அவை வெறும் எழுத்துக்கள்
சீரான இடைவெளியில் கோர்க்கப்பட்டு
வரிகளாக ஆகியிருந்தது.....
அவை வெறும் வரிகள்
சரியான நேர்த்தியோடு இணைக்கப்பட்டு
வாக்கியங்களாக ஆகியிருந்தது ....
ஒரு வரியை நான்கைந்தாய்
ஒடித்து ஒன்றன் கீழ் ஒன்றாக
அடுக்கப்பட்டிருந்தது....
அட! இவை கவிதைகள் ...
கவிதைகளில் பூக்களைதானே எழுதுவார்கள்
இங்கென்ன புரட்சியை எழுதியிருக்கிறார்கள் ...
கவிதைகளில் சொர்க்கத்தை தானே எழுதுவார்கள்
இங்கென்ன சுரண்டலை எழுதியிருக்கிறார்கள்...
மனதை வருடும் வழக்கமான மென்மை
ஏனோ இவற்றில் இருப்பதேயில்லை ,
ஒருவேளை இதில் உண்மை இருப்பதாலோ?
கவிதைகளுக்கு பொய் அழகாம் - அதனால்
இந்தக் கவிதைகள் அழகாயில்லை...
எந்த ஒரு இடத்திலும் இந்தக்கவிதைகளில்
பூ வாசம் இருப்பதேயில்லை
ஒவ்வொரு வரியிலும் வியர்வை வாசம் ...
'தாய்ப்பால் குடித்து வயிறு நிறைந்த
குழந்தையின் மயக்கத்தில்
உலகம் அழகானது'
மற்ற கவிதைகள் கூறுகின்றன ...
'ஒட்டிய வயிறோடு உலவும்
குழந்தையின் பசியின் மயக்கத்தில்
உலகம் அகோரமானது'
இந்த கவிதைகள் கூறுகின்றன ...
வரிகளில் உள்ள சிவப்புச்சாயம்
வாசிக்கும் கண்களில் ஒட்டிக்கொள்கிறது
கண்கள் மூடி சிந்திக்கும் நேரத்தில்
இயல்பாய் இதயத்தில் இனைந்து விடுகிறது...
வார்த்தைகளின் அலங்காரம் இல்லை
விஷம் கக்கும் வரிகள் இல்லை
போலி புகழ்ச்சி இல்லை
ஆதாயம் தேடி அடிவருடவில்லை
உண்மைகளை உரக்க சொல்லும்
வர்க்க உணர்வு
உணர்ந்து கொண்டால் நனவாகும்
உழைப்பவர் கனவு....
அடடே! கவிதையைப்பற்றி இத்தனை சொல்லிவிட்டு
கவிஞனை சொல்லாமல் போவதா?
அந்த தீப்பிடிக்கும் வரிகளுக்கு சொந்தக்காரன்
செங்கவிஞன், எங்கள் அன்புதோழன்
துரை சரவணன்...
அன்பு தோழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment