ஒரு தேவதை
ஒரு தோழமை
ஒரு பிரிவு
விளையாடும் குழந்தையின் கைகளில் இருந்து
பிடுங்கி எறியப்பட்ட பொம்மை போல
எங்களிடமிருந்து உன்னைப் பிரித்தது காலம்
அறிவார்ந்தோர் நிறைந்த 'வெளி' யில்
அலுப்படைந்து போனதாலே
அகல்கிறேன் வெளியில் என்று
பொய் சொல்லிப் போகிறாய்
நீ ஏற்படுத்திச் சென்ற இடைவெளிக்கும்
நீ உருவாக்கிச் சென்ற வெறுமைக்கும்
காரணம் ஏதும் இருக்கலாம் -அதில்
கடலளவு நியாயம் இருக்கலாம்
ஒரு நல்ல ரசிகையின் இழப்பு
கவிஞனுக்கு மட்டுமல்ல
கவிதைக்கும் வலிக்கும்
உன் விசாரிப்புகள் ஒருபோதும் என்
கவிதைகளோடு நின்று விடுவதில்லை
என் கொண்டவளையும் ,குழந்தைகளையும்
நீ விசாரிக்க மறந்ததில்லை
எங்கே நீ என குழந்தைகள் ஏங்கும்போதும்
எங்கே நீ என என் கோகிலமும் கேட்கும்போதும்
எங்கே நீ என என் கவிதைகள் தவிக்கும் போதும்
என்ன பொய்யை நான் சொல்லித் தொலைப்பது?
ஒருவேளை இதே போன்ற வலி
உனக்கும் இருக்கக் கூடும் -ஏனெனில்
நானும் உன் எழுத்துகளின் ரசிகன்
மனிதம் கொல்லும் பாசிசம்
மறுத்து நீ தள்ளினாய்
கதைக்குதவாத காந்தியம் -புறக்
கைகள் கொண்டு ஒதுக்கினாய்
மூலதனச் சுரண்டலிசம் -நீ
முற்றாக வெறுத்தாய்
மனிதனை மனிதன் மிதிக்கும்
பார்ப்பனியம் தூற்றினாய்
சக மனிதனின் இழிநிலை கண்டு
சங்கடம் கொண்டாய்
சுரண்டித் தின்னும் இழி கூட்டம் கண்டு
சீற்றம் கொண்டாய்
சாஸ்திரம் கொளுத்த -புது
சரித்திரம் படைக்க
சாதிய அரக்கனின்
சங்கெலும்பு உடைக்க
பெரியதோர் ஆயுதம் எடுத்தாய்
எழுத்தென்னும் ஏவுகணை தொடுத்தாய்
நீ பேனாவின் நிரப்பியது வெறும் மை அல்ல
மாற்றத்திற்கான ஒற்றை வழி
மார்க்சியம் என்னும் பேரொளி
நீ எழுதுவது வெறும் வரிகளல்ல -அவை
பெரியாரிய தீப்பொறிகள்
நீ தொடர்ந்து எழுது
சாமானியன் மனம் உழுது
உருவாக்கு அம்பேத்கரிய விழுது.
உறுத்தும் உண்மைகளை உனைப்போல் எழுத
உனக்கு நிகர் நீயடி அழகிய உத்தமியே
சித்தாந்தச் சாட்டை உனைப்போல் சுழற்ற
உனக்கு நிகர் நீயடி கருணை தேவதையே
வரிகளைப் பிளந்து அதன் வலிகளை உணர்ந்திட
உனக்கு நிகர் நீயடி அன்பின் மறு உருவே
நான் வணங்கும் தெய்வத்துக்கு
கண் காது மூக்கு ஓட்ட வைத்துப் பார்த்தேன்
அழகே உன் உருவம் தெரிந்தது
இன்னொரு ஜென்மம் என்று ஒன்றை
ஆண்டவன் எனக்கு தருவானேயானால் -அதில்
உன்னை எனக்கு அன்னையாகி
அருள் செய்ய வேண்டும்,
போய் வா என் தோழமையே
.....தோழர் ஆனந்திக்கு ....
No comments:
Post a Comment