்கு வெச்ச பேரு சிடுமூஞ்சி பர்வீனு.
“போச்சு.. போ.. அம்ம்மாட்ட இப்ப அடிவாங்கப்போறோம்..”
கை விரல்களை மேலும் கீழும் உதறிக்கொண்டு சொன்னாள் நிஷா..
“சீக்கிரமா வாளா.. இத ஒளிச்சு வெச்சர்லாம்..” ஷாஜிதா அவசரப்படுத்தினாள்.
இருவரும் சேர்ந்து அந்த வாளியை தரதரவென்று இழுத்துச்சென்று குளியலரை அருகே அழுக்குத் துணிகள் போட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய கூடைக்கு அருகில் வைத்தனர். அதன் மீது சில அழுக்குத் துணிகளைப் போட்டு வாளி தெரியாதபடி மூடி வைத்துவிட்டு நகர்வதற்கும் அம்மா உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.
“என்ன பன்னிட்டு இருக்கீங்க. ரெண்டுபேரும்..?” கேட்டபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் பர்வீன். நேராக உடை மாற்ற உள் அறைக்குள் சென்றாள்.
“தீதி தண்ணி சிந்தியிருக்கு பாரு.. அம்மா வெளிய வர்ரக்குள்ள தொடச்சு விடு..”
வாளியை இழுக்கும்போது தளும்பிய தண்ணீர் தரையில் கோடுபோட்டது போல சிந்தியிருந்தது. பக்கெட்டை மூடியிருந்த ஒரு அழுக்குத் துணியை எடுத்து அதை துடைத்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் போட்டாள் ஷாஜிதா. ’அப்பாடா..’ என்றிருந்தது நிஷாவுக்கு.
முகம் கழுவிவிட்டு நைட்டிக்குள் நுழைந்து கொண்டு வெளியே வந்தாள் பர்வீன். சிறுமிகள் இருவரும் அவளைப் பார்த்து சிரித்தனர். அது செயற்கையாக இருந்தது.
”என்ன ரெண்டுபேரும் ஒரு மாதிரியா இருக்கீங்க..? ஏதோ வால்த்தனம் பன்னிட்ட மாதிரி முழிக்கறீங்களே..?”
“ஒன்னுமில்லம்மா..” கோரசாக சொன்னார்கள் இருவரும்.
அன்றைய இரவு நிஷாவுக்கு தூக்கமே வரவில்லை. அம்மாவின் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தாள். அவள் தலைமுடியை வருடியபடி பர்வீன் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள். அருகில் படுத்திருந்த ஷாஜிதா தூங்கிப் போயிருந்தாள். அவளது முதுகில் தாளம் போடுவதுபோல பர்வீன் தட்டிக் கொடுத்துக்கொண்டு இருந்தாள். இரவு தோசைக்கு சட்னி அரைக்க பொட்டுக்கடலை வாங்க கடைக்குப் போன ஷாஜிதா மீதம் ஐந்து ரூபாய் நாணயத்தைத் தொலைத்து விட்டாள்.
”நான் ஒவ்வொரு ரூபாய்க்கும் நாய் மாதிரி பாடுபடறேன் அஞ்சு ரூபாய தொலச்சிட்டு வந்து நிக்கிறயே உனக்கெல்லாம் கொஞ்சமாச்சி அறிவிருக்கா..” என்று ஆரம்பித்த பர்வீன் கத்தோ கத்தென்று கத்தித் தீர்த்தாள். கோபத்தில் முதுகில் ஒரு அடிவேறு வைத்துவிட்டாள். அடி வாங்கிய துக்கத்தில் அழுது அழுது களைப்படைந்த ஷாஜிதா தூங்கிப் போய் விட்டாள்.
அவளை அடித்துவிட்டதில் பர்வீனுக்கும் வருத்தம்தான். ’அவரு இருந்திருந்தா புள்ளைய அடிக்க விட்டிருப்பாரா,,?’ தன்னைத்தானே நொந்துகொண்டாள். வலது கண்ணோரம் திரண்டிருந்த ஒருதுளி நீர் வெளியே வர துடித்துக் கொண்டு இருந்தது. இமைகள் அதைத் தடுத்துக்கொண்டு இருந்தது.
கடந்தகால நினைவுகள் அவள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தன. திருமணமான எட்டு வருடங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தன. பாசமான கணவன். குழந்தைகள் என்றாள் அவருக்கு உயிர். உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார். ஒரு வார்த்தைகூட குழந்தைகளை அதிர்ந்து பேசியதில்லை. என்னையும் பேச அனுமதித்ததில்லை. நிறைவான வருமானம். நிம்மதியான வாழ்க்கை என்று நல்லபடியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. சொந்த வீடு வாசல், நகநட்டு, புள்ளைங்களுக்கு நல்ல ஸ்கூல்ல படிப்பு ஒன்னுக்கு ரெண்டு வண்டி, எல்.ஈ.டி டீ.வி, பிரிட்ஜ், ஏ.சி. வாசிங் மெசின்னு சொந்த பந்தமெல்லாம் பொறாமப்படற மாதிரியான வாழ்க்கதான்.
ஆனாலும் என்ன, நகர்ப்புற வாழ்க்கை முறைக்கே உண்டான சீட்டுக்கட்டு பொருளாதார வாழ்க்கை. மேல்புறம் பளபளப்பாக இருந்தாலும் அடித்தளம் பலவீனமாக இருக்கும். மேல்புற பூச்சுக்கு பங்கம் வராமல் எப்போதும் பளபளப்பாக தெரியும்படி காப்பாற்றிக் கொள்வதே இங்கு கௌரவம் என நாங்கள் நம்பிக்கொண்டு இருந்தோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் லேசாக இரும ஆரம்பித்தார். சாதாரன சளி இருமல் என்று கவனமில்லாமல் இருந்து விட்டோம். நாளாக நாளாக இருமல் அதிகமானது. எந்த மருந்துக்கும் கட்டுப்படாத தொடர் இருமல். கழிப்பறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டு இருமுவார். மணிக்கணக்கான தொடர் இருமலின் முடிவில் வாந்தி வருவதுபோல இரத்தம் வரும். முழுதும் துவண்டுபோய் வெளியே வருவார். ஆமா.. சிகிரெட்ட குடிச்சா பரவால்லா.. பாக்கெட் பாக்கெட்டா தின்னா..? வேற என்ன ஆகும்..?
