பல்கலைக்கழக பேராசிரியரின் உரையை
மிரட்சியோடு பார்க்கும்
பள்ளிச் சிறுமியைப் போல
உங்கள் கவிதைகளை நாங்கள்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்....
வயிறு புடைத்தோருக்கு
பரிமாறப்பட்ட விருந்து போல
பயனின்றி விரயமாகிறது
உங்கள் வார்த்தைகள் ...
அரைவயிற்றுக் கஞ்சிக்கே
அல்லல் படுபவனிடம் சென்று
'ஆதாமின் ஆப்பிளைப்' பற்றி
அழகாக கவி பாடுகிறீர்கள் ...
தினம் இருபது ரூபாய்க்கு வக்கின்றி
எழுபது சதவீதம் பேர் செத்துக்கொண்டிருக்க
உங்கள் கற்பனைக் காதலியின் கன்னக்கதுப்பை
வெட்கமின்றி வர்ணித்துக்கொண்டிருக்கிறீர்கள்...
எந்த சம்பந்தமும் இல்லையென்று
இரண்டாயிரம் வருடங்களாக
'விலக்கப்' பட்டிருந்தோம் ...
இனி எங்களுக்கான இலக்கியங்களை
நாங்களே படைத்துக்கொள்வோம்...
எப்போதும் போலவே இப்போதும்
எங்களிடமிருந்து நீங்கள்
அந்நியமாய்ப் போய்த் தொலையுங்கள்....
No comments:
Post a Comment