Friday, 29 January 2016

possessiveness.. (03.07.2013)

முக்காடு போடாமல்
வாசலில் நிற்காதே
புர்கா அணியாமல் 
வீதியில் நடக்காதே 

ஜன்னத்து கிடைக்காது 
ஜன்னலில் பார்க்காதே
மையத்தும் மதிக்காது 
மாடியில் உலவாதே 

சத்தமாய் சிரித்து 
சைத்தானை அழைக்காதே 
வெட்கமற இருந்து 
இப்லீஸை இழுக்காதே 

தலை நிமிர்ந்து நடந்து 
'தவ்பா' வை இழக்காதே 
பலர்முன்பு பேசி
'பத்வா 'வாங்காதே 

எவ்வளவோ தடைகள் 
எப்போதும் விதிக்கிறாய் ,
என் சுயத்தின் கழுத்தை -இரு 
கைக்கொண்டு  நெறிக்கிறாய் 

என்சுதந்திர வானில் 
முள்வலையை விரிக்கிறாய் 
உன் ஆதிக்கச் சங்கிலியில் 
என் பெண்மையை பினைக்கிறாய் 

ஒழுக்கம் என்கிறாய் -பெரும் 
கற்பு என்கிறாய் -எனைப் 
பண்டமாய்ப் பார்க்கிறாய் -வெறும் 
பொருளாய் நினைக்கிறாய் 
பொறுப்பென பிதற்றுகிறாய் 
பாதுகாப்பென கதைக்கிறாய் 

உன் குற்றங்களை நியாயப்படுத்த 
குரானையும் ஹதீசையும் 
துனைக்கழைத்துக்  கொள்கிறாய் 

நான் தூங்குகையில் 
கைபேசியில் தேடுகிறாய் 
நான் குளிக்கையில் -என் 
நாட்காட்டியில் நுழைகிறாய் 

என் முகநூலை உளவு பார்க்க 
முகமூடியில் வருகிறாய் 
புர்காவில் மூடாத 
என் முகக்கண்களை வேவுபார்க்க 
நான் அறியாமல் தொடர்கிறாய் 

நடக்கையிலும் நிற்கையிலும் - ஒரு 
ஜோடிக்கண்கள் எனை 
ஊடுருவிப் பார்ப்பதை 
அவ்வப்போது உணர்கிறேன் 

பேசும்போதும் சிரிக்கும்போதும் - ஒரு 
திருட்டுக்கண்கள் என் அந்தரங்கத்தில் 
நுழைவதை எப்போதும் அறிகிறேன் 

தாய்ப்பாலின் தூய்மை அளக்க 
தராசு கேட்கும் இரக்கமற்றவன் நீ 

மறுமொழி சொன்னால் 
முகம்பார்க்க மறுக்கிறாய் 
காரணம் கேட்டால் 
கண்பார்த்து முறைக்கிறாய் 

உயிர்அழும் நேரங்களில் 
உறங்காமலே விடிந்துபோன 
இரவுகளை நீ அறிவாயா?

என் தலையணை ஓரங்களில் உறைந்துபோன 
உப்புநீர்  ஓவியங்களை 
என்றாவது நீ உணர்வாயா?

வேர்களின் அழுகுரல் 
வெட்டுபவற்கு தெரிவதில்லை 

பறவையின் அபலக்குரல் 
வேடர்களுக்கு புரிவதில்லை 

உன்னைப் பொறுத்த வரை நான் 
உன் காமம் தணிக்கும் போகக்காரி 
உன் வீட்டைப்பெருக்கும் வேலைக்காரி 

இன்ஷா அல்லாஹ் இன்னல் தீருமென்று 
இரவும் பகலும் தொழுதும் கூட 
எல்லாம் வல்லவனின் கிருபை 
எனக்கு மட்டும் கிடைக்கவில்லை 

செத்துவிடத்தான் நினைக்கிறேன் 
பெற்ற பிள்ளை முகம் தடுக்குது - உன்னை 
விட்டுவிடத்தான் நினைக்கிறேன் 
உற்ற சொந்தம்  வந்து முறைக்குது 

