சமீபத்தில் ஒரு கவிதையை இனையத்தில் வாசிக்க நேர்ந்தது. எதுகை, மோனை, தின்னை, மொன்னையுடன் இரண்டு பக்கத்துக்கு நீட்டி முழங்கி இருந்தது அந்தக் கவிதை (!?). பூக்களின் மகரந்தச் சேர்க்கையில் ஆரம்பித்து, அண்டார்டிகாவின் பனிமலைகள் உருகவிட்டு, கடைசியாக ஜண்ணல் கம்பிகளுக்கு நடுவே ஒரு சாம்பல் நிறப் பூனை குதித்து ஓடியபோது முடிந்துபோனது அந்தக் கொடுமை ச்சீ.. ’கவிதை’. முதல் வரிக்கும் கடைசி வரிக்கும் சம்மந்தம் இல்லையே என்று நினைக்கிறீர்களா? முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்குமே சம்மந்தம் இருக்காது. அதுதான் நவீனத்துவம். நடுவில் அங்கங்கே ஹாஸ்யங்கள், ஸ்தூலமான, பிறழ்மனோநிலை, மானே, தேனே. பொன்மானே போன்ற வார்த்தை ஜாலங்கள் வேறு, உதடு துருத்திய வெறிநாயின் பற்களைப்போல அச்சமூட்டிக் கொண்டிருந்தன. அதைக்கூட சகித்துக்கொண்டு விடலாம் அதற்கு வந்த பின்னூட்டங்கள் தான் அதிர்ச்சியடையச் செய்தது. அந்தப் படைப்பு குடிகாரனின் ’ஆஃப் பாயில்’ மனநிலையில் இருந்ததென்றால், பின்னூட்டங்கள் அடுத்த நாள் ’ஹேங் ஓவர்’ மனநிலையில் இருந்து. இது நவீன இலக்கியமாம். யாரும் இதுவரை சொல்லாததைச் சொல்லும் படைப்புகளாம். பாமரர்களுக்கு புரியாதாம். நல்லவேளை நான் பாமரனாய் இருந்து தொலைத்தேன். இதுபோன்ற சமூக இழிவுகளுக்கு நடுவே அரிதாக வெளிவரும் உழைக்கும் மக்களுக்கான, சமூக நேசிப்பை உயர்த்திப் பிடிக்கும் சில படைப்புகள் நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.
ஒரு படைப்பென்பது சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போன்ற எதார்த்தத்தையும், செயற்கைப் பூச்சுகளால் அலங்கரிக்கப் படாமல் அப்பட்டமான உண்மைகளையும் தாங்கி இருக்கும்போது அதன் முழுமைத் தன்மையை அடைகிறது. அந்தப் படைப்பின் பாத்திரங்கள் நமது பக்கத்து வீட்டுக் காரர்களைப் போலவோ நமது குடும்ப உறுப்பினர்களைப் போலவோ நமக்கு நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும்போது அந்தப் படைப்பு அதன் களத்துக்குள் நம்மை இழுத்துச் சென்று அதன் உள்ளார்ந்த சாராம்சத்தை நமது தோள்களில் இறக்கிவைத்து விடுகிறது. நம்மை கதைக் களத்திற்குள் விருவிருவென்று இழுத்துச் செல்லும் எழுத்து நடை, படைப்பாளியின் வெற்றியென்றால், அந்தக் கதைக் கருவின் தாக்கத்தை நமக்குள் முழுமையாக இறக்கி வைப்பது படைப்பின் வெற்றி.
இப்படித்தான் கடந்த பத்து நாட்களாக ரங்கனோடு கை கோர்த்துக் கொண்டு அம்பிகா தியேட்டரில் துவங்கி ராமாபுரம், தருமபுரி, நாய்க்கன் கொட்டாய், வேம்படிதாளம் என்று நீண்ட தூரம் சுற்றித் திரிந்திருக்கிறேன். வீதிச்சோற்றை வயிராற உண்டிருக்கிறேன். ஆறாவது வார்டில் கயிற்றுக்கட்டிலில் தூங்கி இருக்கிறேன். ஆளும் வர்கத்தின் ஏவல்படையிடம் அடிவாங்கி மயங்கி விழுந்திருக்கிறேன். அதே ஏவல் படையை நெஞ்சுரத்தோடு விரல் நீட்டி எச்சரித்திருக்கிறேன். சிவலிங்கத்தின் குழந்தை மணிமேகலை புரட்சிப் பாடல்களைப் பாடும்போது அதில் என் மகள் யாஷிராவின் குரலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். புரட்சிகரப் பாடகர் கத்தர் ”ஜோகாலு ஜோகாலு..” என்ற அஞ்சலிப் பாடலைப் பாடும்போது பக்கத்தில் நின்று மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்.
“அவங்க இப்போ நம்ம புத்தகமெல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. தாய் நாவல் கொடுத்தேன். அவங்களுக்கு ரொம்ப புடிச்சிப் போச்சு. பாவல்லோட அம்மா மாதிரி தானும் ஆகணும்னு ஆசைப்படறாங்க..” என்று அர்த்தநாரி அவன் மனைவியைப் பற்றி கூறும்போது என் மனைவி ரேஷ்மாவை திரும்பிப் பார்த்து பெருமிதம் கொண்டிருக்கிறேன்.
”ஒரு ஜனநாயக சமூகத்தில் அதன் குடிமக்கள் தனது இருப்பு குறித்தும், வாழும் உரிமை குறித்தும் அச்சம்கொள்ளும் நிலை உருவாகும்போது விடுதலையின் அனைத்து விழுமியங்களும் கேள்விக்குள்ளாகி விடுகிறது…” என்பார் PUCL தமிழ்நாடு பொதுச்செயலர் தோழர் ச.பாலமுருகன்.
’விடுதலை’ என்ற பெயரில் நிகழ்ந்த அதிகார மாற்றத்திற்குப் பிறகு இன்றைய தொழிலாளி வர்கத்திற்கு கொஞ்சமேனும் கிடைத்துக் கொண்டிருக்கிற உரிமைகள், இப்போதைய அரைக்காலனிய அரசும், நிலச் சமீன்தார்களின் வழித் தோன்றல்களான முதலாளிகளும், மனமுவந்து கொடுத்ததல்ல. வரைமுறையற்ற உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, அற்ப ஊதியம் வழங்கி தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிந்த கொத்தடிமை முறைக்கு எதிராக. பணியிடங்களில் உழைக்கும் பெண்கள் சந்திக்கும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக, சாதி இழிவுகளுக்கு எதிராக, அதிகார வர்கத்தின் வன்முறைகளுக்கு எதிராக தீரமிக்க கம்யூனிஸ்ட்டுகளின் எத்தனையோ போராட்டங்கள், மக்களுக்காக தரைசிந்திய எத்தனையோ தோழர்களின் உதிரங்கள், தன்னலமற்ற எத்தனையோ தியாகிகளின் உயிர்ப்பழிகள் மூலம் போராடிப் பெற்றவையே.
உண்மையான மகிழ்ச்சி எதுவென்று மார்க்சிடம் கேட்டபோது போராட்டமே மகிழ்ச்சி என்று கூறினாராம். அது எவ்வளவு உண்மையான வரிகள் என்பதை ’தறியுடன்’ வாழ்ந்த இந்தப் பத்து நாட்கள் மிக அற்புதமாக உணரவைத்தது. மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்பார் லெனின். அதுபோல தன் சக தொழிலாளியான ராசாத்திக்கு பணியிடத்தில் நிகழும் விபத்தில் கை துண்டிக்கப்படுகிறது. ஒரு அற்ப தொகையைக் கொடுத்து முதலாளி அவளை ஏமாற்ற நினைக்கிறான். அவளுக்கு நியாயம் கிடைக்கவேண்டி சங்கத்தை அனுகும் ரங்கன் முதலாளியின் பழிவாங்கும் நரித்தனமான செயலால் போலீஸின் ஈவிரக்கமற்ற கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகிறான். சங்கம் அவனைக் காக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வர்க்க உணர்வு பெற்று முழுநேர ஊழியனாக அமைப்பில் பனியாற்றுகிறான். உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தம்மை முழுமையாக அற்பணித்துக் கொள்கிறான். அப்படித் துவங்கும் அவனது தீரமிகு வர்க்கப் பணி அவனது மரணம் வரையிலும் தொடர்கிறது.
தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்சனைக்கான வேலை நிறுத்தப் போராட்டம் கட்சியின் வழிகாட்டுதலின்படி முன்னெடுக்கப் படுகிறது. அந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்க முதலாளிகளும் அதிகார வர்க்கமும் இணைந்து பல நெருக்கடிகளைக் கொடுக்கிறது. தொழிலாளர்கள் கட்சியுடன் சேர்ந்து நின்று அத்தனை இடையூறுகளையும் தாங்கி எதிர்கொண்டு போராட்டத்தில் வெற்றியடைகின்றனர். இதற்கிடையே அதிகார வர்க்கத்தின் மூர்க்கத் தனமான ஒடுக்குமுறையை ஆயுதம் ஏந்தி எதிர்கொள்வோம் என்று இளம் தோழர்கள் கூறுகின்றனர். ஒரு நீண்ட விவாதங்களுக்குப் பிறகு மேல் மட்டத்தோழர்கள் அதை நிராகரிக்கிறார்கள். பொருளாதாரப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்பதும், அரசியல் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக முன்னெடுப்பதும் நடைமுறையில் எப்படிப் பொருந்துகிறது என்பதை இந்தச்சூழல் நமக்கு தெளிவான ஒரு புரிதலைக் கொடுக்கிறது.
இதில் வரும் கதாப்பாத்திரங்களில் 99 சதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்று ஆசிரியர் தன்னுரையில் கூறியிருக்கிறார். வாய்ப்பிருந்தால் அத்தனை பேரையும் பார்த்துவிடவேண்டும் என்றும் இதுபோன்ற அற்புதமான புரட்சிகரச் சூழலில் வாழ்ந்த அவர்களோடு அதே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து வீதிச்சோறு சாப்பிடவேண்டுமென்றும் உள்ளூர ஒரு ஏக்கம் பிறக்கிறது. தன் தாயைத் தழுவும் ஒரு குழந்தையைபோல அந்த ஏக்கம் மனதைத் தழுவிக் கொள்கிறது.
கற்பினியான அர்த்தநாரியின் மனைவியின் வயிற்றில் போலீஸ் உதைத்து கரு சிதைந்து போய் விடுகிறது. ரங்கனை சிறையில் சந்திக்க செல்லும்போது இரண்டாவது முறையாக கற்பம் தரித்திருக்கும் அவள் “அண்ணா.. எனக்கு இப்போ புரட்சிக்கு கொடுக்க இன்னொரு உசுரு இருக்குது..” என்று சொல்லும்போது கண்கள் நீர்ப்பதை தவிற்க முடியவில்லை. அவை வெறும் வார்த்தைகளா? எவ்வளவு பெரிய வர்க்க உணர்வு அது. எவ்வளவு தூரம் புரட்சியை நேசித்திருந்தால் இந்த வார்த்தையைச் சொல்லும் பலமும் வைராக்கியமும் அவளுக்கு வந்திருக்கும். பிரமிப்பாக இருக்கிறது.
நக்சல் பாரிகள் என்றால் காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டு திரியும் பயங்கரமானவர்கள் என்று முதலாளித்துவ ஊடகங்கள் மக்களின் பொதுப்புத்தியில் தினித்துள்ள பிம்பங்களை பல இடங்களில் ஆசிரியர் தகர்தெறிந்திருக்கிறார். நக்சல் பாரிகளே தேசபக்தர்கள் என்பதை ஆழமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு காட்சியில் காதல் பற்றி கூறும்போது “காதலை புரட்சியாளர்களைத் தவிற வேரு யாரும் இவ்வளவு தூரம் நேசிக்க முடியாது” என்று பொட்டில் அறைந்தாற்போல சொல்கிறார்.
கடுமையான ஒடுக்குமுறைக்கு மத்தியிலும் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த செய்தியை சுவர்களில் எழுதும் இளம் தோழர்களின் உறுதியும் தந்திரமும் சிலிர்க்க வைக்கிறது.
“ஏம்பா, எழுதுறப்போ எதுனா பிரச்சன வந்துதா..? என்று கேட்கும் ரங்கனிடம்
“இந்த நாய்ங்க தொல்லதான் பெருசா இருந்தது. ஒவ்வொன்னும் என்ன கொர கொரக்குதுங்க..” என்று முருகன் கூறும் பதிலில் அந்த அடக்குமுறையை இளம் தோழர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதை அழகாக படம்பிடித்து காட்டுகிறார் ஆசிரியர்.
வேலை நிறுத்த நோட்டீசை முதலாளிகள் சங்கத் தலைவரிடம் கொடுக்க சென்றபோது ’அண்ணா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கண்னியமாகவே பேசுகிறான் ரங்கன்.
