Tuesday, 26 April 2016

அட மானங்கெட்டவனே, இனியாவது பெரியாரைப் படி.. (26.04.2014)



நான் பெத்த மகனே நில்லு 
நான் பட்ட வேதனை கேளு...


முலைவரி கொடுக்கச்சொன்னார்கள் 
மனம்நொந்து கொடுத்தோம் ...
இலவசமாய் உழைக்க சொன்னார்கள் 
இடுப்பொடிய உழைத்தோம்  ...
மணமகளை 'அனுப்ப' சொன்னார்கள் 
அழுதுகொண்டே அனுப்பினோம் ...




"செருப்பு அணியாதே சக்கிலியா" என்றார்கள் 
'சரி' என்று சொல்லி பணிந்தோம் ...
"தொட்டால் தீட்டுடா பறையா" என்றார்கள் 
தயங்கியபடியே தள்ளி நின்றோம்...
"பார்த்தால் பாவமடா பஞ்சமா" என்றார்கள் 
புழுங்கியபடி விலகிச் சென்றோம்...




வேசிபுத்திரன் என்றே அழைத்தார்கள் 
கூசியபடியே கடந்து சென்றோம்...
சாணிப்பாலை குடிக்கத் தந்தார்கள்  
நாணியபடி குடித்துத் தொலைத்தோம்... 
சாட்டையால் அடித்துத் தோலுரித்தார்கள்  
நாதியின்றி துடித்துக் கிடந்தோம் ..




காரிருளில் வெள்ளி முளைத்தது போல 
ஈரோட்டுக்காரன் ஒருவன் வந்தான்...
"சுயமரியாதை உயிரினும் பெரியது "
தாடிக்காரன் சொல்லித் தந்தான்...



சூழ்ச்சிகரச் சடங்குகளை செருப்பால் அடித்தான் 
ஏமாற்று வித்தைகளை எட்டி எட்டி மிதித்தான்.
பார்ப்பனியப் பிசாசுகள் பயந்து நடுங்கின 
ஆரிய அரக்கர்கள் அஞ்சி ஒடுங்கினர்...


அடடா இனி பயமில்லை - என் 
சந்ததிகள் யார்க்கும் அடிமையில்லை 
என்றே மகிழ்ந்திருந்தோமடா...  


அட சூழ்ச்சியறியாத் தென்டமே  
நான் பெத்த சதைப் பிண்டமே 
அந்த தாடிக் கெழவன - நீ 
எப்படிடா மறந்த முண்டமே 


அப்போ ஓடிப்போன பாப்பான் 
இப்போ வேற வடிவத்துல வந்திருக்கான் ...


வாழ ஆரபிச்சதும் வயிறு எரியறான் 
பைக்குல போனா  பொச்செரியறான்  
ஜீன்சு போட்டதுக்கு அன்னிக்கு அடிக்கறான் 
ஓட்டுப் போடலைன்னு இன்னிக்கு  அடிக்கறான் 



உன்னோட ஆத்தா கொடுத்த முலைவரிய
உன்னோட பேத்தி கொடுக்கனுமா ...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியார படி...


உன்னோட தாத்தா குடிச்ச சாணிப்பால 
உன்னோட பேரன் குடிக்கனுமா...??
வேண்டான்னு நீ நெனச்சா பெரியார படி...


"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு"
இந்த ஒருவரி உன்ன உசுப்ப வேண்டாமா...? 
நீ மானத்தோட வாழறத பாத்து - இந்த 
பெத்த வயிறு குளிர வேண்டாமா...?


பெரியார் என்பது பெயரல்ல சித்தாந்தம் 
பெரியார் என்பது பெயரல்ல சுயமரியாதை ...


கல்லைவிட்டு எறிஞ்சா நாய் கூட 
கொல்லுனு எதிர்த்து குலைக்குதடா 
கொல்லப்புறமா வந்த சாதிவெறி நாயிக 
குடிசைய எரிச்சுட்டு போகும்போது 
கல்லு மாறி சொரனையில்லாம இருக்கியேடா ...


அடிச்ச அடிக்கு திருப்பி அடிக்கலன்னா 
அப்புறம் என்னடா ஆம்பளை நீ....?


அட மானங்கெட்டவனே 
இனியாவது பெரியாரைப் படி 
இனி எவனாவது அடிச்சான்னா   
அப்பவே  திருப்பி அடி ....

No comments:

Post a Comment