2004 ஜூலை 11 நள்ளிரவு அந்த கிராமத்தில் ஒரு வீட்டின் குறுகிய அறைக்குள் அதிரடியாக நுழைகிறது ராணுவம், தூங்கிக்கொண்டிருந்த, திருமணமாகாத, 32 வயது மனோரமாவை பூட்ஸ் கால்களால் மிதித்து ,தலை முடியை பிடித்து தரதரவென வெளியே இழுத்துவரப்படார் .வீதியில் தள்ளப்பட்டஅவரது தலையில் துப்பாக்கியின் கனமான கட்டைகளால் சரமாரியாக தாக்கப்பட்டார் . அவர் குடும்பத்தார் கண்முன்னே ஆடைகள் களையப்பட்டு அலங்கோலப் படுத்தப்பட்டார்..தடுக்க வந்த குடும்பத்தாரையும் அடித்து உதைத்தனர்,குற்றுயிராய் கிடந்த மனோரமா ராணுவ வண்டிக்குள் தூக்கி எறியப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்.சில மணிநேரம் பின்பு சின்னாபின்னப் படுத்தப்பட்ட அவரது உடல் சாலையோரம் வீசப்பட்டிருந்தது . பிரேத பரிசோதனையில் அவர் வண் புணர்ச்சி செய்யப்பட்ட தடையங்கள் தெரியாமலிருக்க துப்பாக்கி தோட்டாக்களால் அவரது பெண்ணுறுப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தது .
அசாம் ரைபிள்ஸ் முகாமிட்டிருந்த மணிப்பூரின் கங்க்லா கோட்டையின் தெற்கு வாசலுக்கு கும்பலாய் வந்த பெண்கள் ராணுவத்திற்கு எதிராய் கோஷமிட்டனர் .அவர்களை அடக்க துப்பாக்கிகளோடு ஓடி வந்த ராணுவத்தினர் வெட்க்கி தலை குனியவே நேர்ந்தது.ஏனெனில் அங்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் உடலில் ஒட்டுத்துணி இல்லாமல் பிறந்த மேனியுடன் வந்திருந்தனர்.பிறர்க்கு எளிதில் முகம் கூட காட்டாத ,கட்டுக்கோப்பான கலாசாரம் கொண்ட மணிபூர் பெண்கள் பட்டப்பகலில் நிர்வாண கோலத்தில் நின்று "வாருங்கள், எங்கள் உடலையும் எடுத்துக்கொள்ளுங்கள் , எங்களையும் வன்புணருங்கள் "என்று போட்ட கோசம் அந்த பகுதி முழுதும் அதிர்ச்சியில் உறைய செய்தது.
PLA (PEOPL'S LIBERATION FRONT) போராளியான மனோரமாவின் சிரித்த,அழகான முகம் இன்னும் அம்மக்களை விட்டு அகலாமல் பசுமையாகவே உள்ளது ,ஆனால் வெளியே மணிபூர் தான் கொதிகலன் போல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது இந்த சம்பவம் கூட அம்மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாகவே வெளி வந்தது.இது போன்ற தினம் தினம் அரங்கேறும் வெறியாட்டங்கள் வெளிவராமல் முழுதும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.இதைப்போன்ற எத்தனையோ மனோரமாக்களின் அவலங்கள் நிறைந்தது தான் மணிப்பூர் வரலாறு.
கிழக்கில் பர்மா,மேற்கில் அசாம்,வடக்கில் நாகாலாந்து ,தெற்கில் மிசோராம் ஆகியவை சூழ்ந்த, மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த இப்பகுதியின் மொத்தப்பரப்பளவு 22373 ச.கி.மீ. இதில் 10 சதவீத பள்ளத்தாக்கில் அறுபது சதவீத மக்களும்,மீதமுள்ள மலைப்பகுதிகளில் நாற்பது சதவீத மக்களும் வசிக்கின்றனர்.