சமாதனம் சொல்ல வரும் 
சொந்தங்களுக்கு எப்படிச்சொல்வேன் 
என் தன்மானம் தற்கொலை செய்து 
ஆண்டு சில ஆனதென்று 

இயல்பான புரிதல் மறுத்து 
எதிர்மறை எண்ணம் வளர்த்து 
எண்ணங்களால் குழம்பித் தவித்து 
குழப்பத்தில் சுயநிலை இழந்து 

உன்னை நீயே உணர மறந்து 
விபரீத கற்பனையில் பறந்து 
எங்கோ எதையோ தேடித்திரிந்து 
தொலைத்தாய் நீ அமைதி மருந்து 

இல்லாத பழியொன்றை 
என்மேல் சுமத்த துடிக்கிறாய் 
உன் சந்தேகக்  கருநஞ்சை 
possessiveness என அழைக்கிறாய் 

சந்தேகம் உள்ளே வந்தால் 
சந்தோஷம் ஓடிப்போகும்

இனியாவது உணரப்பழகு 
இயல்பாக வாழப்பழகு 
இல்லையெனில் தூர விலகு 
எனக்கும் உண்டு ஒரு பெரிய உலகு...

வலை விரிக்கும் காவி பயங்கரவாதமும், ஆத்திரமூட்டலுக்குப் பலியாகும் சிறுபான்மைச் சமூகமும்.. (28.08.2013)

இரு தினங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா(?) விற்கு
அழைப்பிதழ் கொடுத்துச் சென்றனர் . அதில் பிரதானமான வாசகம் என்னவெனில்

" மதம் மாறுவதால் எண்ணிக்கை குறைவதாய் நினைக்காதே ,எதிரி அதிகமாகிறான்"

இதன் பொருள் என்ன? இந்த வாசகத்தின் நோக்கம் என்ன?
அதாவது ஹிந்துக்கள் அல்லாதவர்கள் அனைவரையும்
ஹிந்துக்களின் எதிரிகளாக  சித்தரிக்கும் ஒரு கருத்தியலை
ஹிந்துக்களின் பொதுப் புத்தியில் திணிப்பதே ஆகும்.



'call  the  dog  mad  before  shoot ' "ஒரு நாயை கொல்லும் முன்
அதற்க்கு  வெறி பிடித்திருக்கிறது என்று அனைவரையும் நம்பச் செய் " 
காவி வகுப்புவாதிகளின் அடிப்படை செயல் திட்டம் இதன் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது 


அதாவது ஒரு நாயை காரணமின்றி கொல்லும்போது ஜனநாயக சமூகம் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உண்மை., ஆனால் அதே நாயைப் பற்றி ஒரு எதிர் மறை பிம்பத்தை சமூகத்தின் பொதுப் புத்தியில் திணித்து அந்த நாயை வெறி பிடித்த மோசமான நாய் என்றும் அது இது வரை பலரை கடித்திருக்கிறது என்றும் ஒரு பொய்யை தொடர்ந்து கூறுவதன் மூலம் மக்களின் பொதுப் புத்தியில் இத்தகைய கருத்தியலை திணிப்பதன் மூலமும் அந்த நாயைக் கொல்வதற்கு எதிர்ப்பு இருக்காது என்பதை விடவும் ஆதரவும் கிடைக்கும் என்பது காவிக் கூட்டத்தின் பிரதான செயல்பாடு 


இதற்க்கு வலு சேர்க்கும் வகையில் அந்த நாயை,  தொடர்ந்து  ஆத்திரமூட்டலுக்கு உட்படுத்தும் போது அதன் இயல்பான எதிர்வினையை ஊதிப் பெரிதாக்க ஜனநாயக முகமூடி அணிந்த காவி ஊடகங்கள் துணை போகின்றன 


இந்த சூழலையும் காவி பயங்கர வாதத்தின் சூழ்ச்சிகளையும் தெளிவாக புரிந்து கொள்ள இயக்கவியல் பார்வை கற்றுக் கொடுத்திருக்கிறது , அதாவது கடந்த வரலாறுகளில் கிடைத்த அனுபவங்களை சமகால நிகழ்வுகளோடு பொருத்தி எதிர்கால நிகழ்வுப் போக்கை உணரும் தத்துவமே இயக்கவியல் . இது மார்க்சியப் பகுப்பாய்வில் ஒரு பகுதி.


நமக்கு மிக அருகில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்வோம் கோவையில் நிகழ்ந்த நவம்பர் படுகொலைகள் ( கலவரமல்ல திட்டமிட்ட இனப் படுகொலைகள்) ஒரு பிற்போக்கு அடிப்படை வாத இயக்கத்தை சேர்ந்த ஒரு தனி மனிதன் செய்த தவறுக்காக ( காவல் துறை அதிகாரி செல்வராஜ் கொலை ) காவல் துறையும் காவித் துறையும் இனைந்து நிகழ்த்திய இனப் படுகொலைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது  


இந்த கொலைகளுக்கு எதிர் வினையாக அந்த இஸ்லாமிய அடிப்படைவாத பிற்போக்கு அமைப்பு நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்பு ,அதன் விளைவாக நிகழ்ந்த கலவரங்கள் (பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை சகித்துக்கொள்ள முடியாது, இந்த குண்டு வெடிப்புகளுக்கு அப்போதே கண்டனம் தெரிவித்தது மட்டுமன்றி அந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை தடை செய்ததை வரவேற்கவும் செய்தோம்)


இந்த குண்டுவெடிப்பின் மூலம் அப்போதைய அரசியல் நிலையில் தமிழக அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியதை மறுக்க முடியாது , இந்த குண்டு வெடிப்பை பெரிய அளவில் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சென்றதில் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது , ஒரு அடிப்படை வாத இயக்கத்தினர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் அளவிற்கு ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது அதன் விளைவாக அப்போதைய பாராளுமன்ற தேர்தலில் மதவாதக் கட்சியான பிஜேபி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது .


நாம் இதை கூறுவது எந்த வகையிலும் அந்த இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்பை நியாயப்படுத்த அல்ல, அது போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் பின்னால் இஸ்லாமிய மக்கள் அணி திரள்வது எந்த வகையிலும் எதிரியை வென்றெடுக்கவோ அவர்களை அம்பலப் படுத்தவோ உதவாது என்பதை விடவும் எதிரிக்கு சாதகமான நிலைமைகளையே உருவாகும் என்பதை உணர்த்தவே , 


இந்த சம்பவங்களை நாம் இப்போதைய சமகால நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கையில், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வெறியில் தமது வழக்கமான அருவருக்கத்தக்க செயல் திட்டமான மக்கள் மத்தியில் மதத் தீயை விசிறி விட்டு குளிர் காயும் சூழ்ச்சியில் அதன் செயல் திட்டங்கள் இருப்பதை காணலாம் .


சமீபத்தில் இந்துத்துவ அமைப்பின் பொறுப்பாளர்களின் கொலைகளுக்கு அவர்களின் தனிப்பட்ட வியாபார ரீதியான போட்டிகளும் , தனிப்பட்ட ஒழுக்கம்(?) சம்பந்தப்பட்ட காரணங்களும் இருப்பினும் , இந்தக் கொலைகள் இஸ்லாமிய அமைப்பினர் திட்டமிட்டு  நிகழ்த்திய கொலைகள் என்பதைப் போல ஒரு பிம்பத்தை உருவாக்க அவர்கள் செய்த சூழ்சிகளை பார்த்தோம்,  மூலைக்கு மூலை  வீரவணக்கம் தாங்கி நிற்கும் பிளெக்ஸ் போர்டுகளும், படுகொலை புரிந்த இஸ்லாமிய தீவிரவாதிகளை கைது செய் என்கிற ரீதியிலான சுவரொட்டிகளும் ,ஹிந்துக்களிடமே வியாபாரம் செய்வோம் ஹிந்துக்களுக்கு மட்டுமே வாடகைக்கு வீடு கொடுப்போம் ஹிந்துக்களின் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்குவோம் இஸ்லாமியர்களை தனிமைப் படுத்துவோம் போன்ற பரப்புரைகளைத் தாங்கி வலம் வந்த நோடீஸ்களும் மெனக்கெட்டதைப் பார்த்தோம் ,


