“ஹீரா… ஹீரா எந்திரி மணி ஏழாச்சு.. ”ரேஷ்மாவின் குரல் தூரத்தில் எங்கோ ஒலிப்பதுபோல இருந்தது. கண்களை விழிக்க மணமே இல்லை. தவளைத் தூக்கம் தூங்குவதில் இருக்கும் சுகமே சுகம். ஆனாலும் சிறு வருத்தம்; கொரில்லாப் பைகளைத் தோள்களில் மாட்டிக்கொண்டு கையில் துப்பாக்கியோடு தண்டகாருன்யாக் காடுகளில் சுற்றித் திரிவதுபோன்ற ஒரு அழகிய கணவு கலைந்து போனதில் கொஞ்சம் வருத்தம்தான். கலைந்துபோன கணவை கொஞ்சம் சிரமப்பட்டு ரீவைண்ட் செய்து பார்த்தேன். சண்டை நடந்ததற்கான சுவடே தெரியவில்லை. யாரோ யாரையோ சுட ஆணையிடுவது போன்ற ஒரு குரல் கனவில் ஒலித்த ஞாபகம் மட்டும் எண்ணெய்ப்படலம் போல மெலிதாக மனதில் மிதந்துகொண்டு இருந்தது. கண்களை இருக மூடி ஆழ்மனதைத் தூர்வார முயன்றேன்.
“அம்மா.. தோசை சுட்டியா இல்லியா…சீக்கிறமா சுடுமா.. சுடு…” ஹாலில் அமர்ந்து கத்தும் பெரிய மகள் யாஷிராவின் குரல் கேட்டது.
“இருடி… இவ ஒருத்தி நொய் நொய்ன்னுட்டு….” என்று கூறிக்கொண்டே வந்த ரேஷ்மா
“டேய்.. எந்திரிடா…! வீரா தோழர் எட்டு மணிக்கு வருவாருன்னு சொல்லிட்டு இன்னும் எரும மாடு மாரி தூங்கிட்டிருக்க… எந்திரிடா..!” மிகுந்த அன்புடன் எழுப்பினாள். என்ன, கொஞ்சம் சவுண்டுதான் அதிகமா இருந்துச்சு.
கண்களை மூடிக்கொண்டே ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த தேனீர் டம்ளரை கைகளால் தடவிப்பார்த்து எடுத்தேன். இந்த வித்தையில் நான் எக்ஸ்பெர்ட் என்னும் கூடுதல் தகவலையும் இங்கு அடக்கத்துடன் பதிவு செய்ய கடமைப் பட்டிருக்கிறேன். கண்களைத் திறக்காமலே தேனீர் அருந்தத் துவங்கினேன்.
“அம்மா டேங்க்ல தண்ணி ஏறல போலிருக்கு, மோட்டார்ல என்னமோ சவுண்டு வருது..’’ யாஷிரா கூறினாள்.
“உங்க அப்பா இன்னும் டீ குடிச்சு முடிக்கலியா…!?” சமையலறையிலிருந்து ரேஷ்மாவின் பதில் குரல்.
ஏர்(AIR) வாங்கிய சுகுனா மோட்டார் போன்ற சத்தத்துடன் டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தேன். ”ஸ்ட்ர்ர்ர்…! ஸ்ட்ர்ர்ர்…!”
ஆனந்தமாக அனுபவித்து தேனீரைக் குடித்தபிறகு “ஆஆஆ…..வ்வ்வ்” என்று பெரிய்ய்ய கொட்டாவியுடன் சோம்பல் முறித்துக்கொண்டு மெதுவாக கண்களைத் திறந்தேன். கொட்டாவிச் சத்தத்தில் பயந்த பல்லியொன்று சுவற்றிலிருந்து கீழே விழுந்து அதன் வாலை துண்டித்துவிட்டு தலைதெறிக்க ஓடி பீரோவுக்கு கீழே சென்று மறைந்தது. அதன் வால் பரிதாபமாக தரையில் துடித்துக்கொண்டிருந்தது.
