'தகுதி' அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட
தாசில்தார் சுப்பிரமணி வீடு...
"இங்கே நிலைமை சரியில்லை
கோடைவிடுமுறைக்கு - நீ இங்கு வரவேண்டாம்
நிலைமை சரியானதும் தகவல் சொல்கிறேன்" என்று
வெளிநாட்டில் படிக்கும் ஒரே மகனுக்கு
'வாட்ஸ்- அப்' பில் செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார்.
விதவிதமாய் ரூம் ஸ்பிரே அடித்தும்
வகை வகையாய் டியோடரண்ட் பூசியும்
ஒருவகை துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கிறது
புதியதாய் பரவிவரும்
பெயர் தெரியாத தொற்றுவியாதியால்
போர்வைக்குள் சுருண்டு கிடக்கிறாள்
தாசில்தார் மனைவி .
நடக்கும்போது சிறு மண் துகள்கள்
நரநரவென்று கால்களில் உறுத்துகிறது
தொலைக் காட்சியில் பெண்ணொருத்தி
துக்கத்துடன் செய்தி வாசிக்கிறாள்....
"நான்காவது நாளாய்த் தொடரும் வேலை நிறுத்தத்தால்
நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவாகியிருக்கிறது...
இந்த பிரச்னை இன்றைய பாராளுமன்றத்தின்
இரு அவைகளிலும் எதிரொலித்தது ....
எதிர்கட்சிகள் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி
கடும் அமளியில் ஈடுபட்டது..."
மூக்கைக் குடையும் நாற்றத்தால்
முந்தைய இரவின் தூக்கம் பறிபோனதில்
மிளகாய் நிறத்தில் சிவந்துபோன கண்களில்
எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தார் சுப்பிரமணி
"நாழி ஆவரது ...,ஸ்நானம் பண்ணிண்டு கெளம்புங்கோன்னா"
என்ற மனைவியின் முனகல் குரல் கேட்டது.
குளியலறைக்கு செல்ல அச்சப்பட்டுதான்
பிடித்துவைத்த பிள்ளையார் போல
பித்துபிடித்து அமர்ந்திருப்பதை எண்ணி
தன்னைத்தானே நொந்துகொண்டார்
அவரது வீடு தான்,...
அவர் பயன்படுத்தும் கழிவறைதான்
ஆனாலும் உள்ளே செல்ல தயக்கம்
வெளியே சாக்கடைக் கால்வாய் நிறைந்து
வீட்டின் கழிவுநீர் வெளிசெல்ல முடியாமல்
பாதங்கள் மூழ்குமளவுக்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது
குப்பென்று வீசும் கெட்டவாசம்
குடலைப் புரட்டுகிறது.
மூக்கைப் பொத்திக்கொண்டு குளித்துமுடித்து
மூர்சையாகாமல் வெளியே வந்துசேர்ந்தார்.
அலுவலகம் செல்ல வெளியே வந்து பார்த்தால்
அங்கங்கே சாக்கடைநீர் சாலைகளில் ஓடுகிறது
மக்கள் அனைவரும் சாலையில்
முகக்கவசம் அணிந்தபடி சென்றுகொண்டிருந்தனர்.
கஞ்சிபோட்டு தேய்க்கப்பட்ட
வெள்ளைவேட்டி உறையாமல்
கவனமாய் தூக்கிப் பிடித்தபடி
சாலையைக் கடக்கிறார்.
எதிரே வந்த இருசாக்கரவாகனம்
சாலையில் மிதந்த சேற்றை வாரி
சுப்பிரமணி மீது இறைத்தபடி சென்றது.
இதுவே முன்பாக இருந்திருந்தால்
திரும்பி வீட்டிற்கு சென்று
ஸ்நானம் பண்ணிய பிறகே
பணிக்கு சென்றிருப்பார்.
ஆனால் இப்போது
அந்த கழிவறை நாற்றத்திற்க்கு
இந்த நாற்றம் தேவலாம் என்று
சகித்துக்கொண்டு அலுவலகம் செல்கிறார்.
நான்கு நாட்களாய் சுத்தம் செய்யப்படாத
அலுவலக மேசையிலிருந்து பறக்கும் தூசுகள்
நாசியிலேறி தும்மச்செய்கின்றன
கழிவறையிலிருந்து வெளியே வந்த - சில
கரப்பான் பூச்சிகள் இருக்கைமேல் ஊறுகின்றன
அருவருப்பான சூழல் சுப்பிரமணியை
அலைக்கழிக்க - தலைவலிக்க ஆரம்பித்தது
மேஜையில் வைக்கப்பட்ட காப்பிக் கோப்பையை
வாயருகே கொண்டு செல்கையில்
நான்கு அறை தள்ளியுள்ள
கழிவறையின் சிறுநீர் வாசம்
காப்பிக் கோப்பைக்குள் வீசியது.
மலிந்து கிடக்கும் சுகாதாராக் கேட்டாலும்
பரவிவரும் தொற்று வியாதியாலும்
மூலதனம் போடவந்த அந்நிய முதலாளிகள்
தலைதெறிக்க திரும்பி ஓடுகிறார்கள் .
பள்ளி கல்லூரிகள் போக்குவரத்து நிறுவனங்கள்
அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள்
காவல் நிலையங்கள் , நீதி மன்றங்கள்
மக்களவைகள், மாநிலங்களவைகள்
எல்லமே நாறிக்கிடக்கின்றன
நாகரிக சமூகம் இன்று
நாற்றமெடுத்துக் கிடக்கிறது...
பண்பாட்டுச் சமூகம் இன்று
புழுத்த வாடை வீசுகிறது...
தேசத்தின் துர்நாற்றம் போக்க
எந்த 'தேசபக்தர்களும்' வரவில்லை...
வேலைநிறுத்தம் செய்யும்
தொழிலாளர்களின் பிரதிநிதிகளோடு
பேச்சுவார்த்தை நடத்த
பிரதமர் தலைமையில்
தூதுக்குழு செல்கிறது
மொழிபெயர்ப்புப் பணிக்கு
சுப்பிரமனியனும் செல்கிறார்.
"பறப் பயலுக நம்மோட சரிசமமா பேசறதா? " என்று
வழக்கமாய்க் கேட்கும் சாதித் திமிர்
இன்று நாற்றத்தின் முன்னே மண்டியிட்டது...
"சாப்பிட முடியல தூங்க முடியல
எல்லாப் பக்கமும் 'பீ' நாத்தம் அடிக்குது
மனுசங்க எப்படி வாழறது?"
பதட்டத்துடன் கேட்கிறார் சுப்பிரமணி
"நாலு நாளைக்கே இப்படி புலம்பறீங்க
நாங்க ரெண்டாயிரம் வருசமா
இப்படித்தானே வாழறோம்,
நாங்களும் மனுசங்க தாய்யா"
"சரி சரி சொல்லித் தொலையுங்க
உங்க கோரிக்கைதான் என்ன?
உங்களுக்கு சரிசமமா
எங்களையும் வாழவிடுங்க -இல்லாட்டி
எங்களுக்கு சரிசமமா
நீங்களும் 'பீய' அள்ளுங்க...
No comments:
Post a Comment