இன்னொரு ஹிந்துத்துவ அமைப்பின் நிர்வாகி தம்மை இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாகவும், அவர்களுடன் கராத்தே கலையை பயன் படுத்தி சண்டையிட்டு அவர்களை வீழ்த்தி தப்பி வந்ததாகவும், தமக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்றும் ஒரு பொய்யான புகாரை கொடுத்து பரபரப்பை ஏற்ப்படுத்தினார்

 புலன் விசாரணை செய்த காவல் துறை, அவர் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றதை கண்டு பிடித்து பொய் புகாரை கொடுத்த குற்றத்திற்காக அவரை கைது செய்து சிறையில் தள்ளியது . அவர் இப்போது ஆயுதம் தாங்கிய காவலில் பத்திரமாக இருக்கிறார் 


இப்போது அயோத்தியில் ராமர் ஆலையம் அமைக்க மீண்டும் ஒரு யாத்திரைக்கு திட்டமிட்டு அந்த மாநில அரசின் அனுமதி இல்லாமல் போகவே பல்வேறு கலவரங்களையும் கலேபரங்களையும் நிகழ்த்தியதோடு , நேற்றைய மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அமளி செய்தது 


இது போன்று வெகுஜனங்களின் மத்தியில் இஸ்லாமிய எதிர்ப்பு பிம்பத்தை விதைக்கவும் ,சிறு சிறு உரசல்களை ஊதிப் பெரிதாக்கி வன்முறையை தூண்டி அரசியல் ஆதாயம் அடையவும் எல்லா வழிகளிலும் முயற்சி செய்கின்றன. ஒரு பெரிய மத மோதல் உருவாகாமல் இந்த மதவாத அமைப்பு ஆட்சியை பிடிக்க முடியாது , ஆக அன்றைய கலவரம் போல ஒரு கலவரத்தை எங்காவது அரங்கேற்ற முழு வீச்சில் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர் . வாய்ப்புகளுக்கு காத்திருக்கின்றனர் , வாய்ப்புகளை உருவாக்க செயல்படுகின்றனர் . 


இந்த சூழலில் அவர்களது சூழ்ச்சிக்கு பலியாகாமல் , அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இரையாகாமல் மதவாத அமைப்புகளை வென்றெடுப்பதே நம் முன் இருக்கும் சவால் , மிக முக்கிய சமூக ஜனநாயக கடமையும் கூட.


இத்தகைய சிக்கலான சூழலில் எதிரியை வென்றெடுக்க சிறுபான்மை சமூகத்தினர் செய்ய வேண்டியது என்ன?


1. வகுப்புவாதம் என்பது குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் ஆபத்தானது ,அந்த வகுப்பு வாதத்திர்க்கெதிரான ஈவிரக்கமற்ற போர்ப் பிரகடம் செய்வதும், அந்த போராட்டத்தில் தமது பங்களிப்பை செலுத்துவதும் அனைவருக்குமான சமூக கடமை , அந்த சமூக கடமையை நிறைவேற்றுவதிலிருந்து ஒதுங்கிச் செல்லுதல் மனிதசமூகத்திற்கு செய்யும் துரோகம் என்பதை உணருங்கள் 


2. வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணருங்கள் , நமது கற்பனைக்கு எட்டாத அளவிற்கு எதிரியின் தொடர்புகளும் ஊடுருவல்களும் மிக மிக ஆழமாக பரவி இருப்பதை இனியும் புறந்தள்ளி விட முடியாது என்பதை உணருங்கள் 


3.எதிரியை உணருங்கள் , எதிரி பலமானவன் மட்டுமல்ல அறிவானவனும் கூட , அவனை அறிவுத் தளத்திலும் எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிரியின் சித்தாந்தத்தை அறிந்து கொள்வதன் மூலமும் , அவர்களது சூழ்சிகளை புரிந்து கொள்வதன் மூலமும் அவர்களது கீழ்த்தரமான தந்திரங்களை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்த அறிவுத் தளத்தில் முழு வீச்சில் செயல் படத் தயாராகுங்கள்.