அழகிய குட்டி தேவதை என் இளைய மகள் அருகில் தூங்கிக்கொண்டிருந்தாள். ஒரு ஓவியம் தூங்குவது போல அவ்வளவு அழகு. தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு முத்தமிடுவது ஒருவகைப் பேரானந்தம். தலைமுடியை வருடியபடி கண்ணத்தில் முத்தமிட்டேன். மெதுவாக சினுங்கினாள்.
இடது கை கட்டைவிரலை வாயில் வைத்து சப்பியபடி அமைதியாக ஓடும் நதிபோல தூங்கிக்கொண்டிருந்தாள். குழந்தைகளுக்கு தேவதைகள் அந்த விரல் வழியே அமுதத்தை வழங்குவார்கள் என்றொரு கதை எப்போதோ கேட்ட ஞாபகம் வந்தது. ஆனாலும் இது கெட்ட பழக்கம் தானே…!!. குழந்தையின் தூக்கம் கலைந்துவிடாமல் மெதுவாக அவள் வாயிலிருந்து அந்த விரலை எடுத்துவிட்டேன். சட்டென தூக்கம் கலைந்தவள் எழுந்து
“போடா… லூசு பண்ணி...!!” என்று பாசத்தோடு கூறிவிட்டு மீண்டும் விரலை வாய்க்குள் தினித்து கண்களை மூடிக்கொண்டாள். சில தருனங்களில் ஓவியங்கள் கெட்ட வார்த்தையிலும் திட்டும் போல. பீரோவில் ஒட்டப்பட்டிருந்த கூர்மூக்கு கொண்ட ஆங்கிரி பேர்டு பொம்மை என்னைப் பார்த்து ’கெக்கபிக்கெ’ என்று சிரித்துக்கொண்டிருந்தது.
“தண்ணி சுட வச்சிட்டியாம்மா..?” என்ற கேள்வியுடன் போர்த்தியிருந்த போர்வையை விலக்கினேன். இடுப்புக்கு கீழே சொதசொதவென்று ஈரமாகியிருந்தது. அட..! சத்தியமா நான் ஒன்னும் பன்னலைங்க… இது ஹினாவின் வேலை. இளைய மகள் ஹினாவின் கணவுகளில் ’பிஸ்ஸ்’ போகும் காட்சிகள் வரும்போது என் மீது ஏறிப்படுத்துக்கொண்டு ’பிஸ்ஸ்’ போவதை ஒரு ராணுவ ஒழுங்குடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடாமல் கடைபிடித்து வருகிறாள். இந்த விசயத்தில் அவ ரொம்ப ஸ்டிரிட்டு. ஈரமானதை உணர்ந்து நான் எழுந்து அவளுக்கு உடை மாற்றிவிட்டு நானும் உடை மாற்றிக்கொண்டு தூங்குவேன். இதற்காகவே என் தலைக்கு அருகிலேயே அலமாறியில் குழந்தைகளின் ஜட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை தோழர்கள் கவனித்திருக்கக் கூடும். சில சமயங்களில் உடல் அசதியாக இருக்கும் போது ’சங்கடத்தில புள்ள பெத்து வெங்கட்டான்னு பேர் வச்ச கதையா’ அப்படியே தூங்கிவிடுவேன். நேற்றும் அப்படித்தான் ஆகிப்போனது.
