Tuesday, 26 April 2016

சக்கிலிச்சினு சொன்னா செருப்பால அடிப்பேன்...(04.11.2013)



அடியே மகமாயி 
ஆத்தா திரிசூலி 
அடி மனசு பதறுதடி 
அடிவயிறு எரியிதடி 


கோவில் குளம் போயிவந்து 
அரசமரம் சுத்திவந்து 
ஆருவருசம் தவமிருந்து 
பெத்தெடுத்த ஒத்தப்புள்ள 


பேச மறுக்குதடி 
பேயடிச்ச மாதிரி இருக்குதடி 


மூணுநாளா காச்சலில -என் 
மொத்த ஒடம்பும் கொதிச்சபோதும் 
ஒருநாளும் ஓய்வெடுக்க 
வீட்டோட இருக்கவில்ல 


அய்யா கோவக்காரரு 
கண்டபடி திட்டிருவாருன்னு 
காளிகோயில் பூசாரிகிட்ட செரகடிச்சு 
கசாயம் வச்சு குடிச்சுட்டு 
வேலைக்கு போயிட்டுதான் இருந்தேன்   


இன்னைக்கு காலைலிருந்து
வயித்தாலபோகுதுன்னு 
கொடலப்போரட்டி குப்புன்னு 
வாந்தியும் வருதுன்னு 
இன்னைக்கு ஒருநாள் மட்டும் 
அய்யா வீட்டு வேலைக்கு 
எம்புள்ளைய அனுப்பிவச்சேன் 


ஏழுமணிக்கு வந்த புள்ள 
எம்மூஞ்சிய பாக்க பிடிக்காம 
இழுத்துப் போத்திட்டு கெடக்காளே  


தாவணி கிழிஞ்சிருக்கு 
தலைமுடியும் கலஞ்சிருக்கு 
என்ன ஆச்சோ ஏது ஆச்சோ 
என் குலைநடுங்கி தவிக்குதடி 


சட்டுபுட்டுன்னு வேலைய முடிச்சு 
சீக்கிரமா வந்திருன்னும் 
அஞ்சுமணிக்கு முன்னால 
அங்கிருந்து வந்திருன்னும் 
அடிக்கடி சொன்னேனே 


அய்யா ஒருமாதிரின்னு 
ஐயோ சொல்லாம விட்டேனே 
தெரிஞ்சே எம்மக வாழ்க்கையில
தீய வச்சு போட்டேனே 


ஐயோ பாதகத்தி 
வாயத்தொறந்து பேசித்தொலை 
என்ன எழவக் கொண்டுவந்தே 
இப்பவாச்சும் சொல்லித்தொலை 


கருப்பாயி மருத்துவச்சி கிட்ட 
கலக்கிற மருந்து வாங்கித்தரேன் 
காதும் காதும் வச்சமாரி 
கருமத்த கழுவிடலாம்


ஏம்மா என்னென்னமோ பேசற 
எனக்கு ஒண்ணுமில்லம்மா 
ஏம்மா இப்படி நினைக்கிற 
நான் நீபெத்த பொண்ணும்மா  


வயித்துக் கஞ்சிக்கு குறையிருக்கு -ஆனா 
வீரத்துக்கு குறையில்லம்மா 
தகரக் கொட்டகைல வாழ்ந்தாலும் 
தன்மானம் கொறயிலம்மா


அய்யாவோட பேரன் 
கல்லுதட்டி விழுந்தான்னு 
ஐயோன்னு பதறிப்போயி
அலுங்காம தூக்கிவிட்டேன் 


அந்தநேரம் அங்கவந்த அய்யா 
கொழந்தய ஏன் தொட்டேன்னு 
கன்னத்துல அறஞ்சாறு
முடிய பிடிச்சு இழுத்து 
வக்கப்போருல தள்ளுனாரு 


கருவேலமுல்லுல சிக்கி 
தாவணியும் கிழிஞ்சுபோச்சு 
அப்பவும் சகிச்சுக்கிட்டு 
அமைதியாத்தான் நின்னிருந்தேன் 


உனக்கு எவ்வளவு தைரியம் 
சக்கிலிச்சி நாயேன்னு 
சத்தமா திட்டினாரு 


ஒசந்த சாதிக்காரங்க 
அப்படிதான் பேசுவாங்கடி 
கீழ்சாதில பிறந்த நாம 
கண்டும் காணாம போயிடனும் 


என்னால அப்படி போக முடியலம்மா 
சக்கிலிச்சின்னு சொன்னான் -நான் 
செருப்பால அடிச்சிட்டேன் 


சகிச்சுக்கிட்டே வாழ்ந்து
என்னத்த சொகங்கண்டோம் 
பாடுபட்டுத் திங்க 
ஒடம்புல தெம்பிருக்கு 
பாட்டாளிக்கு துனைநிக்க 
செவ்வியக்க அமைப்பிருக்கு 
கேவலப்பட்டே வாழறதவிட 
எதிர்த்து நின்னு சாகலாம் 


இனிஎவனா இருந்தாலும் 
சக்கிலிச்சின்னு சொன்னா
செருப்பால அடிப்பேன்....

No comments:

Post a Comment