கால்களில் சங்கிலியோடு
தோள்களில் சிறகுகளை உணர்வாய்
இனி அஞ்சுவதஞ்சுவாய்
அடிக்கடி கெஞ்சுவாய்
பதிலில்லாக் கேள்விகள் எதிர்கொள்வாய்
உன் அறிவுகுறித்து நீயே ஐயம் கொள்வாய்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போவாய்
உடன்பாடின்றியும் ஒத்துப்போவாய்
கொஞ்சமாய் உன்வீரம் குறைய
சிறிதாய் உன் சினம் மறைய
கிட்டத்தட்ட கோழையாவாய்
வெடிகுண்டு சப்தங்களையும்
விளையாட்டாய் கடந்தவன் நீ
குண்டூசி விழும் சத்தத்தில்
குலை நடுங்கிப் போவாய்
அவள் மௌனத்தின் ஒலி
பெரும் சப்தமாய் காது கிழிக்கும்
அவள் கண்ணீரின் துளி
பெரும் யுத்தமாய் உனக்கு வலிக்கும்
அவள் காதல் உனக்கு வரமாகும்
அதுவே உனக்கு சாபமுமாகும்
தாயும் தாரமும் தராசில்
சமமாய் நிறுத்தி வைத்தும்
தலைமுறை இடைவெளியால்
அவ்வப்போது உரசல் முட்டும்
தாயிடம் நீ சாயப்போனால்
காதல் தலையில்குட்டும்
தாரத்திடம் சாயப்போனால்
தாய்ப்பாசம் வந்து முட்டும்
பெண்கள் பலவீனமானவர்கள்
எனும் பொய்மையை நீ மறுப்பாய்
பெண்மையின் வலிமை என்ன?
நாளை நீ உரைப்பாய்
உன் வாழ்வின் அர்த்தம்
ஒரு நாள் கருவாகும்
உன் பெயரை சொல்ல
ஒரு ஜீவன் உருவாகும்
அழகிய மலரொன்று
உன்கையில் வந்துசேரும்
இது நீ நீங்களாக மாறும் நேரம்
இனி தான் நீ முழுதாக வாழப்போகிறாய்
இனிதான் நீ முழுதாக காதலிக்கப்போகிறாய்
இனிதான் நீ முழுதாக காதலிக்கப்படப்போகிறாய்
உனக்கான ஒரு உலகம்
உன் முன்னே விரிவதைப் பார்
புதிதாக ஒரு பிரபஞ்சம்- உன்னைப்
புன்னகையோடுஅழைப்பதைப்பார்
மழலை !
உன் வாழ்வைத் திறக்கும்
மந்திரச் சாவி
மனைவியின் காதலை
உனக்குப் புரியவைக்கும்
உன் அருமை என்னவென்று
அவளுக்கும் தெரியவைக்கும்
பிஞ்சுக்கால்களில் உதைப்படும்போது
பாட்டியின் சுயநலங்கள் செத்துப்போகும்
பிஞ்சு நகங்களில் கிழிபடும்போது
உன்னவளின் கர்வங்கள் காணாமல் போகும்
பிஞ்சுப் பொக்கிஷத்தை
கொஞ்சிக் கொஞ்சி நீ
குதூகலிக்கும் போது
உனக்கான புது வாழ்க்கை
புரிபடக் கூடும்
இனி நீ
தேவதைகளோடு சொர்க்கத்தில் வாழ்வாய்...
No comments:
Post a Comment