ஐந்து ஐம்பதுக்கு
அலாரம் வைத்து எழுந்து
தேநீருக்கு உன்னை எழுப்பி
தேநீர் வரும் வரை
தவளை தூக்கம் தூங்கி
தலை மாட்டில் தேநீர்
மனம் நுகந்தெழுந்து
தலையனை முதுகுக்கு வைத்து
கண்மூடி தேநீர் ருசித்து
அப்போதே விழித்துவிடும் குழந்தைகள் கொஞ்சி
விளையாடக் கிளம்புகையில்
உன்னிடம் ஒரு வார்த்தை
"வெள்ளை சட்டை அயர்ன் பன்னிரு மா "
எட்டு ஐம்பதுக்கு வந்து
எடுத்துவைத்த வெந்நீரில் குளித்து
மடிப்பு கலையா ஆடைக்குள் நுழைந்து
சமைத்துவைத்த உணவு முடித்து
வேலைக்கு கிளம்புகையில்
உன்னிடம் ஒரு வார்த்தை
" போய்ட்டு வரேன்"
மூன்ற மணிக்கு திரும்பி வந்து
மழைநீர் குட்டையில் புரளும்
மாடெருமைக் கன்று போல உறங்கிஎழுந்து
எடுத்து வைத்த உணவுண்ணும்போது
உன்னிடம் ஒரு வார்த்தை
"நீ சாப்டியா?"
பிள்ளைகளை கொஞ்சிக் குதூகலித்ததில்
குழந்தைகளுடன் விளையாடிக் களைத்ததில்
உன்னிடம் ஒரு வார்த்தை
" டீ கொண்டு வா மா "
எப்படியும் ஏதாவதொரு
தொலைபேசி அழைப்பு
அவசரமென கதறும்
அப்போது உன்னிடம் ஒரு வார்த்தை
"போயிட்டு வரேன் "
பதினொரு மணிக்கு பக்கத்தில் வந்து
பாதி தூக்கத்தில் உன்னை எழுப்பி
சாப்பாடு வைக்கசொல்லும்போதும்
சலிப்பின்றி நீ பணிவிடை செய்கையில்
உன்னிடம் ஒரு வார்த்தை
" சரி நீ போய் தூங்கு "
ஆனாலும் ஒவ்வொரு முறை
நமக்குள் சண்டை வரும்போதும்
மறக்காமல் சொல்கிறேன்
உன்னிடம் ஒருவார்த்தை
" உனக்கு நான் என்ன குறை வச்சேன்?"
No comments:
Post a Comment