காலைக் கடன்களைக் கழிக்க கழிவறைக்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் மொபைல் கதறியது. வழக்கமாக பாத்ரூமுக்குள் மொபைல் கொண்டுசென்று லைக் போடும் பழக்கமுடையவன்தான் நான். இரண்டுவாரங்களுக்கு முன்பு யாஷிராவின் பள்ளியில் நடந்த பெற்றோர் சந்திப்பில் “ஏன் யாஷிரா மட்டும் எப்பவுமே ஸ்கூலுக்கு லேட்டா வர்ரா..?” என்ற பிரின்ஸ்பாலின் கேள்வியால் கடுப்படைந்த ரேஷ்மா வீட்டுக்கு வந்து என்னை காரி காரி துப்பியதிலிருந்து அந்த பழக்கத்தை விட்டுத் தொலைத்திருந்தேன். லைக் போடாததால் யாருக்காவது என்மீது வருத்தமிருந்தால் இந்த FLASH BACK மூலம் அதன் உண்மைக் காரனத்தை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டு வந்து தோழர்களுக்காக காத்திருந்தேன். வாசலில் சிவப்பு நிற பேசன் பிளஸ் வாகனம் ஆமைவேகத்தில் வந்து நின்றது. அதிலிருந்து ஹாலிவுட் கதாநாயகன் டாம் குரூஸ் சாயலில் தோழர் வீராபாலு இறங்கி வந்தார். இது மிகைப்படுத்தி சொல்லப்பட்டதல்ல டாம் குரூஸை கற்பனை செய்துகொண்டு வீரா தோழரின் புகைப்படத்தை உற்றுப்பாருங்கள் ஐந்தேகால் வித்தியாசம் கூட சொல்ல முடியாது. செகப்பா இருக்கலாம் தப்பில்ல ஆனா பயபுள்ள அம்புட்டு வெள்ளையா இருக்குது. மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டவர். தம்முடைய குழந்தைகளுக்கு மட்டுமின்றி மனைவிக்கும் தூய தமிழில் பெயர் சூட்டியிருக்கிறார். ”அதெப்படி அவர் மனைவிக்கு அவர் பெயர்சூட்ட முடியும்..?’’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.
அவரைத் தொடர்ந்து வளரத்தெரியாமல் வளர்ந்துவிட்ட வேனுகோபால் தோழர் வந்தார். இவரது உயரத்திற்காகவே அவர் சொந்த ஊரான மதுரையில் பூர்வீகமான அவரது வீட்டில் மூன்று முறை நிலைவாசலை மாற்றிவைத்தனர். அதன்பிறகும் இவரது வளர்ச்சி வீதம் கட்டுக்கடங்காமல் போகவே இப்போது திருமலை நாயக்கர் மஹால் உயரத்திற்கு வீட்டை மொத்தமாக இடித்துக்கட்டும் பணியைத் துவக்கியிருக்கிறார்கள். மனசாட்சியே இல்லாமல் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறார்.
தோழர்கள் இருவரும் நானும் சோபாவில் அமர்ந்திருந்தோம். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த யாஷிராவை வீரா தோழர் அழைத்தார்.
“தோழர் இவங்க தானே நக்சல்பரி பாட்டு பாடுனவங்க..? நீங்க கூட FB ல வீடியோ போட்டிருந்தீங்களே..?” என்று என்னிடம் கேட்டார்.
“ஆமா தோழர்… நல்லா பாடுவா…” என்று கூறிவிட்டு யாஷிராவை அழைத்து
“அந்த பாட்டு பாடு் தங்கம்…” என்றேன். அனைவரும் ஆர்வமுடன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம். பாடல் வரிகளை மறந்துவிட்டு ‘பெக்கெபெக்கெ’ என்று விழித்தாள். இதையெல்லாம் ஹினா தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வை ’அப்பாக்கு சரியான பன்னு..’ என்று சொல்வதுபோல இருந்தது. “மறந்துட்டா போல இருக்கு தோழர்..” என்று கூறி நிலைமைய சமாளித்தேன்.
”சாப்பாடு ரெடி..” என்ற ரேஷ்மாவின் குரலைத் தொடர்ந்து டைனிங் டேபிளில் அமர்ந்தோம். உப்புமாவில் ஆவி பரந்துகொண்டிருந்தது. நேற்றுவரை உயிரோடிருந்த கோழி ஒரு பூப்போட்ட வெள்ளைநிறப் பீங்கான் கின்னத்தில் கார்லிக் சிக்கனாக செத்துக்கிடந்தது. ரேஷ்மாவின் சமையலைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் கடந்து போய்விட முடியாது. மிகவும் நன்றாக சமைக்கக் கூடியவள். அவளது சமையலில் இரண்டு ’டிஸ்’ களில் மிகவும் கைதேர்ந்தவள். ஒன்று உப்புமா; உப்புமாவை சுமாராக செய்வாள். இன்னொன்று சுடிதண்ணீர்; சுடுதண்ணீரை சூப்பராக செய்வாள். விஜய் டீவியில் சூப்பர் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி நான் எவ்வளவோ வற்புறுத்தியும் தன்னடக்கத்தோடு மறுத்து விட்டாள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் வளர்ந்தவர் பேச்சைத் துவங்கினார்.
“தோழர்.. நம்ம அடுத்த கூட்டத்துக்கு இடம் பாத்தாச்சு…” என்றார். நாங்களும் ஆவலுடன் “எங்க தோழர்..?” என்றோம் கோரஸாக.
“சிறுமலை பக்கத்தில ஒரு பெறிய்ய்ய காடு…, ஆள் அரவமே இல்லாத தனிமையான இடம். அங்க போய் டெண்ட் போட்டு தங்கிக்கலாம்..” என்றார்.
எனக்கு ’திக்’ என்று தூக்கி வாரிப்போட்டது. ஹாலில் அமர்ந்திருந்த ரேஷ்மா இதைக் கேட்டுவிட்டாளோ என்று பதட்டமடைந்தேன். மூனு நாள் முன்னாடி ஒரு சி.பி.எம். தோழர் வீட்டுக்கு வந்திருக்கார். அவருக்கு கல்யானம்னு பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தார். வந்தவர்கிட்ட ”எங்க வீட்ல ஞாயித்துக்கெழம கூட்டம் இருக்கு நீங்களும் வாங்கன்னு” ரேஷ்மா எதார்த்தமா சொல்ல, அதுக்கு அவரு ”உங்க வீட்டுக்கரர் இருக்கிறது ஒரு அமைப்பே இல்ல அது ஒரு குழு… பாத்து சூதானமா இருங்க” ன்னு பதார்த்தமா சொல்லிட்டு போயிட்டாரு. அதனால பயந்துபோன ரேஷ்மா ரெண்டு நாளா உம்முனு இருந்துச்சு. பொகஞ்சுட்டே இருந்த குண்டு, நேத்து காலைலதான் வீட்ல வெடிச்சுது. பெரிய்ய பஞ்சாயத்து ஆகிப்போச்சு. அப்புறம் அவளை உக்காரவச்சு அரைமணி நேரம் கிளாஸ் எடுத்து, கைய புடிச்சு கால புடிச்சு கா.. கா.. காக்கா புடிச்சு ஒரு சரியான புரிதலுக்கு கொண்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.
இன்னிக்கு காலையில இருந்து எல்லாம் சரியாதான் போய்ட்டிருக்குது. இப்போ வளர்ந்தவர் பெரிய்ய்ய்ய காடு… அதுல ஒரு டெண்ட்டுனு கைகள அகலமா விரிச்சு பேசினதால எனக்கு கிடுகிடுனு ஆடிப்போச்சு. எப்படிடா வளந்தவர பழிவாங்கறதுன்னு ரொம்ப நேரம் யோசிச்சேன். டக்குனு ஒரு சூப்பர் ஐடியா தோனுச்சு..!! ரெண்டு கை உப்புமாவ அவர் தட்டுல அதிகமா போட்டுட்டேன். பாவம்..!! அந்த அதிர்ச்சி தாங்காம வாயடச்சு போய்ட்டாரு.
