துவக்குகள் தூக்கி – நீ
களமாடும் காலம் வரும்
அதுவரை
தும்பிகள் விரட்டி - நீ
விளையாடு என் செல்வமே…
வைராக்கியத்தோடு – நீ
வாளெடுக்கும் நேரம் வரும்
அதுவரை
வகுப்பறைக்குச் சென்று – நீ
எழுதுகோளெடு என் செல்வமே…
வர்க்கக் கோபம் – நீ
காட்டிடும் காலம் வரும்
அதுவரை
வண்ணப்பூக்களை வரைந்து – நீ
மகிழ்ந்திரு என் செல்வமே…
ஏகாதிபத்தியச் சுரண்டலை – நீ
நெஞ்சுபிளக்கும் காலம் வரும்
அதுவரை
இனிய குழந்தைகளோடு – நீ
ஓடி விளையாடு என் செல்வமே…
பாசிசக் கொடுமைகளை – நீ
பழிதீர்க்கும் காலம் வரும்
அதுவரை
பாசமுள்ள தங்கைக்கு – நீ
வர்க்க உணர்வூட்டு என் செல்வமே…
மார்க்சியம் பயின்றதும் என்னை – நீ
”தோழர் ” என்றழைக்கும் காலம் வரும்
அதுவரை
”அப்பா “ என்றே என்னை – நீ
அழைத்துக்கொள் என் செல்வமே…
களைந்திடு உன் துயில்
மார்க்சியம் பயில்
துவங்கட்டும் செயல் – நாளை
உலகம் உழைப்பவன் கையில்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே…
No comments:
Post a Comment