கி.மு.33 வாக்கிலேயே மெய்தி இன மக்கள் அங்கு குடியேறியதாக குறிப்புகள் உள்ளன.இவர்களை தொடர்ந்தே நாகர்கள்,மாவோஸ்,பௌமைஸ் மாரம் போன்ற 19 பெரிய பழங்குடி இனங்களும் அதை தொடர்ந்து குக்கி,சின்,மிஸோ போன்ற 14 சிறிய பழங்குடி இனங்களும் குடியேறினர்.கி.பி. 16 இல் மணிபுரை ஆண்ட மன்னனின் உத்தரவுப் படி பெரும்பாலான மக்கள் வைஷ்ணவ ஹிந்து மதத்தை தழுவினர்.தொன்மையான வரலாறும் தனித்த அடையாளங்களும் கொண்டிருந்த மேய்திகளின் பூர்வீக மொழியான ' செனமாஹி ' இல் அந்த அரசரின் அவையில் இருந்த ஒரு வங்காள அமைச்சரின் அரசியல் தலையீடு காரணமாக வங்காள வரிவடிவம் புகுத்தப்பட்டு அதையே நடைமுறையிலும் தொடரச் செய்தனர்.இவ்வாறு ' செனமாஹி ' யை முற்றிலும் அழிந்துபோகச் செய்தனர்.
உண்மையில் மணிப்பூரின் போராட்ட வரலாறு அதன் பூர்வ குடிகளான மெய்தி இன மக்கள் அங்கு புதிதாக குடியேறிய வேறு இனக்குழுக்களால் தமது தாய் நிலம் அபகரிக்கப் படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே ஆரம்பமானது.புதிதாக குடியேறிய குழுக்களில் நாக பழங்குடியினர், நாகர்கள் பரவலாக வாழும் பகுதிகளான நாகலாந்து மற்றும் மணிப்பூரின் நான்கு மலை மாவட்டங்களான உக்ருள் ,சேனாதிபதி,தேமங்க்லாங்,சந்தேல் போன்ற பகுதிகளையும்,அருணாச்சல பிரதேசத்தின் டிராய்,சாங்க்லாங் மாவட்டங்களையும் ,அசாமின் கர்பி ஆங்லாங்,வடக்கு சச்சார் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கிய அகண்ட நாகலாந்து(நாகாலிம்) குறிக்கோளுடன் செயல்படுபவர்கள்.மெய்தி இன மக்களின் போராட்டம் நாகர்களிடமிருந்து தமது சொந்த நிலத்தை இழந்துவிடாமல் காக்கவே போராட துவங்கினர்.
கி.பி.1891 இல் தாய்லாந்துக்கும் பர்மாவுக்கும் இடையிலான போரில் பர்மா, அசாமையும் மணிப்பூரையும் கைப்பற்றியது.இது அப்போது வங்காளத்தை ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷ் அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.பின்பு பிரிட்டிஷ் பர்மாவை தாக்கியது அதோடு அஸ்ஸாமையும் கூடவே மணிப்பூரையும் வளைத்தது.அப்போதும் கூட மணிப்பூர் பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் வரவில்லை .ஒரு பிரிட்டிஷ் பார்வையாளரின் மேற்பார்வையில் அங்கு மன்னராட்சியே நடை பெற்றது
இந்தியா சுதந்திரம் அடைந்த போது மணிப்பூரை ஆண்ட மன்னன் பிரபோத் சந்திராவிடம் மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்க இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியது.இது பலனளிக்கவில்லை .அதே சமயத்தில் ஹிஜாம் இராபட் என்கிற மெய்தி இன போராளி தெலுங்கானா கம்யூனிஸ்ட் போராளிகளிடம் ஆயுத பயிற்சி பெற்று ,மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்க கூடாது எனவும், அதோடு இந்த மன்னரின் முடியாட்சியும் இனி தொடர கூடாது எனவும் ,ஜனநாயகம் கோரி ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டார்.இவரது போராட்டத்தை சமாளிக்க முடியாமல் மன்னர் தேர்தலுக்கு சம்மதித்தார்.1947 இல் மணிப்பூரில் சட்டமன்றம் நிறுவப்பட்டது.
ராணு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அச்சமூட்டி ஷில்லாங்கிற்கு வரவழைக்கப்பட்ட மன்னரை கிட்டத்தட்ட மிரட்டி இணைப்பு ஒப்பந்தத்தில் ( ஷில்லாங் ஒப்பந்தம்)கட்டாயப்படுத்தி ஒப்புதல் பெற்றது இந்திய அரசு.இது அம்மக்களுக்கு பேரிடியாய் இருந்தது .இந்த நம்பிக்கை துரோகமே தொடர்ந்து மணிப்பூரில் போராளிகள் உருவாவதற்கு காரணமாய் அமைந்தது.அப்போதைய மணிப்பூர் கவர்னர் பிரகாசா.