டாக்டரைப் பார்க்க தனியாகவே போய் வருவார். என்னதான் பிரச்சனை என்று யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் அவருக்கு வந்திருப்பது ஏதோ பெரிய வியாதிதான் என்று அவரது முகத்தைப் பார்த்து உனர்ந்துகொள்ள முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த வியாதி அவர் உடலை உருக்கியது. நாளாக நாளாக எலும்புக்கூட்டுக்கு தோல் போர்த்தியதுபோல ஆகிப்போனார். கன்னங்கள் ஒட்டிப்போய் பற்கள் துருத்திக்கொண்டு அடையாளமே தெரியாதபடி இளைத்துப்போனார்.
மனதுக்குள் ஏதோ ஒருவித பயம் பரவ ஆரம்பித்தது. ஒருநாள் உண்மை வெளிவந்தது. தொண்டைக்குக் கீழே நுரையீரலுக்கு மேலே ஒரு புற்றுக்கட்டி இருந்ததை அவர் எங்களிடம் மறைத்தார். ஆனால் மருத்துவ அறிக்கை சொல்லிவிட்டது. இரண்டே மாதம்தான். ஒருநாள் இரவில் கழிப்பறையிலேயே இறந்து கிடந்தார். சீட்டுக்கட்டு பொருளாதாரம் சடசடவென சரிய ஆரம்பித்து இப்போது அதாள பாதாளத்தில் வந்து நிறுத்திவிட்டது.
எங்கேயோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிஷாவின் கன்னத்தில் விழுந்த ஒரு சொட்டுக் கண்ணீர் அவளை சுயநினைவுக்கு கூட்டி வந்தது. கன்னத்தைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து பர்வீனின் முகத்தைப் பார்த்தாள். அவள் கண்களைத் துடைத்துக்கொண்டு நிஷாவைப் பார்த்து செயற்கையாக சிரித்தாள். நிஷா சிரிக்கவில்லை. துக்கத்தை புன்னகையால் மறைக்கும் பொய்த்தன்மை குழந்தைகளுக்கு கிடையாது.
“மணி எட்டு இருவதாச்சு.. இன்னும் கெளம்பாம என்னளா பன்ற..?” ஷாஜிதாவைப் பார்த்து கத்திக்கொண்டே தன் செருப்புகளை அணிந்தாள் பர்வீன். எட்டரை மணி பஸ்சை அவள் பிடிக்கவேண்டும். அப்போதுதான் ஒன்பது மணிக்குள் கம்பெனிக்கு போக முடியும். அந்த அவசரம் அவளுக்கு. ஷாஜிதாவோ பர்வீன் வெளியே போகும் வரை கிளம்ப முடியாத நிலை. ஏனென்றால் சட்டைதான் தண்ணீரில் ஊரிக்கொண்டு இருக்கிறதே. அழுக்குச் சட்டைதான் போட்டுச் செல்லவேண்டும். அதை பர்வீன் பார்த்தாள் என்றால் அவ்வளவுதான்.
”ரெண்டுபேரும் சீக்கிரம் கெளம்பி போங்க.. அம்மா போய்ட்டு வறேன்.. ” சொல்லிக்கொண்டே வாசலைத் தாண்டி நடந்தாள் பர்வீன். ஷாஜிதாவுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. குடுகுடுவென்று ஓடிச்சென்று அழுக்குக் கூடையில் இருந்த துணிகளைக் கலைத்து அவள் சட்டையைத் தேடி எடுத்தாள். சுருக்கம் விழுந்து கந்தலாக இருந்தது. ஒருவித நாற்றம் மூக்கைக் குடைந்தது. ’இதத்தான் போட்டுட்டு போகனும்.. வேற வழி இல்ல..’ மனதுக்குள் நினைத்துக்கொண்டே அதை அணியப்போனவள்,
“தீதி..” என்ற நிஷாவின் குரலைக்கேட்டு நின்றாள். நிஷாவின் முகமெல்லாம் புன்னகை. அவள் எதையோ முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருக்கிறாள்.
“என்னளா அது..? காட்டு..”
“டொண்டொடொய்ய்ய்ய்ங்ங்ங்ங்…” என்றபடி முதுகுக்குப் பின்னாலிருந்து யாஷிராவின் சட்டையை எடுத்துக் காட்டினாள். அது பளிச்சென்று துவைக்கப்பட்டிருந்தது.
“ஏ.. இது எப்படி..? அம்மா தொவச்சுதா..?” மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த குரலில் ஷாஜிதா கேட்டாள்.
“இல்ல.. அம்மா தூங்கின பின்னால நாந்தான் தொவச்சேன்..”
எதையோ சாதித்துவிட்டதுபோல முகத்தை பெருமிதத்துடன் வைத்துக் கொண்டு சொன்னாள் நிஷா. யாஷிராவுக்கு கண்கள் கலங்கிப்போனது. ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டாள்.
“ஏ நிஷா.. இரு ஒனக்கு ஒன்ன காட்டறேன்..” எனச்சொல்லி உள்ளே சென்று அவளது புத்தகப்பைய எடுத்து வந்தாள். நிஷாவை கண்களை மூடச்சொல்லி அதிலிருந்து சில பொருட்களை எடுத்தாள்.
“இப்ப கண்ண தொறந்து பாரு… டொண்டொடொய்ய்ய்ய்ங்ங்ங்…”
நிஷா கண்களைத் திறந்து பார்த்தாள். ஷாஜிதாவின் கைகளில் ஒரு முழு பென்சிலும், ஒரு லட்டும் இருந்தது.
“ஹையா… தேங்க்ஸ் தீதி…” மகிழ்ச்சியில் நிஷாவின் கண்கள் அகலமாக விரிந்தன.

