Tuesday, 26 April 2016

சிவாஜி... சூத்திரன் சத்ரியனான கதை..(02.05.2014)



முகலாயர்களை முதுகாட்டி ஓடச்செய்த - என்
வீரஞ்செறிந்த போர்களை அறிந்திருப்பாய் ...


தோனார், புரந்தர், கல்யான் போன்ற பல 
மலைக்கோட்டைகளை வென்ற - என் 
மதிநுட்பத் திறனையும்  தெரிந்திருப்பாய் ...


எவ்வளவோ சோதனைகள் சூழ்ந்திருந்த போதிலும் 
எள்ளளவும் கலங்கிவிடாத - என் 
மனோதிடம் குறித்தும் வியந்திருப்பாய் ...


மராட்டியச் சிங்கமாய் - நான் 
மென்மேலும் வெற்றிகள் ஈட்டி 
மிளிர்ந்ததையும் கேட்டிருப்பாய் ...


ஆனாலும்...,
உனக்கு சொல்லாத சேதியொன்று உண்டு...



வாளுமின்றி கேடயமுமின்றி 
வெறும் மந்திரங்கள் மூலம் 
ஒரு சாம்ராஜ்யம் வீழ்ந்த கதை...


போரும் இன்றி படையெடுப்புமின்றி
புரோகிதர்கள் சூழ்ச்சியால் 
ஒரு பேரரசு வீழ்ந்த கதை...


சாம்ராஜ்யம் பல வென்ற எனக்கு 
சிறு ஆசை வந்தது முடிசூடிக்கொள்ள ...


என்னிடம் பொறுக்கித் தின்னும் 
என் அமைச்சக பிராமணர்கள் கூட 
எனக்கு முடிசூட மறுத்தார்கள் ...


இருபிறப்பாளர் மட்டுமே நாடாள முடியும் 
இழிபிறப்பாள சூத்திரன் எனக்கு
முடிசூட்டிக்கொள்ள தகுதியில்லை என்றார்கள் ...


முடி சூடவேண்டுமெனில் முதலில் 
முப்பரி நூல் சூடவேண்டும் என்றும் 
அதற்கு சடங்குகள் பல செய்து 
சாதி இழிவைத் துடைக்கவேண்டும் என்றனர்...   


காசிக்கு விரைந்தோடிச் சென்று 
'கற்றறிந்த' வேத வல்லுநர் 
காகபட்டரைச் சந்தித்து அபயம் கேட்டேன் ...


மகா கருணை (!?)  பொருந்திய காகபட்டார் - என்னை 
சத்ரியனுக்கெல்லாம் அதிபதி - எனவே நீ 
இன்றுமுதல் சத்ரபதி  என்று அறிவித்தார்
ஏழாயிரம் பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டு....


ஆனாலும் வேதமுறைப்படி முடிசூடிக்கொள்ள 
வேதத்தில் சொல்லப்பட்ட (!?) வழியை 
பனை ஓலை புரட்டி புரட்டி 
பலமாக ஆராய்ந்து ஆராய்ந்து 
ஒரு வழியாய் முடிவுக்கு வந்தார்கள் 


நாடுமுழுதும் இருக்கும் 
ஐம்பதாயிரம் பிராமணரை 
குடும்பத்தோடு ராஜகிரிக்கு அழைத்து 
நான்குமாதம் யாகம் நடத்தி 
அறுசுவை  விருந்தளித்து 
அனைவருக்கும் தானமளித்தால் 
பிறவிப் பழி நீங்குமென்றார் ...


சொன்னதெல்லாம் செய்தேன் 
கஜானாவில் கால் பங்கு
காணாமல் போனது....


ஆயிரக்கணக்கான குதிரைகளையும் 
ஆயிரக்கணக்கானபசுக்களையும் 
அணுவளவும் கூச்சமின்றி
தானமாக கேட்டார்கள் 


அவ்வளவும் அள்ளிக் கொடுத்தேன் ...
கஜானாவில் அரைப்பங்கு காலியானது...


சூத்திரனாய் இருந்தபோது 
தெரிந்தோ தெரியாமலோ - நீ  
பாவங்கள் பல செய்திருப்பாய் 


உன் எடைக்கு எடை தங்கமும், வெள்ளியும் 
எடைக்கு எடை விலை உயர்ந்த உலோகமும் 
உயர் ரக பட்டும், நாட்டுச் சாராயமும் 
தனித் தனியாய் எடைபோட்டு 
பிராமணர்களுக்கு 'தானம்' கொடுத்தால்
'பாவம்' அத்தனையும் பறந்துபோகும் என்றார்கள் ...


'அவாள்'கள் சொன்னதெல்லாம்அப்படியே செய்தேன் 
சூத்திர பாவங்கள் போனதோ இல்லையோ 
என் கஜானாவில் முக்கால்பங்கு 
கண்முன்னே காணாமல் போனது...


பல போர்களில் ஈடுபட்டு வென்றவன் நீ 
போர்களில் குழந்தைகளையோ  பசுவையோ
பிராமனனையோ கொன்றிருந்தால் 
பெரும்பாவம் விளைந்திருக்குமே 
அதற்க்கும் பரிகாரம் செய்ய வேண்டும் என்றார்கள் ...


என்னால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 
இழப்பீடுகள் தருகிறேன் என்றேன் 
அவர்களுக்கு கொடுத்தால் பாவம் தீராது 
எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்கள் 


முழுவதுமாய்க் கொடுத்து முடித்தபின் 
மொத்தமாய்க் கூட்டிப் பார்த்தேன் 
உறிஞ்சப்பட்ட நாணயத்தின் மதிப்பு 
ஒரு கோடியே நாற்பத்தி ஏழு லட்சம் 


கிட்டத்தட்ட கஜான முழுவதுமே காலியானது ...


வாங்கித் தின்ற நன்றிக்கு கைமாறாய் 
முப்பரி நூலை அணிவித்தனர் 
நானும் சத்ரியனானதால் - எனக்கு 
வேதம் கேட்கும் உரிமை உண்டு 
பிராமனர்களாகிய உங்களோடு எனக்கும் 
வேதமந்திரங்களை விளக்குங்கள் என்றேன் ...


வேதிய பிராமணன் தவிர யாருக்கும் 
வேதம் கேட்கும் உரிமை இல்லை என்று 
சண்டைக்கு வந்தது சுயநலக் கூட்டம் ...


ஏழாயிரம் பொற்காசு வாங்கிய காகபட்டர் 
எனக்காக வேறுவழியின்றி பரிந்து பேசினார்  
கடுப்படைந்த ஹரப்பிரசாத் சாஸ்திரி - என் 
காதில் விழாமல் மெல்லிய குரலில் 
வேதம் ஓதி  தன் சாதிமேன்மையைக் காப்பாற்றினார்...


மக்கள் வரிப்பணத்தில் சேர்த்த செல்வங்களை ,
அரண்மனைக் கருவூலத்தில் இருந்த பொக்கிசங்களை 
பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைக்குள் வைத்தேன் 
கோவில் சாவியை 'அவாள்'கள் பெற்றுக்கொண்டார்கள்....


முப்பதாண்டு போராடி நிறுவிய சாம்ராஜத்தில் 
முடிசூடிக் கொள்ள இவ்வளவு லஞ்சம் கொடுத்து ...


சூத்திரனாய் இருந்த நான் சத்ரபதி ஆனேன் 
மக்கள் ஏழைகள் ஆனார்கள்
'அவாள்'கள் செல்வந்தர்கள் ஆனார்கள்....

No comments:

Post a Comment