Tuesday, 26 April 2016

நீ ஒரு தீவிரவாதி...(12.09.2013)



எனக்கு நீ 


பால்ய சிநேகிதனில்லை 
பள்ளித் தோழனில்லை
ஒன்றாக ஊர் சுற்றியதில்லை 
ஒரே ஊர்க் காரர்களும் இல்லை 


பிறகெப்படி எனக்குள் நீ 
இப்படி கெட்டிப் பட்டுப் போனாய்..?


இன உணர்வில் நாம் 
இணைந்திருக்க வாய்ப்பில்லை 
மத உணர்வுகளை நாம் 
மதித்ததாய் நினைவில்லை 


பிறகெந்தப் புள்ளியில்
நாம் இனைந்து நின்றோம்...?


உற்பத்தி உறவுகளில் சேர 
நமக்கு ஒன்றுமில்லை 
வர்த்தக விசயங்களில் இணைய 
நமக்குள் வாய்ப்புகளுமில்லை 


ஒன்றிணைத்துப் போன அந்த 
ஒற்றைப் புள்ளிதான் எது...?


வாழ்தலுக்காய் கொஞ்சம் 
வளைந்து செல்பவன் நான் 
வாள்முனை மீதமர்ந்தே 
வாழப் பழகியவன் நீ 


பிறகெப்படி உன்னை எனக்கு 
பிடித்துத் தொலைத்தது...?


ஒரு பொழுது மார்க்ஸ் சொன்னதுண்டு
"ஒரு கருத்து மனித மனங்களை கவ்விப் பிடிக்கையில் 
அது பௌதீக சக்தி பெறும்" என்று 


ஒத்த கருத்தில் ஒன்றுபட்டோம் 
சித்தாந்தத்தில் சேர்ந்து நின்றோம் 


ஆனாலும் உன்னில் குறை சொல்ல 
நிறைய வாய்ப்புகளுண்டு எனக்கு 


எல்லை தாண்டிய ஊடுருவலில்
நீ ஒரு தீவிரவாதி 


தோழன் என்னும் எல்லை தாண்டி 
எங்கள் குடும்பங்களுக்குள் 
உறவாக ஊடுருவிய 
நீ ஒரு தீவிரவாதி 


இயல்புகளை மாற்றும் 
நீ ஒரு திரிபுவாதி 


நேசமிகு நட்புகளை
பாசமிகு உறவுகளாய் 
பரிணமிக்கச் செய்வதில் 
நீ ஒரு திரிபுவாதி 


உரிமைகளைப் பறிப்பதில் 
நீ ஒரு சர்வாதிகாரி 


எங்கள் இயல்புப் பார்வையைப் பறித்துவிட்டு 
எங்களுக்கு இயங்கியல் பார்வையை விதைத்த 
நீ ஒரு சர்வாதிகாரி 


கொடுப்பதை விடவும்
அதிகம் பெறுவதில் 
நீ ஒரு சுரண்டல்வாதி 


உன் ஒரேயொரு இதயத்தை 
எங்கள் எல்லோர்க்கும் பகிர்ந்தாய் 
எங்கள் எல்லோர் இதயத்தையும் 
நீ ஒருவனே பறித்தாய் - நிச்சயமாய்
நீ ஒரு சுரண்டல்வாதி 


எதார்த்தத்தை திருத்துவதில் 
நீ ஒரு திருத்தல்வாதி 


தோழியரை நீ 'தோழர்' களாய் 
கனவான்களை நீ 'காம்ரேட்' களாய் 
திருத்தியதில் 
நீ ஒரு திருத்தல்வாதி 


பொருள்களைக் கலப்பதில் 
நீ ஒரு கலப்படவாதி 


கொள்கைக்குள் குடும்பங்களையும் 
குடும்பங்களுக்குள் கொள்கையையும் 
கலப்படம் செய்ததில் 
நீ ஒரு கலப்படவாதி 


எப்போதும் சராசரிக்குச் சற்று 
தூரத்தில் இருப்பது தான் உன் குணம் 

எப்போதும் நீ  
நீயாக இருப்பதுதான் உன் பலம் 


குறையாத பலத்தோடு 
மாறாத குணத்தோடு 
வாழ்க நீ பல்லாண்டு...



என் இனிய தோழன் பெரோசுக்கு 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

No comments:

Post a Comment