இதோ அவர்கள் கையில் வைத்திருக்கும் இந்த ஆயுதங்கள்,
உன் சமூகத்திடமிருந்து பறிக்கப்பட்டவைதான்
அதைக்கொண்டுதான் அவர்கள் உன்னை அடிமையாக்கினார்கள்..
இதோ அவர்கள் அற்ப பணத்திற்கு அயலானுக்கு விற்கும் இந்த வணங்கள்,
உன் மூதாதையர்கள் வாழ்ந்த இடம்தான்
அங்கிருந்துதான் அவர்கள் உன் முப்பாட்டனை விரட்டினார்கள்..
இதோ அவர்கள் வேலியிட்டுத் தடுத்திருக்கும் இந்த நிலங்கள்,
உன்னிடமிருந்து பறிக்கப்பட்டவைதான்
அங்கிருந்துதான் அவர்கள் அதிகாரம் செலுத்துகிறார்கள்..
இதோ அவர்கள் பரம்பரையாய்ச் சுரண்டிக் கொழுக்கும் இந்த வளங்கள்
உனக்கும் சொந்தமானதுதான்
அதைக்கொண்டுதான் அவர்கள் செல்வந்தர்கள் ஆகின்றார்கள்...
இதோ அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் இந்தச் சொத்துக்கள்
உனது உழைப்பில் வியர்வையில் விளைந்தவைதான்
அதைக்கொண்டுதான் அவர்கள் உனக்கெதிராக அரசியல் செய்கிறார்கள்..
இதோ அவர்கள் பெருமை பீற்றித்திரியும் இந்தக் கலைகள்,
உன்னிடமிருந்து திருடப்பட்டவைதான்
அதைக்கொண்டுதான் அவர்கள் பூர்வ கலைஞனான உன்னைப்
பறையன் என்று இழிவு செய்கிறார்கள்..
இதோ அவர்கள் அமர்ந்து ஆளுமை செலுத்தும்
இந்த அரசியலதிகார உச்சானிக்கொம்பு, உனக்குத்தான் சொந்தம்
அதைப் பறித்துக்கொண்டுதான் அவர்கள் உன்னை மிதிக்கிறார்கள்..
இதோ அவர்கள் பரம்பரையாய் அனுபவிக்கும் இந்த ஏகபோகங்கள்,
உனக்கு மறுக்கப்பட்ட கல்வியால் அவர்கள் சுவீகரித்தது.
அதைக்கொண்டுதான் அவர்கள் உன்னைத் தாழ்த்தப்பட்டவனாக்கினார்கள்..
இதோ அவர்கள் கையில் வைத்திருக்கும்
இந்த உற்பத்திக் கருவிகள், உனக்குச் சொந்தமில்லை என்கிறார்கள்.
அதைக்கொண்டுதான் அவர்கள் உன்னைக் கூலியடிமை ஆக்கினார்கள்..
வரலாறு மீண்டும் திரும்புகிறது…
புதிய வரலாற்றை உருவாக்கு
ஒன்று சேர்ந்து அமைப்பாகு
ஒடுக்கப்பட்டோரை அமைப்பாக்கு
உனக்கான அரசியலை
நீயே தேர்ந்தெடு
ஆயுதம் மீட்டெடு
கருவிகள் கைப்பற்று
சித்தாந்தம் கைக்கொள்
பாட்டாளி வர்க்கக் கோபம் கொள்..
புரட்சிகர அரசியலைச் செயலாக்கு
புதிதாய் உலகை உருவாக்கு...
No comments:
Post a Comment