நேரம் செல்லச்செல்ல தோழர்கள் ஒவ்வொரு குழுவாக வந்து சேர்ந்தனர். முதல் குழுவில் தோழர்கள் கார்த்திக், அபு, ஆனந்த், ராஜன், மற்றும் ஒரு மூத்த தோழரும் வந்து சேர்ந்தனர். அடுத்த குழுவில் தோழர்கள் ஃபெரோஜ், சம்சுதீன், ஜெய்னுலாபுதீன் வந்து சேர்ந்தனர். திருப்புர் பகுதியிலிருந்து இளம் தோழர் அப்பு கலந்துகொண்டார். தமிழ்செல்வன் தோழரை அழைத்துவர வேனுகோபால் தோழர் சென்றிருந்தார். இதுவரை தமிழ்செல்வன் தோழரைப் பார்க்காததால் ஒரு காதலன் காதலியை எதிர்பார்ப்பதுபோல மிகுந்த ஆர்வத்துடன் வழிமேல் விழிவைத்து காத்திருந்தேன்.
சிறிது நேரத்திலேயே புயல்போல வந்து சேர்ந்தார் தோழர் தமிழ்ச்செல்வன். சும்மா சொல்லக்கூடாது வேனுகோபால் தோழருக்கு போட்டியாக வளர்ந்திருந்தார். கடந்த இரண்டு நாட்களில் ஆள் மாற்றி ஆளாக அவருக்கு “எப்ப கெளம்பரிங்க..?, எத்தன மணிக்கு கெளம்பரிங்க..?, இன்னும் எத்தன செகண்ட்ல கெளம்புவீங்க..? கெளம்பிடீங்களா..?“ என்று கேள்விகளால் துளைத்து உயிரை வாங்கியதால் சேவிங் பன்னிக்கொண்டிருந்தவர் கடுப்பாகி பாதியில் வந்துவிட்டார் போலும். தாடையில் மட்டும் சேவிங் பன்னப்படாமல் குறுந்தாடி மிச்சம் இருந்தது. தலையில் கர்ச்சீப்பைக் கட்டியிருந்தார். வழியில் அவரை எதிர்கொண்ட யாராவது ’’அஸ்ஸலாமு அலைக்கும் பாய்” என்று சொல்லாமல் விட்டிருந்தால் ஆச்சர்யம் தான்.
இவர் எங்காவது லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி போலீசில் மாட்டியிருந்தால்கூட உளவுத் துறையின் கற்பனைக் குழந்தையான இந்தியன் முஜாகிதீனுக்கு ஒரு தலைவர் கிடைத்த மகிழ்ச்சியில் கெடா வெட்டி பொங்கல் வைத்திருப்பார்கள். அப்படி அச்சு அசலாக ஊடகங்கள் உருவகப்படுத்தும் ஒரு இஸ்லாமிய ’டெரரிஸ்ட்(!?)’ போலவே இருந்தார். ஆனால் அவர் ஒரு ’ஒவர் சைஸ்’ குழந்தை என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். கூட்டம் ஆரம்பித்த பிறகு தோழர் வாசுவும் பெரியாரிய தோழர் குட்டியும் வந்து கலந்து கொண்டார்கள். ரேஷ்மா தோழர் வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டே கூட்டத்திலும் பங்கெடுத்தார்.
