ஈரடி இடைவெளியில் அமர்ந்திருந்தோம்
“அட..!! என்ன இன்னைக்கு அட்டகாசமா இருக்க?" என்றேன்.
வெகுளிப் பார்வையை வீசியெறிந்து திரும்பிக்கொண்டு சிரித்தாள்.
அவள் கூந்தலில் இருந்த பூக்களில் ஒன்று என்னைப் பார்த்து கேட்டது
"இந்தப்பூ மட்டும் எப்படி வெட்கப்படுகிறது…?" என்று
"பாயாசம் செஞ்சிருக்கேன் சாப்பிடறியா?
"உன் சுட்டுவிரல் முக்கிக்கொடு சர்க்கரையே தேவையில்லை..”
பாயாசக் கோப்பைகளை தாங்கி வருகிறாள் பதினொன்றரை மாற்றுத் தங்கச்சிலை.
"பாயாசத்துக்கும் உனக்கும் ஒரேஒரு வித்தியாசம்தான் இருக்கு என்னன்னு சொல்லவா?"
"ஹ்ம்ம்...!! சொல்லு பாப்போம் "
"சர்க்கரை முந்திரி ஜவ்வரிசி எல்லாம் பாலில் கலந்தால் அதுபாயாசம்"
"பாலாடைக்கட்டி எடுத்து கண்ணாடிக் கோப்பையில் கொட்டி
மேலாடை உடுத்தினால் அது நீ "
"அய்யே ..!!"
பற்கள் பளிச்சிடச் சிரிக்கிறாள்..
"ஏய்…! மல்லிகைப்பூக்களை ஏன் மெல்கிறாய்..?”
“இல்லையே….” என்று வாயைத்திறந்து காட்டினாள்.
ஒ..!! உன் உதடுகளுக்கிடையே நீ சிறைப்பிடித்திருக்கும் பற்களா அவை ?"
"போதும் போதும் குளிருது…"
“என்ன கட்டிப்பிடிச்சுக்கோ குளிராது…”
செல்லக் கோபத்தில் நடித்து என் கனத்த தோளில் அடித்தாள்.
வலிப்பது போல் நடித்து விலகி நான் ஓட,
பிடிப்பது போல் குதித்து அவள் என்னைத் துரத்த
நான் தடுப்பது போல் தடுத்து அவள் தங்கக்கரங்கள் பிடிக்க....
முதல்ஸ்பரிசம்...!!!
ஐந்தடி உயரம் வளர்ந்துவிட்ட ஆறுமாதக் குழந்தையா நீ?
ஒரு பட்டாம்பூச்சியைப் பிடிப்பது போல் மென்மையாக பிடித்த போதும்
சுட்ட பொன் போல் சிவந்தது போனதே உன் செந்தாமரைகரங்கள்.
பூ உரசினாலே புன்னாககூடிய தேகமுடையவள்
என் முரட்டுக்கை உரசியதை எப்படித்தாங்குவாள்?
உனக்கான உணவுமட்டும் உண்ணும் முன்னமே செரித்துவிடுமோ?
இவ்வளவு மெல்லிய உடலை எப்படிப் பெற்றிருக்கிறாய் நீ?
"ஹே... இங்கபாருஎப்படிசிவந்துருச்சுன்னு "
கணக்கு வாத்தியாரிடம் கோள் சொல்லும்
குழந்தைபோல் கொஞ்சல் மொழியில் பேசினாள்
"போதும் போதும் , பேச்ச நிறுத்து...!!”
” சரி நீ பேசு…., தேன் சிட்டுகள் பேசிக்கேட்டதில்லை "
“ம்க்கும்…, என்ன பேசறது…?” உதடு சுழித்தாள்
“சரி என் கேள்விக்கு பதில் சொல்,
ஒரு கையில் அழகிய கவிதை
இன்னொரு கையில் அதை எழுதிய கவிஞன்
எதைக் கொள்வாய்…? எதைக் கொல்வாய்…?"
