Tuesday, 26 April 2016

யூதம், கிருஸ்துவம், இஸ்லாம் பாலஸ்தீனிலிருந்து காசா வரை... (20.07.2014)



மனிதகுல வரலாற்றில் மதமும் அரசியலும் ஒன்றினையும் புள்ளி அனேகமாக எல்லா தேசங்களிலும் மோசமான விளைவுகளையே உண்டாக்கி இருப்பதை வரலாற்றின் எல்லாப்பக்கங்களும் நமக்கு கற்றுக்கொடுக்கின்றன. அந்த வகையில் பாலஸ்தீன வரலாறு தனித்துவமானது. மதங்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு தேசத்தின் அடித்தட்டு மக்களின் சமூகவாழ்வியலில், அடிப்படைஉளவியலில் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை வேறெந்த தேசத்தைக்காட்டிலும் பாலஸ்தீனில் அதிகம் உணர முடியும். அதாவது மதங்களின் வரலாறு ஒருதேசத்தின் வரலாறோடு இவ்வளவு நுனுக்கமாக பொருந்திப்போவதை வேறெந்த தேசத்திலும் காண்பது அறிது. மதங்களின் நான்காயிரம் வருட சரித்திரத்தை பாலஸ்தீன் வரலாற்றுடன் ஒரு அவசரப்பார்வை பார்க்கும் முயற்சி இது. வாருங்கள் பயனிப்போம்…

எண்பத்தைந்து வயது முதியவரான ஆபிரஹாமுக்கு அவரது மனைவி சாராவின் மூலம் குழந்தைப்பேறு இல்லாததால், அவரது வேலைக்காரப் பெண்ணான ஆகார் என்பவரை இரண்டாவதாக திருமனம்செய்து இஸ்மாயில் என்கிற ஒரு குழந்தை பிறக்கிறது. இஸ்மாயில் பிறந்து பணிரெண்டு ஆண்டுகளுக்குப் பின் முதல் மனைவி சாராவுக்கு ஈசாக் என்கிற குழந்தை பிறக்கிறது. ஈசாக் பிறந்ததும் இஸ்மாயிலும் அவனது தாயார் ஆகாரும் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். ஈசாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள், இஸ்மாயிலின் வழித்தோன்றல்கள் அராபியர்கள். இது யூதர்களின் புனித வேதமான ’தோரா’வில் நாலாயிரம் வருடங்களுக்குமுன்பு நடந்ததாக சொல்லப்படும் கதை. மிகச்சில மாறபாடுகளுடன் கிருஸ்துவர்களின் புனிதநூலான பைபிளிலும், இஸ்லாமிய புனிதநூலான குர்-ஆனிலும் இந்தக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வகையிலும் அராபியர்கள் யூதர்களை விட 12 வயது மூத்தவர்கள்.

”… கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரர்களைப் பின்தொடர்ந்தான். இஸ்ரவேல் புத்திரர்கள் பலத்த கையுடன் புறப்பட்டுப்போனார்கள்….”

                                                                                                                                             யாத்ராகாமம்,அதிகாரம்14,(8:23)

பைபிளின் பழையஏற்பாட்டில் வருகிற இந்தச்சம்பவம் யூதர்கள் எகிப்திலிருந்து பாலஸ்தீனுக்கு இடம்பெயர்ந்து வந்ததைப்பேசும் புராதான சான்று. யூதர்கள் பாலஸ்தீனுக்கு இடம்பெயரும்முன்பே அங்கு அராபியர்கள் வாழ்ந்துகொண்டிருந்ததைப் பற்றியும் பைபிளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆகவே வரலாற்றுக்கு முந்தியகாலங்களின் யூத, கிருஸ்துவ, இஸ்லாமிய புனிதநூல்களில் கிடைக்கும் குறிப்புகளின் அடிப்படையில் பாலஸ்தீனின் பூர்வகுடிகள் அராபியர்களே என்றமுடிவுக்கு வரமுடிகிறது.

இனி வரலாற்றுக்காலத்தைப் பார்ப்போம். இயேசு பிறப்பதற்கு 44 ஆண்டுகளுக்குமுன். யூதமதமே வலிமையானமதமாக கோலோச்சி வந்தது. பாலஸ்தீன பிரதேசம் பல சிறுசிறு சமஸ்தானங்களாக குறுநிலஅரசர்களால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தநேரம், ஜெருசலேம் நகரை ஆண்டுவந்த ஹாஸ்மோனிய மன்னன் ஹிர்கனஸ் 2. அவனது கவர்னரான ஹெரோத் என்பவர் மதகுருமார்களின் நீதிமன்றத்தைப் பரிசீலிக்காமல் செயல்பட்டதாக ஜெருசலேம் யூதமதநீதிமன்றம் அவரைக்கொல்ல ஆனையிட்டது.மன்னரின் ரகசிய உதவியால் அங்கிருந்து தப்பிய ஹெரோத், ரோமானியர்களால் ஆளப்பட்டுவந்த சிரியாவில்சென்று தஞ்சமடைந்தார். பிறகு ரோமானியர்களின் உதவியுடன் ஜெரூசலேமின்மீது படையெடுத்து வென்றார்.அதிலிருந்து ஹெரோத் ஆண்ட 33 வருடமும் ஜெருசலேம்வாழ் யூதர்கள் பெரும் இருப்பியல் சிக்கலை அனுபவிக்க நேர்ந்தது.

ஹெரோத் ஒரு யூதராக இருந்தபோதும் தனது ஆட்சிக்கு சிக்கல் தருபவர்களை, அல்லது சிக்கல் தருவார்கள் என சந்தேகித்தவர்களை அனைவரையும் கொன்று குவித்தார்.அதனால் அங்கிருந்து யூதர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேரத் துவங்கினர். பாலஸ்தீனிலிருந்து யூதர்கள் வெளியேறிய முதல்சம்பவம் இது. கொடுங்கோலனாக இருந்தாலும் ஹெரோத் செய்த இரு முக்கிய பணிகள் குறிப்பிடத்தக்கது, நிலமற்ற அனைத்து மக்களுக்கும் நிலம் கொடுத்தது. சாலமோன் மன்னரால் கட்டப்பட்டு பல தாக்குதல்களுக்கு இலக்காகி சிதைந்த நிலையில் இருந்த பழமையான யூதஆலையத்தை திரும்பவும் கட்டியது.
எகிப்தியரிடமிருந்து யூதர்களைக் காப்பாற்றி பாலஸ்தீன் அழைத்துச்சென்றவரும், ’பத்துக்கட்டளைகள்’ பெற்ற தீர்க்கதரிசியுமான மோஸசின்  நேரடி வாரிசுகள் கி.மு796 வரை ஜெருசலேமை ஆண்டுவந்தனர்.  கி.மு 836இல் முடிசூடிய சாலமோன் மிகுந்த கலைநயம் கொண்ட யூத தேவாலயத்தைக் கட்டினான். அங்கு மோஸசுக்கு கடவுள் வழங்கியதாக யூதர்களால் நம்பப்பட்ட ’பத்துகட்டளைகள்’ உடன்படிக்கைப்பேழை வைக்கப்பட்டது. சாலமோனுக்குப்பின் அவரது மகன் ரெஹோபோமின் திரமையற்ற ஆட்சியால் கி.மு796இல் ஒரு சிறு நிலப்பரப்பு பிரிக்கப்பட்டு, பத்து பழங்குடி இனக்குழுக்கள் சேர்ந்து தனியே ஆளத்துவங்கினர். அவர்கள் ஆண்ட பகுதி ஜுதேயா எனப்பட்டது.
கிமு 555இல் அசிரியர்கள் ஜுதேயாவையும், கிரேக்கர்கள்(பாபிலோனியர்கள்) ஜெருசலேமையும் கைப்பற்றினர். பாபிலோனிய மன்னன் நெபுசட்நேசர் அந்த யூத ஆலையத்தை இடித்தான். ஒரேயொரு ஒற்றைச்சுவர் மட்டுமே துக்கத்தின் சாட்சியாக எஞ்சியது. அந்த தேவாலயத்தைதான் ஹெரோத் இரண்டாவது முறையாக கட்டியிருந்தான்.
ஹெரோதின் காலத்தில் நிகழ்ந்த இன்னொரு மிக முக்கிய நிகழ்வு இயேசுவின் பிறப்பு. இஸ்ரேல் மக்களை ஆளப்போகும் ஒருவன் பிறந்திருக்கிறான் என்ற யூத குருமார்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரண்டு வயதுக்கு கீழே உள்ள எல்லா குழந்தைகளையும் கொன்றுவிட ஆனையிட்டான். ஹெரோத் உத்தரவைத்தொடர்ந்து இயேசுவின் பெற்றோர் குழந்தையுடன் எகிப்துக்கு தப்பிச்சென்றனர்.