தோழர்களின் அறிமுகத்திற்குப் பிறகு தோழர் வேனுகோபால் கூட்டத்தைத் துவக்கிவைத்தார். HRPC யின் செயல்பாடுகள் பற்றி தோழர் அபுவும் தோழர் ராஜனும் பேசினார்கள். முதலாளித்துவத்தின் பல்முணைத் தாக்குதல்கள் குறித்தும் சவால்கள் குறித்தும் ஒவ்வொரு தோழரின் முக்கியத்துவம் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் தோழர் தமிழ்ச்செல்வனின் பேச்சு நெகிழ்ச்சியானதாக இருந்தது. அவரது அக்கரை தொனிக்கும் கேள்விகளுக்கு தோழர் கார்த்திக் தத்துவ தளத்தில் நீண்ட திருப்திகரமான பதில்களைக் கூரினார். ஃபெரோஜ் தோழர் குடும்ப உறவுகளை அரசியல் படுத்தவேண்டிய அவசியத்தை ஆதாரங்களுடன் பேசினார். வீராபாலு தோழர் சில இடங்களில் குறுக்கு கேள்விகளைக் கேட்டு அசத்தினார். மற்ற முற்போக்கு அமைப்புகளுடன் இனைந்து செயல்படவேண்டிய அவசியம் குறித்து என்னுடைய கேள்விகளைப் பதிவுசெய்தேன். சம்சுதீன் தோழர் இஸ்லாமிய சமூகம் தனிமைப்பட்டுப் போவதைக் குறித்த தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்டார், ஜெய்னுலாபுதீன் தோழர் மற்றும் அப்பு தோழர் அவர்கள் பகுதிசார்ந்த பிரச்சனைகள் குறித்து பேசினார்கள். எல்லா தோழர்களும் தங்கள் சமகால அரசியல் புரிதலைப் பகிர்ந்துகொண்டனர். கேள்விகளும் பதில்களுமாக ஒரு மிகச்சிறந்த அறிவு விருந்தை பறிமாரிக்கொண்டோம்.
கொக்கரக்கோவிலிருந்து சாப்பாட்டு கேரியர் உள்ளே எடுத்துச் செல்லும்போது ஃபெரோஜ் தோழரின் முகத்தில் மெல்லிய புன்னகை தெரிந்தது. இதற்கு முன்பு சிலமுறை ரேஷ்மாவின் சமையலை சாப்பிட்ட அனுபவம் அவருக்கு இருந்ததால் ‘தப்பிச்சோம்டா சாமி…’ என்று சொல்வதுபோல அவரது உதடுகள் புன்னகைத்தது.
மதிய உணவுக்குப்பிறகு நான்கு மணிவரை கூட்டம் தொடர்ந்தது. நான்கு மணிக்கு பெரும்பாலான தோழர்கள் சென்றபிறகு தோழர்கள் ஃபெரொஜ், தமிழ்ச்செல்வன்,வீரா பாலு, வேனுகோபால், சம்சுதீன், ஜெய்னுலாபுதீன், நான் எஞ்சியிருந்தோம். ஆறுமணிவரை தொழில் சார்ந்த விவாதங்கள் நடந்தன. அதற்குப்பிறகு இரவு பத்துமணி வரை அரட்டைக் கச்சேரி நடந்தது.
மனதிற்கு பிடித்தமான தோழர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக சிரித்துப்பேசி மகிழ்ந்த நினைவுகள் என்றைக்கும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள். பத்து முப்பது மணிக்கு தோழர்கள் பேருந்தில் ஏறினார்கள். வேனுகோபால் தோழர் தாயுள்ளத்தோடு இறுதிவரை இருந்து தோழர்களை வழியனுப்பி வைத்தார். எல்லோரையும் அனுப்பிவிட்டு வீட்டுக்குவந்து சேர்ந்தேன். வீடு வெறிச்சோடி இருந்தது.
ஒரு பொம்மையைத் தொலைத்துவிட்ட குழந்தையைப்போல ஏதோ ஒரு உனர்வு என் மனதைக் கவ்விக்கொண்டது.
“இனி மறுபடி அவங்கெல்லாம் எப்ப வருவாங்கப்பா…?” யாஷிரா கேட்டாள். பதில் சொல்ல வாயெடுத்தேன் குரல் கவ்வியது. மார்போடு அவளை இறுக்கி அனைத்துக்கொண்டேன்
No comments:
Post a Comment