”கொல்வதில் உடன்பாடில்லை, இரண்டையும் கொள்வேன்.”
” அந்த அழகிய கவிதை எனதென்றால்?
அந்த அப்பாவிக் கவிஞன் நானென்றால்? ”
சிரிது நேரம் யோசித்தவள் செவ்விதழ் திறந்தாள்.
“அப்போதும் கொள்வேன்..”
ஒரு காட்டருவி தொண்டையில் துவங்கி
அடிவயிற்றில் விழுந்து அலையடிப்பது போன்று
ஏதோ ஒரு உணர்வு என்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.
தயங்கித் தயங்கி முன்னேறி அவளருகே சென்றேன்.
சோபாவில் சாய்ந்திருந்த சிங்காரச் சுந்தரிக்கு சிலஅடிகள் முன்னே நின்றேன்.
சொல்லிவிட்டேன்
" நான் உன்னைக் காதலிக்கிறேன்…! "
கேட்டுவிட்டேன்
"நீயும் என்னைக் காதலிக்கிறாயா…!?"
சற்றே அதிர்ந்தாள் முகில் மறைக்கும் முழுமதிபோல் முகம் தாழ்ந்தாள்
மௌனம் .!!
பலத்தமௌனம் ..!!!
அடிஅழகுப்பிசாசே…!!
'ஆம்' என்று சொல்லி எனக்கு சிறகுகள் கொடு.
இல்லை 'போ' என்று சொல்லி என்னை சிலுவையிலிடு
அமைதியாய் இருந்து உயிர் அறுக்காதே…
உன் மௌனத்தின் சப்தத்தில் என் காது கிழிக்காதே
உன் வாய்திறவா யுத்தத்தில் என் உயிரைப் பறிக்காதே…
எந்தச்சலனமுமின்றி தலை நிமிர்ந்தாள்.
எந்தச்சமிக்கையுமின்றி கண்பார்த்தாள்
பெண்களின் பார்வை மொழி
புரிய இவ்வுலகில் ஏதடி வழி
சுடிதாரில் நுழைந்து கொண்ட சொக்கத்தங்கமே பேசு.
செவ்விதழ் வாய்திறந்து சர்க்கரை வார்த்தை வீசு
குழம்பிக் குழம்பி நான் முழுப்பைத்தியம் ஆகும்முன்
சம்மதம் என்றஒரு நல்ல வார்த்தை சொல்லடி என் கோகிலமே…
கண்களை மூடி தலைகவிழ்ந்தபடியே மௌனம் கலைத்தாள்
”பிடிச்சிருக்கு…!!”
வெட்கத்தால் சிவந்தது சிற்பத்தின் முகமலர்.
பள்ளம் கண்ட வெள்ளம்போல்
என்னுள் நிரம்பிய மகிழ்ச்சியில் மூழ்கி
நான் திணறிக்கொண்டிருக்கிறேன்
கிளையிலிருந்து விடுபட்ட இலையொன்று விழுவதுபோல் மெதுவாக அவளருகே சென்றேன்.
கவிழ்ந்திருந்த முகமதியை இருகைகளால் தாங்கினேன்
நாணத்தில் சிவந்தமுகம் காண எண்ணி தூக்கினேன்
விரல் சப்பும் குழந்தையொன்று
விழிமூடி உறங்குவதுபோல் கண்கள் மூடியிருந்தாள்.
என் இரு கைகளுக்குள் பால்நிலா வெளிச்சம்
நிரம்பி வழிவது போல் உணர்ந்தேன்
பூச்சூடாக் கேசத்திலும் புது வாசனையை உணர்ந்தேன்
பிறைநிலா நெற்றியில் புருவத்தின் மத்தியில்
பாசத்தோடு உதடுபதித்து பருவச்சிலைக்கு முத்தமிட்டேன்.
நெருப்பு தொட்ட குழந்தைபோல் சட்டென விலகிச்சென்றாள்.