ஹெரோதின் மரனத்திற்குப்பின் தனது இளமைக்காலத்தில் ஜெருசலேம் வந்த இயேசு மிகுந்த பக்திமானாக இருந்தார். ஹெரோது மன்னனால் இரண்டாவதாக கட்டப்பட்டிருந்த யூத ஆலயத்திலேயே பெரும்பாலும் இருந்தார். ஜோர்டான் நதிக்கரையில் யோவான் என்பவரிடம் ஞானஸ்நானம் பெற்று மக்களிடையே உரையாடத்துவங்கினார். தன்னை மனிதகுமாரன் என்று அழைத்துக்கொண்ட இயேசுவின் சொற்பொழிவுகள் கடுமையான யூதசட்டங்களால் அழுத்தப்பட்டுவந்த சாதாரன மக்களை பெரிதும் கவர்ந்தது. ஏழைமக்களை பாதிக்கக்கூடிய வகையில் இருந்த மதச்சட்டங்களை எதிர்த்த புரட்சிகரமான செயல்பாடுகளும்(இங்கு புரட்சிகரமான என்ற சொல் அதன் உள்ளார்ந்த பொருளில் சரியாகவே அமையும் ஏனினில் வல்லமை மிகுந்த யூதகுருமார்களை எதிர்த்து சாமானியர்களுக்கான மதமாக கிருஸ்துவத்தை அவர் அறிமுகப்படுத்தினார்) எளியமக்களுக்கு அவர்ஆற்றிய மருத்துவ சேவைகளும் மக்கள் அவரைபின்பற்ற காரனமாக அமைந்தது. இதனால் வெறுப்புற்றிருந்த யூத சனாதனிகள் இயேசுவைக் கொல்ல தருனம் பார்த்துக்காத்திருந்தனர். சாமானியமக்களின் பாவங்களுக்கு!? பரிகாரமாக கொழுத்த இளம் கன்றுக்குட்டியின் சதைப்பிடிப்புள்ள மாமிசப்பகுதிகளை குருமார்களுக்கு கொடுத்துவிட்டு ஏனைய பகுதிகளை நெருப்பில் பலியிடவேண்டும் என்பதுபோன்ற சூழ்ச்சிகரமான சாங்கியங்களை எதிர்த்து கர்த்தரை விசுவாசிப்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற இயேசுவின் அழைப்பு சாமானியர்களைக் கவர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.

கடுமையான அச்சுறுத்தலுக்கு நடுவிலும் இயேசு தமது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். சாலமோன் ஆலையம் மீண்டும் இடிக்கப்படும் என்ற இயேசுவின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து யூதகுருமார்கள் இயேசுவைக்கொல்ல உத்தரவிட்டனர். யூதாஸ் என்கிற அவரது சீடரால் முப்பது வெள்ளிக்காசுகளுக்கு ஆசைப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். மூன்றாவதுநாள் இயேசு உயிர்த்தெழுவார் என்று நம்பிய யூதர்கள் கிருஸ்துவர்களானார்கள். நம்பாத யூதர்கள் யூதர்களாகவே தொடர்ந்தனர். ஆனாலும் கிருஸ்துவர்களாக மாறாத யூதர்கள் இயேசுவைக் கொன்றவர்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகி, கிருஸ்துவர்களால் வெறுக்கப்பட்டனர்.

கி.பி.66 இல் ஜெருசலேம் ரோமானியர்களின் ஆளுமைக்குட்பட்ட ஒரு பகுதியாக இருந்தது. அந்தக்காலத்தில் ரோமானியர்களுக்கென்று தனி தெய்வங்கள் எதுவும் கிடையாது. மன்னன்தான் கடவுள். அன்றைய ரோமப்பேரரசின் மன்னன் அனைத்து தேவாலயங்களிலும் தனது சிலையை மட்டுமே வைத்து வனங்கவேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்ததைத் தொடர்ந்து ரோமானியர்களுக்கு எதிராக ஸிலாட் என்ற புரட்சிப்படையை உருவாக்கி யூதர்கள் ரோமானியர்களை எதிர்த்தனர். இதனால் கோபமுற்ற மன்னன் ஜெருசலேம் மீது போர்தொடுத்து பல்லாயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்ததோடு, சாலமோன் ஆலயத்தையும் இடித்துதள்ளினான் (கி.பி 70). அங்கிருந்து விலைமதிப்புமிக்க பல ஆபரனங்கள் ரோமுக்கு கடத்தப்பட்டது. இந்த ஆலயத்தை இன்னொரு தேவதூதன் வந்து கட்டித்தருவான் என்று இன்றுவரை (இன்றுவரை) யூதர்கள் காத்திருக்கிறார்கள்.

இயேசுவின் தீர்க்கதரிசனமான ”தேவாலயம் இடிக்கப்படும்” என்ற வார்த்தை உன்மையானதும் இன்னும் அதிகமான மக்கள் கிருஸ்துவத்தை பின்பற்றத் துவங்கினர்.கி.பி 115 இல் சைப்ரஸிலும் எகிப்திலும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் துவங்கிய யூதர்களின் எழுச்சியும், கி.பி 132இல் ஜுதேயாவில் துவங்கிய எழுச்சியும் ரோமானியர்களால் கொடூரமாக நசுக்கப்பட்டது. பல்லாயிடக்கணக்கான யூதர்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டனர். இந்த எழுச்சிகளின் நோக்கம் ஒன்றுதான் ஜெருசலேமைத் தலைமையாகக்கொண்ட யூதப்பேரரசு.

உலகின் பலபகுதிகளில் கிருஸ்துவம் வேகமாக பரவத்துவங்கியிருந்தது. யூத மதத்தில் அவர்கள் பின்பற்றிய தூய்மைவாதத்தால் மதமாற்றம் என்பதற்கு அனுமதி இல்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும், இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல கி.பி 313இல் ரோமானிய மன்னன் கான்ஸ்டண்டைன் கிருஸ்துவ மதத்திற்க்கு மாறினான். அதுவரை மன்னனையே கடவுளாக வனங்கிவந்த மக்கள் கூட்டம் கூட்டமாக கிருஸ்துவ மதத்தித் தழுவினர். யூதர்கள் வயிற்றுக்குள் புளி கறையத்துவங்கியது. மதம் மாறியவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது, யூதர்கள் புரக்கணிக்கப்பட்டனர். யூதர்களின் மீது மதரீதியான புறக்கனிப்புகளையடுத்து ரோமப்பேரரசின் ஆளுகைக்கு அப்பாற்ப்பட்ட தேசங்களுக்கு ஸ்பெய்ன்,ரஸ்யா,ஜெர்மனி,போலந்து,வடக்கு ஆப்பிரிக்கா போன்ற தேசங்களுக்கு யூதர்கள் இடம்பெயர்ந்தனர்.
கி.பி614இல் பெர்சியர்களுக்கும் ரோமுக்கும் இடையிலான போர்மேகம் சூழ்ந்திருந்தது. இந்த போரில் வெற்றிபெற்றால் ஜெருசலேமை யூதர்களுக்கு கொடுத்துவிடவேண்டும் என்னும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் யூதர்கள் பெர்சியர்களுடன் சேர்ந்து ரோமுக்கு எதிராக போரிட்டனர். அந்தவெற்றியைத் தொடர்ந்து யூதர்களின் ஆட்சி மீண்டும் ஜெருசலேமில் எற்பட்டது. அங்கிருந்த கிருஸ்துவர்களை யூதர்கள் அடித்துவிரட்டினர். கிருஸ்துவ தேவாலயங்கள் உடைக்கப்பட்டன.
ஆனால் இந்த சந்தோசம் மூன்று ஆண்டுகள்கூட நீடிக்கவில்லை. மீண்டும் ஜெருசலேம் கிருஸ்துவர்கள் கைக்கு சென்றது. யூதர்கள் மீண்டும் ஒடுக்குமுறையுடன் வாழத்துவங்கினார்கள்.அதுவும் நிலைக்கவில்லை ஹெராக்லிடஸ் என்ற ரோமானிய மன்னன் மீண்டும் ஜெருசலேமைக் கைப்பற்றி அங்கிருந்த யூதர்களை கட்டாய மதமாற்றம் செய்தனர். மதம் மாறாதவர்களை அடித்துவிரட்டினர், கிளர்ச்சியாளர்களைக் கொன்றொழித்தனர். யூதர்களை சுத்தமாக துடைத்தெரிந்தபிறகு ஒரு கிருஸ்துவ ரானுவஅரசு ஜெருசலேமை ஆண்டது.

இதுபோதாதென்று மன்னன் கான்ஸ்டண்டைனின் ஒரு உத்தரவு இடிபோல வந்திறங்கியது, இனி ரோமப்பேரரசில் கிருஸ்துவ மதம்தவிர வேறுமதங்களுக்கு அனுமதிஇல்லை. ஜெருசலேமிலிருந்த மற்றும் அதைச்சுற்றியிருந்த அனைத்து யூத தேவாலயங்களும் இடிக்கப்பட்டன. திரும்பிய திசையெல்லாம் கிருஸ்துவ தேவாலயங்கள் கட்டப்பட்டன.

சரி.. இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் அராபியர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?. வரலாறு இன்னும் அராபியர்களை பகடைகளாக உருட்டத்துவங்கவில்லை, அவர்கள் அமைதியாக!? தங்களுக்குள் அடித்துக்கொண்டு 360 வகையான சிலைகளை வணங்கிக்கொண்டும் இருந்தார்கள். அவர்களுக்கான ஆட்டம் கி.பி.609இல் ஒரு மனிதரில் இருந்து துவக்கப்பட்டது. அவர் முஹம்மது. இறைவனின் இறுதி தூதர் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படும் மனிதர். கல்வியரிவற்ற முரட்டுத்தனமான காட்டரபிகளை மனிதர்களாக மாற்றிய மனிதர்.

பலப்பல இனக்குழுக்கலாக பிரிந்திருந்த அரேபியர்கள், அவர்களின் முன்னோரான இப்ராஹிம் (முதல் பேராவில் பார்த்த ஆபிரஹாம்) உருவாக்கிய வனக்கஸ்தலமான க’அபா வில் பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 360 வகையான விக்ரகங்களை வைத்து தினம்ஒரு கடவுளை வணங்கி வந்தனர். யூதமதமும், கிருத்துவமதமும் உயர்வானது என்னும் தாழ்வு மனப்பான்மையில் வாழ்ந்துவந்த படிப்பறிவற்ற மூடர்களாகவே இருந்துவந்தனர்.

ஒருசமயம் மழையால் இடிந்துபோயிருந்த க’அபா வின் மறுகட்டுமானப்பணியில் பல இனக்குழுவினரும் ஒன்றினைந்து ஈடுபட்டனர். பனிகள் முடியும் தருவாயில் ஒரு விசேசமான ’ஹஜ்ருல் அஸ்வத்’ எனும் கல்லை க’அபா வின் சுவற்றில் எந்த கோத்திரத்தார் பதிப்பது என்ற பிரச்சனையில் ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டு நின்றனர். சிறுசிறு பிரச்சனைகளுக்கு சண்டையிட்டுக்கொண்டு பல தலைகளை உருளச்செய்த சம்பவங்கள் மிகச்சாதாரனமாக நிகழும் அராபிய மூடர்கூட்டம் என்பதை அறிந்திருந்த பெரியவர்கள் தலையிட்டு ஒரு பொதுவான சமரசமுடிவுக்கு வந்திருந்தனர், அதாவது அடுத்த நாள் காலை யார் முதன்முதலில் வழிபாட்டிற்காக க’அபா விற்குள் நுழைகிறாரோ,அவரிடம் ஆலோசனை கேட்பது, அவர் யாரை சொல்கிறாரோ அந்த கோத்திரத்தார் கல்லை பதிப்பது என்றும் முடிவானது.

அதன்படி அடுத்தநாள் காலையில் முதல்ஆளாக க;அபாவிற்குள் நுழைந்து தொழுகை முடித்து வெளிவந்து முஹம்மதுவிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர் தனது தோளில்இருந்த துண்டைவிரித்து அதன்மீது அந்தக்கல்லை வைத்து துண்டின் முனைகளை ஆளுக்கொருவர் பிடித்து எடுத்து சுவற்றில் பதிக்கும்படி ஆலோசனை கூரினார். நடக்கவிருந்த ஒரு பெரும் கலவரம் இவ்வாறு தடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை இங்கே கூறக்காரணம் பின்நாட்களில் முஹம்மதுவால் அமையவிருக்கும் மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மையப்புள்ளி இதுதான், அதாவது இஸ்லாமிய சகோதரத்துவம்.
முஹம்மது தம்மை இறைத்தூதராக இனம்கண்டுகொண்ட மூன்றுஆண்டுகளுக்கு பின்புகூட இஸ்லாத்தில் நாற்பதுபேர் மட்டுமே  இனைந்திருந்தனர். வெளிப்படையாக தொழக்கூட அஞ்சி மறைவிடங்களில் தொழுதுவந்தனர். முஹம்மதுவைக் கொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் வந்து பின்பு முஸ்லிமாக மாறிய பலசாலியும் வீரருமான உமர் மூலமாக வெளிப்படையாக க’அபாவில் முஸ்லிம்கள் தொழத்துவங்கினர். மெக்கா நகரில் முஹம்மதுவை ஏற்றுக்கொள்ளாத குரைஷிகளின் தொந்தரவால் முஸ்லிம்கள் முதலில் எத்தியோப்பியாவுக்கு சென்றனர். பின்பு யூதர்கள் அதிகம் வாழும் பகுதியான மதினாவுக்கு முஹம்மதுவும் அவரைப் பின்பற்றியவர்களும் இடம்பெயர்ந்தனர்.

முஹம்மது அறிமுகப்படுத்திய மார்க்கத்தால் கவரப்பட்டு மதினாவாழ் அராபியர்களும் யூதர்களில் சிலரும்கூட கூட்டம்கூட்டமாக இஸ்லாத்தைப் பின்பற்ற ஆரம்பித்தனர். விரைவிலேயே முஹம்மது அங்கு மிகுந்த செல்வாக்குள்ள ஆளாக மாறியிருந்தார். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருந்தது. மதினா நகர யூதர்கள் முஹம்மதுவை இறைத்தூதராக ஏர்றுக்கொள்ளாவிட்டலும், ஒருவருக்கொருவர் ஆபத்துக்காலங்களில் உதவுவது எனும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருந்தனர். ஜெருசலேமிலிருந்து விரட்டப்பட்ட நாளிலிருந்து அனுபவித்த வலிகள் யூதர்களுக்கு முஸ்லிம்களின் மூலம்கிடைக்கும் பாதுகாப்பு அவசியமாக உனரவைத்தது.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் பலதருனங்களில் இஸ்லாமியர்கள் யூதர்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர், ஆனால் இஸ்லாமியர்களின் பிரச்சனைகளில் யூதர்கள் நடுநிலை வகிப்பதாக கூறிக்கொண்டு விலகி இருக்கவே விரும்பினர். மேலும் முஹம்மதுவையும், இஸ்லாத்தையும் தரம்தாழ்த்தி பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். யூத மதம் தவிர மற்ற எல்லா மதங்களும் கீழானவை என்ற என்னம் கொண்டவர்கள் யூதர்கள்.இதுபோன்ற சிக்கல்களால் இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்குமான பினைப்பு சிதையத் துவங்கியது.

மதினாவில் முஹம்மதுவின் தலைமையில் ஒரு குட்டி சாம்ராஜ்யமே உருவாகி இருந்தது. கி.பி 630 இல் ஒருதுளி இரத்தம் சிந்தாமல் மெக்காவை வெற்றிகொண்டார். ஒரு பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய முஹம்மது பிரசித்திபெற்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

“நமது குடியரசில் தம்மை இனைத்துக்கொள்ளும் யூதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும், அவர்கள் முஸ்லிம்களுக்கு சமஉரிமை படைத்தவர்கள்.அவர்கள் தமது மத வழக்கங்களைப் பின்பற்றிவாழ எந்தத் தடையும் இல்லை. அனைத்து இனக்குழுக்களையும் உள்ளடக்கிய மதினாவாழ் யூதர்கள் முஸ்லிம்களுடன் இனைந்து உருவாக்குகிற தேசம் இது”
முஹம்மது ஒரு ஆட்சியாளராக வெளியிட்ட முதல் அரசு அறிக்கை. ஆசிரியர் பா.ராகவன் வார்த்தையில் சொன்னால் ”…இது.முஹம்மது எதிர்பார்த்ததைப்போல யூதர்கள் இஸ்லாமியர்களுடன் இனக்கமாக நல்லுறவைத் தொடர்ந்திருந்தால், பின்னாளில் உறங்க இடமின்றி உலகெங்கும் ஓடிக்கொண்டிருக்கவேண்டிய நிலை யூதர்களுக்கு ஏற்ப்பட்டிருக்காது.”
மெக்கா மதினா உள்ளடக்கிய இஸ்லாமிய சாம்ராஜ்யம் அமைக்கப்பட்ட அடுத்த இரண்டு ஆண்டுகளில் முஹம்மதுவின் மரனத்திற்கு பிறகு(கி.பி 632) அடுத்த கலீபாவாக பொறுப்பேற்றுக்கொண்ட அபுபக்கரும் இரண்டாண்டுகளில் இறந்துவிட, அடுத்த கலீபாவாக பொறுப்பேற்றுக்கொண்டவர் உமர். கி.பி 638 இல் ஜெருசலேமை வென்ற உமர் ரோமானிய கிருஸ்துவ ஆட்சியாளர்கள் போலின்றி முஹம்மது கூறியபடியே மத துவேசங்களின்றி ஒரு நால்லாட்சி செய்தார். ஜெருசலேமில் உமரின் நகர்வலத்தின் இறுதியில் உமர் ஆற்றிய சொற்பொழிவில் யூதர்கள், கிருத்துவர்கள்,இஸ்லாமியர்கள் மூவருமே இப்ராஹிமின் (ஆபிரஹாம்) வழித்தோன்றல்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும் கிருஸ்துவர்களால் விரட்டப்பட்ட யூதர்களை மீண்டும் ஜெசுசலேமுக்கு வந்து வாழும்படி அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பு பின்னாளில் இஸ்லாமியர்களுக்கே எதிரான படுகுழி தோண்டும் என்பதை அப்போது அவர் அரிந்திருக்க வாய்ப்பில்லை. உமரின் அழைப்பைத் தொடர்ந்து குடும்பம் குடும்பமாக யூதர்கள் பாலஸ்தீனுக்கு திரும்பிவந்து குடியேறினர்.  ரோமானிய, கிருத்துவ ஆட்சியாளர்களோடு ஒப்பிடுகையில் உமரின் இஸ்லாமிய ஆட்சியில் யூதர்களுக்கு எந்த பிரச்சனையுமின்றி வாழ்ந்தனர் என்பதை, யூத வரலாற்றாசிரியர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால் உமரின் இந்த நல்லாட்சி அடுத்தடுத்து வந்த கலீபாக்களால் தொடரவில்லை, கி.பி 717 இல் ஆண்ட கலீபா (அவர் பெயரும் உமர் தான்) இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை ’திம்மிகள்’ (பாதுகாக்கப்பட்டோர்) என்று அழைத்து. புதிய சட்டதிட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. புதிய வரிகள் விதிக்கப்பட்டது, வியாபாரங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதுபோதாமல் இஸ்லாமிய சகோதரத்துவம் என்னும் சிந்தனை மறந்து அண்டைதேசங்களுடன் மோதல்களில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து வந்த கலீபாக்களின் திறமையின்மையால் இஸ்லாமியபேரரசு ஆட்டம்கானத் துவங்கியது.
அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் கிருஸ்துவ போப்புகளின் அதிகாரமையம் ஆளும் அரசுகளைவிட வலுவாக இருந்தது. அப்போதைய கிருஸ்துவ போப் அர்பன்-2 தனது வலிமையை!? நிரூபிக்க என்னினார், கிருஸ்துவ திருச்சபைகளின் மாநாடுகளை நடத்தி, ”இயேசு பிறந்த கிருஸ்துவர்களின் புனிதபூமியான ஜெருசலேம் இஸ்லாமியர்கள் கையில் இருப்பது அவமானம், அதனை மீட்டே தீரவேண்டும் , இஸ்லாமியர்களுக்கு எதிரான போரில் பங்குபெற கிருஸ்துவர்களே திரளுங்கள், இந்த போர் இயேசுவுக்கான போர் என்பதால் கைகளில் சிலுவைகளை ஏந்தி போரிடுங்கள்” என்று அழைப்பு விடுத்தார். கி.பி.1096இல் துவங்கிய இந்த 150 ஆண்டுகால நீண்ட, பல லட்சக்கனக்கான உயிர்களைக் காவுவாங்கிய இந்தக்கொடிய யுத்தம் சிலுவைப்போர்கள் என்று வரலாற்றில் பதிவானது.

(சிலுவைப்போர்களில் இருந்து இன்றுவரை அடுத்த பதிவில் தொடர்வோம்.)

No comments:

Post a Comment