4. எல்லா இஸ்லாமியர்களையும் எதிரிகள்என்று பிரகடனப் படுத்தும் வகுப்புவாதிகளைப் புறக்கணிப்பது போல எல்லா ஹிந்துக்களும் எதிரிகள் என்று பிரகடனப் படுத்தும் வகுப்பு வாதிகளையும் புறக்கணிக்க வேண்டும் 


5. இஸ்லாமியர்கள் எதிர்க்க வேண்டியது ஹிந்துக்களை அல்ல ஹிந்து வகுப்பு வாதத்தை என்பதை உணருங்கள் 


6.இஸ்லாமியர்களின் சக்தி அடையாள அரசியல் அமைப்புகளின் பின்னால் அணிதிரள்வதன் மூலம் பிளவுற்று விரயமாவதை உணரவேண்டும்.


7. இடது சாரி அமைப்புகள், பெரியாரிய அம்பேத்கரிய சமூக ஜனநாயக அமைப்புகளோடு மட்டுமன்றி வகுப்புவாதத்தை வெறுக்கும் ஹிந்துக்களோடும் சேர்ந்து ஒரு பொது தளத்தில் (common  platform) நின்று போராடுவதன் மூலம் மட்டுமே வலிமையான எதிரியை வெல்ல முடியும் , எதிரியை அம்பலப்படுத்தி தனிமைப் படுத்த முடியும்.


8.தேசிய அளவில் மதவாதக் கட்சியின் வாக்கு சதவீதம் ( கூட்டணி கட்சிகளையும் சேர்த்து ) 23 சதவீதம், மீதமுள்ள 77 சதவீதத்தில் இஸ்லாமியர்களின் ஒட்டு வீதமான 14 சதத்தை கழித்தாலும் மீதமுள்ள 63 சதவீத மக்கள் வகுப்பு வாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் ,நமது போராட்டத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்ளாமல் இருப்பது முதிர்ச்சியற்ற செயல் என்பதையும் உணருங்கள்.

ஈமானுக்கு சமர்ப்பனம்...(19.12.2013)

வழக்கமாக நாங்கள் கிரிக்கெட் வலைப்பயிற்சியில் ஈடுபடும் அந்த காம்பவுண்டுக்குள் இருவாரங்களாக பழைய டையிங் மெசின்கள் சில இருப்பதைப் பார்க்க முடிந்தது.


நேற்று காலையில் வழக்கம் போல பயிற்சிக்கு செல்கையில் ,ஓடாத பழைய மெசின்களை வெளி மாநிலங்களில் வாங்கி அதை பழுதுபார்த்து ஓடும் நிலைக்கு சரி செய்து  உள்ளூரில் விற்பனை செய்யும் தொழிலை செய்து வருபவரும், அந்த பழைய மெசின்களின் உரிமையாளருமான ஒருவரை சந்திக்க நேர்ந்தது.அவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் வழக்கமான வியாபார ரீதியான விசாரிப்புகளுக்கு நடுவே அந்த மெசின்களைப் பற்றிய பேச்சில் அவை அகமதாபாத்தில் இருந்து வாங்கியதாக கூறினார்.