“ரங்கா…. செட்டுக்காரனா பொறந்துட்டு நீ கீழ்சாதிப் பசங்களோட சேந்துட்டு ரொம்ப ஆட்டம் போடுற இதெல்லாம் ஒனக்கு நல்லதில்ல..” என்ற சங்கத் தலைவன் தன் சக தோழர்களை சாதிப் பெயரால் இழிவு படுத்தும்போது கடும் கோபம் கொண்டவனாக
“எதுடா நல்லதில்ல… நீங்க தாண்டா மொதலாளிங்கிற திமிர்ல ஆடறீங்க, நானும் தொழிலாளி தாண்டா. சாதிப்பேர சொல்றியே செட்டுக்கார தொழிலாளிகளுக்கு நீ என்னடா செஞ்சே? நம்ம சாதிக்காரன்னு கூலி சேத்தியா கொடுத்த..? பேசறாம் பாரு… உங்க கூட்டாளி கொவிந்தராசு என்ன போலீஸ் ஸ்டேசன்ல வச்சு கொல்லப் பாத்தப்போ எங்கடா போன? அப்ப இந்த கீழ்சாதிப் பசங்க தாண்டா என்ன காப்பாத்துனாங்க…” என்று வெடிக்கும் காட்சியில், உடைமை வர்க்கம் தன் சுரண்டலை பாதுகாத்துக் கொள்ள சாதியத்தை பயன்படுத்துவதையும், ரங்கன் தன்னை பாட்டாளி வர்க்கமாக உணர்ந்து அதை முறியடிப்பதையும் அற்புதமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
போலி மோதலில் ரங்கனைக் கொன்றுவிட போலீஸ் ஊரெல்லாம் வலை வீசித் தேடிக்கொண்டிருக்கும் சூழலிலும், கொஞ்சமும் அச்சமின்றி தன் வர்க்கக் கடமையை நிலை நாட்ட போலீஸின் கண்களுக்குள் மன்னைத் தூவி விட்டு கலக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்து மனு கொடுத்து வெளியேறும் காட்சி ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பதுபோல அந்தச் சூழலை தத்ரூபமாக நமது கண்களின் முன்னே வந்து நிறுத்துகிறது.
சிறைச்சாலையில் உணவுத் திருட்டுக்கு எதிராக போராடி, சக கைதிகளின் ஆதரவைப் பெற்று அவர்களை அரசியல் படுத்துவது. போலீஸின் அடிமட்ட காவலர்கள், மேல் அதிகாரிகளிடம் படும் துன்பங்களைக் கூறும் கத்தார் பாடலைப் பாடி அடிமட்டக் காவலர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துவது. ஓட்டுக்கட்சித் தொண்டர்கள் தங்கள் தலைவர்களுக்காக சிறை வந்தபின்பு அந்தக் கட்சித் தலைமையால் புறக்கனிக்கப் படும்போது அவர்களிடம் வர்க்க அரசியல் பேசி அவர்களை வென்றெடுப்பது போன்ற காட்சிகள் நமக்கு எத்தனையோ பாடங்களை கதையின் போக்கோடு நடத்திச் செல்கிறது.
புரட்சி வென்றுவிடும் என்ற பயத்தில் ஒரு போலீஸ்காரர் “ஏம்பா இந்த அரசாங்கம் எங்களுக்கு சம்பளம் கொடுக்குது, அது சொல்ற வேலைய நாங்க செய்றோம். நாளைக்கு நீங்க ஆட்சிக்கு வந்து யாரையாவது அடிக்கச் சொன்னாலும் நாங்க செய்வோம்..” என்று பம்மும்போது
“அடக்கோழையே.. பட்டாளிவர்க்க அரசாங்கத்திலுமா நீ போலீசாக நீடிப்பாய். பிற்போக்கு அரசாங்கத்திடம் காசு வாங்கிக் கொண்டு மக்களைத் தாக்கும் உன் போன்றவர்களையா நாங்கள் காவலுக்கு வைப்போம். எங்கள் அரசாங்கத்தில் எந்த அதிகாரியையும் நாங்கள் நியமிக்க மாட்டோம். மக்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள். கிராம நிர்வாக அலுவலரிலிருந்து கலக்டர் வரை தங்களை ஆள்பவர்களை உழைக்கும் மக்கள் தீர்மானிப்பார்கள். எல்லா கோர்ட்டும் மக்களுக்கு கட்டுப்பட்டது..” என்ற பதில் நம்மை பெருமிதப்பட வைக்கிறது.
இன்னும் சொல்லிக்கொண்டே போக நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லவேண்டுமெனில் 780 பக்கங்களை மேற்கோள் காட்ட வேண்டி இருக்கும். புரட்சிகரக் கணவைக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நூல் இது. இந்த நூலின் ஆசிரியர் பாரதிநாதன் தோழருக்கு பாராட்டுகளோ, நன்றிகளோ கூறப்போவதில்லை. ஆத்மார்த்தமாக ஒருமுறை அவரை இறுக தழுவிக் கொள்கிறேன். இதை வெளியிட்டுள்ள பொன்னுலகம் பதிப்பகம் தொடர்ந்து தரமான நூல்களை வெளியிட்டு வருகிறது. அதன் பணி தொடர்ந்து சிறப்படைய வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment