அந்தச்சம்பவம் நிகழ்ந்துமுடிந்து - ஒரு
அரைமணிநேரம் கடந்திருந்தது
குழந்தைகளுக்கான சைக்கிள் ஒன்று
குப்புற கவிழ்ந்தபடி கிடந்தது
நான்கடி உயர டெடிபியர் பொம்மை ஒன்று
வான் நோக்கி சிரித்தபடி கிடந்தது
அழகிய பூக்களால் நிரப்பப்பட்ட
மெல்லிய பாலிதீன் பையொன்று
அசைவின்றி இருப்பதுபோல
அழகுப்பேழை என் மடியில்
அமைதியாக அமர்ந்திருக்கிறாள்
விரல் சப்பியபடி தூங்கிப்போன
குழந்தையைப்போல
என்மார்பில் தலைசாய்த்து
கண்கள் மூடியிருக்கிறாள்
கன்றின் உடலை நாவால் தடவும் பசுவைப்போல
அவள் தலைமுடியை வருடிக்கொண்டிருந்தேன்
வராண்டாவில் வீசிய வாடைக்காற்றில்
அவள் கேசத்தின் ஒரு பகுதி
என் நாசியை உரசியபடி
படபடத்துக்கொண்டிருக்கிறது
எச்சிலில் ஊறிப்போய் பிசுபிசுவென்றிருந்த
பாதி தின்னப்பட்ட சாக்லேட்டோடு
என் சட்டையை இறுக்கிப் பிடித்திருந்தாள்
லேசாக வீங்கியிருந்த பால்முகமும்
கன்னத்தில் உறைந்திருந்த உப்புச்சுவடும்
அவள் அழுதிருந்ததை சொல்லியது
விட்டுவிட்டுக் குலுங்கும் அவள் உடலின் அசைவு
யாருக்குமே கேட்காத மொழியில்
அவள் விசும்பிக்கொண்டிருந்ததை சொல்லியது
கீழுதடு தாண்டி கடைவாய் வரை வழிந்திருந்த
பழுப்பு நிற உமிழ் நீரிலிருந்து
கேட்பரீஸ் வாசம் வீசிக்கொண்டிருந்தது
பாலுன்னும்போதே தூங்கிப் போன குழந்தை
தன் தாய் மார்பிலிருந்து உதடுபிரிப்பதுபோல
மெல்லிய குரலில் பேசினாள்
"எதுக்கு அப்பா என்ன அடிச்ச?"
"நீ தங்கச்சி பாப்பாவ அடிச்சயில்ல ,
நீ பெரிய பொண்ணு ஆயிட்ட தானே ?
உன்னவிட சின்ன பாப்பாவ அடிச்சா அவளுக்கு வலிக்குமல்ல ...
அதான் அப்பா உன்ன அடிச்சேன்;
நம்மள விட சின்னவங்க மேல நாம பாசமா இருக்கணும்
அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது?"
" நானும் உன்னவிட சின்ன பாப்பாதானே
என்ன நீ அடிச்சதால எனக்கும் வலிச்சுதல்ல
இப்போ உன்ன யாருப்பா அடிப்பாங்க?"
மழலைச் சொல்லில் என்னை
மரணிக்கச் செய்தாயடி செல்வமே
ஒற்றைக் கேள்வியில் - என்னைக்
கோழையென்று உணர்தினாயடி தங்கமே...
என் சுயம் என்னைச் சுட்டெரிக்க
இருக்கமாய் அணைத்தபடி
நெற்றியில் உதடுபதித்து
மன்னிக்கக் கேட்டேன்
ஒரே புன்னகையில் என்னை மன்னித்தாள்
இல்லையில்லை ...
மன்னிப்பென்பது உண்மையில் மன்னிப்பல்ல
மிகப்பெரிய தண்டனை என்பதை உணர்ந்தேன்...
குற்ற உணர்ச்சியில் கூசியபடி கேட்டேன்
"பாப்பாவ எதுக்குமா அடிச்ச?"
"தங்கச்சி பாப்பா..., அவள அப்பா பொண்ணுன்னு சொல்லறாப்பா ;
அவ அம்மா பொண்ணு தானே? , நான் தானே உன்னோட பொண்ணு ? அதான் அடிச்சேன்"
ஏனோ எனக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது....
'நம்மள விட சின்னவங்க மேல நாம பாசமா இருக்கணும் அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது?'
No comments:
Post a Comment