வெட்கச் சிவப்பு மறைந்து கொஞ்சம் கோபச் சிவப்பு படர்ந்தது
கலங்கிய கண்களில் 'மை' சற்றே கலைந்திருந்தது.
அடடா...!!
நான் செய்தது சரியா தவறா ? புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன்.
கணநேரம் தடுமாறிப் போனேனோ? கண்ணியம் காக்க மறந்தேனோ?
இனி என்ன செய்வது? எப்படி அவள் முகத்தில் விழிப்பது?
கண்களை முறைப்பாளோ? முகம்பார்க்க மறுப்பாளோ?
'ச்சீ ' என்றே வெறுப்பாளோ? மன்னித்துப் பொறுப்பாளோ ?
உறங்கும் குழந்தையின் கால்களை மிதித்து விட்டதுபோல்
குற்ற உணர்ச்சியில் நான் குறுகி அமர்ந்திருந்தேன்.
தூர விலகி நின்றவள் கோபமாக நிமிர்ந்து பார்த்தாள். வேகமாக அருகில் வந்தாள்.
"அடிக்கத்தான் போகிறாளோ?"
அருகில் வந்து நின்றாள்.தலையைக் குனிந்துகொண்டேன்…,
புயலென வீசிய அவள் மூசுக்காற்றின் வெப்பம்
எனக்கு அனலூடியது. ஒருவித திகிலூட்டியது.
கொத்தாக என்தலைமுடியை பிடித்து குனிந்திருந்த என்னை நிமிர்த்தினாள்.
அவள் கண்களைப் பார்க்க எனக்கு சக்தியில்லை கண்களை மூடிக்கொண்டேன்.
இன்னொரு கையில் என்சட்டையை இறுக்கிப்பிடித்தாள்.
ஆவேசமாய் அவள் இழுக்கையில் அறுந்து விழுந்த சட்டைப் பட்டனொன்று
அவள் வெள்ளரிப்பூ பாதத்தில் விழுந்து தெரித்து சொர்க்கம் சேர்ந்தது.
மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டேன்…!!
பூம்பழமொன்று நழுவி , நிறைந்த பால்குடத்தில் விழுந்ததுபோல்
எள்ளளவும் எதிர்பார்க்காத ஏகாந்த வேளையிலே
என் உதட்டோடு உதடுவைத்து மும்மரமாய் அழுத்திக்கொண்டாள்.
இடம்பெயரும் தாய்ப்பூனை இளம் குட்டிகளைக் கவ்வுவதுபோல்
இதழாலே இதழ்கவ்வி இதழெச்சில் சுவை உணர்த்தினாள்.
எந்தப் பைத்தியக்காரன் எழுதி வைத்தது சுவைகளின் வகை ஆறு என்று ?
கண்களை திறக்க மனமே இல்லை
இறைவா...!!
மூடிய கண்கள் மூடியே போகட்டும் இத்துடனே என்வாழ்வும் முடிந்தே போகட்டும்…
சில நொடிகளுக்குப்பின்
பாலுன்னும் போதே தூங்கிப்போன குழந்தை தாயின் மார்பிலிருந்து
உதடு பிரிப்பதுபோல் மெல்ல உதடுபிரித்தாள் சற்று விலகி நின்று
குறும்புப்பார்வையில் என்னை துளைத்தாள்.
ஏனோ நான் வெட்கப்படுகிறேன் !!
" பழிக்குப்பழி , முத்தத்துக்கு முத்தம் " எனக்கூறி கண்ணடித்துச் சிரித்தாள்
" யாசர்......., யாசர்.........., மணி ஏழாகப்போகுது எந்திரிப்பா…"
அம்மாவின்குரல்…!!
கண் திறந்து பார்த்தேன் எதிரே அம்மா நின்றிருந்தார்.
ச்சே…., இதெல்லாம்கனவா…!?
No comments:
Post a Comment