நேற்று இரவு மீதிச் சில்லரை எங்கே காணாமல் போனதென்று நிஷாவுக்கு புரிந்திருக்கலாம், புரியாமலும் இருந்திருக்கலாம். ஆனாலும் ஷாஜிதா அந்த பம்பாய் மிட்டாய் பெரியவருக்கு கொடுக்க ஒரு ரூபாயை பத்திரமாக வைத்திருக்கிறாள்.

Friday, 12 February 2016

காதலறியா காதலர்கள் ... (12.02.2012)

ஆகப்பெரிய முயற்சிகளின் மூலமாக
அடியோடு மறந்திடவே நினைக்கிறேன்
தோற்றுப்போன என் காதலையும்
தோற்கடித்துப் போன என் தேவதையையும்...

எப்படியெனினும் ஏதாவதொரு வகையில்
நினைவுபடுத்தியே போகிறது
வருடாவருடம் வரும் காதலர் தினங்களும்
வளையவரும் காதலறியா காதலர்களும்...

இதுபோன்ற ஒரு கருப்பு தினத்தில் தான்
இதுபோன்ற ஒரு காதலர் தினத்தில் தான் -அவள்
காரணங்கள் ஏதுமின்றி காணாமல் போயிருந்தாள்
என் உண்மை காதலை 'காணாமல்' போயிருந்தாள் ...


எப்போதும் போலவே பார்த்தாய்
எப்போதும் போலவே சிரித்தாய்
எப்போதும் போலவே தோள் சாய்ந்தாய்
அதற்கு முதல் நாள் வரையிலும் .

எப்போது நீ நடித்தாய்?
இப்போதும் புரிபடவே இல்லை ...


எப்படி உன்னால் மட்டும் ஒரே நேரத்தில்
ஒருவன் காதலை கொன்று
ஒருவன் காதலை காப்பாற்ற முடிந்தது?

காதல் தெய்வீகம்
காதல் புனிதம்
காதலே கடவுள்
காதலே வாழ்க்கை
யாருக்கு ?
தோற்றுப்போன எனக்கா?
தோற்கடித்துப் போன உனக்கா?

அந்த நாள் காலையிலும்
சலனங்கள் ஏதுமில்லாமல்
இயல்பாகவே நீ இருந்தாய்
இல்லையில்லை நடித்துக்கொண்டிருந்தாய் ...

ஐந்து மணி வாக்கில் என் அலைபேசி மணி ஒலித்தது
ஐந்தாறு வார்த்தைகளில் நீ சொன்னாய்

"நான் காதலித்தவனை கரம் பிடிக்கிறேன்
எனக்கான வாழ்க்கையினை நானே தீர்மானிக்கிறேன்
மன்னித்துவிடுங்கள் அப்பா "...

ஆகப்பெரிய முயற்சிகளின் மூலமாக
அடியோடு மறந்திடவே நினைக்கிறேன்
தோற்றுப்போன என் காதலையும்
தோற்கடித்துப் போன என் தேவதையையும்...