Tuesday, 26 April 2016

சவரக்காரனின் கவிதை மயிருகள் நூலைப்பற்றி...(11.04.2015)



தோழர் குணாவின் பரிந்துரையின் பேரில் அந்தப் புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. நான்கு சிகரெட் பெட்டிகளை வரிசையாக அடுக்கிவைத்தது போலவே இருந்தது அதன் அளவு. புத்தகத்தின் தலைப்பே கலகமூட்டும்படியாக கம்பீரமாக இருந்தது. அதில் ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதை உணரமுடிந்தது. முடி திருத்தும் தொழிலாளிகளின் வலியைச் சொல்லும் கவிதைகளாக இருக்கக்கூடும் என்றுதான் நினைத்து அதை வாசிக்கத் தொடங்கினேன்.

குணிந்து
கீழ் பார்த்துத் தொங்கும்
கொட்டை மயிருகளை
அரைகுறையாக
வெட்டித் தள்ளுவதுபோல்
அல்லாமல்..//

என்று தொடங்கியது முதல் கவிதை. ஆஹா ஏதோ பின் நவீனத்துவ!? வகையராவை வாசிக்கத் தொடங்கி விட்டோமோ என்று பயந்துபோனேன். கவட்டைக்குக் கீழே குணிந்து பார்த்துக் கொண்டே எழுதப்படும் ’சரோஜாதேவி’ லேட்டஸ்ட் வெர்சன்களான நவீனக்!? கவிதைகள் என்றால் எனக்கு அப்படியொரு ஒவ்வாமை.. ”என்ன இந்த மனுசன்... நம்மள சிக்கவச்சுட்டாரு போலயே..?” என்று தோழர் குணாவின் மீது லைட்டாக கோபமும் வந்தது. வாசிக்க நேரமில்லாமல் ஊர்ப்பட்ட புத்தகங்கள் தேங்கிக் கிடக்கும்போது இது தேவையா எனத் தோன்றியது. மூடி வைத்து விடலாமா என்றுகூட யோசித்தேன். சரி என்னதான் இருக்குனு தொடர்ந்து படிப்போம், அதைவைத்து அடுத்தநாள் தோழர் குணாவுடன் செம சண்டை போடவேண்டும் என்ற முடிவுடன் அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டினேன். என் முன் முடிவுகளை நொருக்கிப்போட்டன அடுத்தடுத்த கவிதைகள்.

நிலமும், கலைகளையும் பறித்துக்கொண்டு ஊரைவிட்டு விலக்கிவைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைப்போலவே, மருத்துவம், அழகுக்கலை, சடங்குகள், இசைக்கலை போன்றவற்றை பறித்துக்கொண்டு ’கீச்சாதிப்பயலுவ’ என்று ஊருக்குள்ளேயே ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் அடக்க முடியாத கோபத்தின் வெளிப்பாடுகளே ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுகிறது. சவரக் கத்தியின் கூர்முனையைப்போல ஒவ்வொரு கவிதைகளிலும் அவ்வளவு கோபம்.

படிப்பு வரலன்னா உங்கப்பங்கூட
செரைக்கப் போகவேண்டியது தானலேன்னு
கூர பள்ளிக்கூடத்த மொழுவ
சாணாங்கி பொறக்க அனுப்பிவச்ச
நடராஜபிள்ளை வாத்தியார
அன்னைக்கு ஒருநாள் செயர்ல இருத்திவச்சு
அப்பா ஷேவ் பனுகாரு

கிருதால இருந்து கத்தி கீழ எறங்கி
கழுத்துக்கிட்ட வரும்போது தோனுது
அப்படியே வச்சி
ஒரு இழுப்பு இழுத்துர மாட்டாரான்னு
தாயிளி சாவட்டும்.

இதுபோலக் கோபப்படத் தெரியாத கவிதைகள் என்ன மயிருக்கு எழுதப்படவேண்டும். சாதி ஆதிக்கத்தின் கொடுமையை, நாசூக்கான தீண்டாமையின் வலியை

செத்த வீட்டுக்கும் பார்பர்
ஷாப்புக்கும் போனவங்க
குளித்த பிறகுதான் வீட்டுக்குள்ள வரனும்
ஒட்டிய முடிகள் போவதற்கும்,
நாசுவன் தொட்டதற்கும்..

என்று சொல்லுவதோடு விட்டுவிடாமல், ஆதிக்கவாதிகளுக்கு புரியும் மொழியில்

தொட்டிலில் கிடக்கும் என்னை
சலூனில் வேலை முடித்து வந்த அப்பா
முத்தமிட்ட கன்னப்பரப்பில்
ஒன்றிரண்டு வெள்ளை முடிகள்
ஒட்டியிருக்கின்றன
எந்த ஜாதிக்காரனின்
அழுக்கு மயிரோ…

என்று காரித்துப்பிச் செல்லும் காரமான வரிகள் சிறப்பிலும் சிறப்பு. மகப்பேரு நேரங்களில் பிரசவம் பார்த்து முதன் முதலாக குழந்தையைத் தொட்டுத் தூக்கும்போது மருத்துவச்சியாக இருந்தவள், அதே குழந்தை வளர்ந்து பெரியவளான பின்பு நாசுவத்தி என்று அழைக்கும் முரனை தனது சாட்டை வரிகளில் சுழற்றிச் செல்கிறார் ஆசிரியர். மருத்துவமும் கலையும் சடங்கும் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்துவிட்டு கடைசிவரை நாசுவன் என்ற பெயருடனே வாழ்ந்து மறைந்த அப்பாவை நினைவுகூறும் கவிதையும், பொது சமூகத்திடம் தன் சாதியை மறைத்துக்கொண்டு வாழும் அவலமும், ஏதாவது நல்லது கெட்டதுகளுக்குப் போனால் தன்னுடைய சாதி தெரிந்துவிடும் என்று எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்வதைத் தவிர்த்துக்கொண்டு வாழ்வதையும், ஊராரையெல்லாம் அழுகுபடுத்தும் சமூகத்தின் வாழ்க்கை, சாதியச் சமூகத்தால் எவ்வளவு அலங்கோலமாகச் சிதைக்கப் பட்டிருக்கிறது என்பதையும், வலியோடு பதிவு செய்திருக்கிறது இந்நூல். இனி ஒவ்வொரு முறை சலூனுக்குப் போகும்போதும் அந்த சவரக்கத்தியின் சோகம் நினைவுக்கு வரும். தோழர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய கவிதைத் தொகுப்பு.

மதுபோதையில் மாரடைத்துப்போன
பரமேஸ்வரன் நாயருக்கு
சவரம் செய்து, மூக்குச்சளி குண்டிப்பீ துடைத்து
குளிப்பாட்டி பவுடர்போட்டு
கைகால் பெருவிரல்கள் சேர்த்துக்கட்டி
உடைமாற்றி செண்ட் அடித்து
பிரேதத்தை கருநீள பெஞ்சில்
நீளமாகப் படுக்கவைத்துவிட்டு
கொஞ்சம் அரிசியுடன் வந்தார் அப்பா
அன்னைக்கு ராத்திரி வீட்டுல
சோறுபூரா பொண நாத்தம்…

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்..
ஆசிரியர் கலைவாணன் இ.எம்.எஸ்
கீற்று வெளியீட்டகம், 70.ரூபாய்.



No comments:

Post a Comment