1956 இல் மணிப்பூர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு சிறிதும் பெரிதுமாய் 30 க்கும் மேற்பட்ட போராளி குழுக்கள் ஆய்தம் தாங்கி மணிப்பூரை விடுவிக்க உருவானது 1960 இல் பல குழுக்கள் ஒன்றிணைந்து மணிப்பூர் ஐக்கிய முன்னணி (MULF )உருவானது .1964 இல் UNLF (UNITED NATIONAL LIBERATION FRONT) எனும் குழு சமேந்திரா சிங் தலைமையில் உருவானது .பின்பு RGM (REVOLUTIONERY GOVERNMENT OF MANIPUR) எனும் குழு துவக்கப்பட்டது இந்த குழுக்கள் கிழக்கு பாகிஸ்தானில் வலுவான தளம் அமைத்து செயல்பட்டு வந்தது .1971 இல் பங்களாதேஷ் உருவான பின்பு இவற்றிற்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்த இந்திய அரசு ஆயுதங்களை கை விட்டு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது .ஆனால் அரசு தன முடிவுகளை சிறிதும் விட்டுக்கொடுக்காததால் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.(1972 இல் மணிப்பூருக்கு தனி மாநில அந்தது வழங்கப்பட்டது).
பேச்சு வார்த்தையின் போது கைது செய்யப் பட்டவர்களுள் மெய்தி இன முக்கிய தலைவரான பிசேஷ்வர் சிங் விடுவிக்கப்பட்ட பின் செய்த முதல் வேலை திபெத்திற்கு சென்று சீனா ஆதரவுடன் PLA (PEOPLE'S LIBERATION ARMY) எனும் அமைப்பை நிறுவியது தான்.இது போன்ற அமைப்புகளை ஒடுக்க ராணுவத்திற்கு சிறப்பு அதிகார சட்டம் AFSPA (ARMED FORCE SPECIAL POWER ACT)கொடுக்கப்பட்டது. இதன் மூலம் யார் ஒருவரையும் கைது செய்யவோ சந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொல்லவோ முழு அதிகாரம் வழங்கப்பட்டது .அன்று முதல் இன்று வரை அங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்த இரக்கமற்ற அடக்குமுறை சட்டத்தின் கீழ் தான் வளர்கிறார்கள்.
இந்த சட்டத்தை எதிர்த்து இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா 12 ஆண்டுகளாக உறுதியுடன் உண்ணாவிரத போராட்டத்தை இன்றுவரை தொடர்கிறார் .சாகும் வரை உண்ணாவிரதம் என்று கூறி மேடையேறி காய்ச்சலென்று உண்ணாவிரதத்தை கை விட்ட அண்ணா ஹசாரே போன்ற கார்பரேட் போராளிகளின் நாடகங்கள் பிரபலமடைந்த அளவுக்கு இந்த இரும்பு பெண்மணியின் போராட்டம் மக்களை சென்றடையாதது தான் வேதனை.
சமூக ,பொருளாதார ரீதியான அம்மக்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்றாமல்,
இன,மொழி,கலாசார ரீதியான உரிமைகளுக்கு உத்திரவாதம் தராமல்,
இனக்குழுக்களிடையே உள்ள அச்ச உணர்வையும் ,மோதல் போக்கையும் களைய தேவையான செயல்பாடுகளை முன்னெடுக்காமல்.
தொடர்ந்த புறக்கணிப்புகள் மூலம் விரக்தியுற்று இருக்கும் அவர்களுக்கு நிவாரணம் வழங்காமல்,
தீவிரவாதிகள் என்று கூறி தனிமைபடுத்தப்பட்ட மக்களை நெருங்கி செண்டு அவர்களை ஜனநாயக நீரோட்டத்திற்கு மீட்டெடுக்காமல்
உங்கள் துப்பாகிகளும், பீரங்கிகளும் என்றைக்குமே வென்றிட முடியாது...
No comments:
Post a Comment