நமது பாரதப் பிரதமர் ( அட...!!  இன்னும் தேர்தலே வரலையா?) மன்னிக்கவும்,  வித்தியாசமான கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சியின்  பிரதமர் வேட்பாளர் , நாட்டுக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்து வரும் கட்டை பிரமச்சாரி(?!)  நமோ சாஹேப்  ( சஸ்பென்ஸ் மனைவி 'ஐசோதா பென்' நினைவுக்கு வந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல) அவர்களின் முன்மாதிரி மாநிலமல்லவா ? இளம்பெண்ணை உளவுபார்த்த 'வைப்ரன்ட்' தலைவரின் மாநிலமல்லவா? அது குறித்து தெரிந்துகொள்ள விசாரித்தேன் 


அவரது வார்த்தைகளில்....


" இந்த மெசினை வாங்கியது அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு பகுதி. அங்கு முஸ்லிம்களின் நிலைமை கிட்டத்தட்ட அகதிகளின் நிலைக்கும் கீழே தான் இருக்கிறது .ஒரு நல்ல உடை அணிந்த முஸ்லிம் ஆணையோ நல்ல புர்கா அணிந்த முஸ்லிம் பெண்ணையோ நீங்கள் அங்கு பார்க்க முடியாது ....


முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்கள் சேரிக்களை விட மோசமான நிலையில் சுகாதாரக்கேடு மலிந்து கிடக்கிறது.சாக்கடை தெருவில் ஓடுகிறது,சாக்கடையில் கால் வைக்காமல் நீங்கள் அந்த பகுதியைக் கடக்கவேண்டுமெனில் உங்களுக்கு சர்க்கஸ் வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும் .சாக்கடையில் நனையாத கால்களுடனும், சாக்கடை நீர் தெறிக்காத  ஆடைகளுடனும் அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குள் நுழைய முடியாது....


பள்ளிவாசல்களில் அச்ச உணர்வோடுதான் தொழவேண்டி உள்ளது. தொழும் உரிமையும் நிச்சயமற்ற நிலையிலேயே இருக்கிறது பர்ல் தொழுகை முடித்து சுன்னத்து தொழுகையை  முழுமையாக முடிக்கக்கூட அவகாசம் தராமல் பள்ளிவாசல் நிர்வாகி நம்மை விரட்டுகிறார்.அவசர அவசரமாக அனைவரையும் வெளியேற்றி பள்ளிவாசல் பூட்டப்படுகிறது.அது அவரது தவறல்ல,  அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலாக யாரும் பள்ளியியில் இருந்தால் கிடைத்திருக்கிற இந்த தொழும் வாய்ப்பும்  பறிக்கப்படலாம் என்கிற பதட்டமே அவரது கண்டிப்புக்கு காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது...


இந்த மெசின்களை நான் வாங்கியது ஒரு முஸ்லிம் வியாபாரியிடம். இந்த மெசினை கழற்றுவதற்கு ஆறு பேர் செய்யக்கூடிய வேலையை பதினொரு பேர் செய்கிறார்கள்.அந்த வியாபாரி அவருக்கு நான் கொடுத்த பணத்தில் அவரது முதலீட்டுக்கு தக்கவாறு சிறு இலாபம் மட்டும் எடுத்துக்கொண்டு மீதமிருப்பதை என் கண்ணெதிரேயே வேலை செய்த அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தார்.விசாரித்தபோது அவர் மட்டுமல்ல அந்த பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் அப்படித்தான் என்பதை அறிந்தேன்.அதற்கு அவர் கூறிய காரணம் என்னை கண்கலங்க செய்தது. அவரது வார்த்தையில் கூறினால் " 2002 இனப்படுகொலைகளுக்கு முன்னாள் இவர்களும் நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள் தான்.அந்த அழித்தொழிப்பில் இவர்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டார்களே  தவிர உடைமைகளையும் சொத்துக்களையும் காப்பாற்ற முடியவில்லை.முஸ்லிம்களின் வீடுகளும் தொழில் நிறுவனங்களும் வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு தேடித்தேடி அழிக்கப்பட்டபோது இவர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டு  பஞ்சப் பராரி நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.  இப்போது வரை இவர்கள் கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்து கிடைக்கும் அற்ப கூலியில் காலம் தள்ளுகிறார்கள்.இப்போது நீங்கள் பார்த்தீர்கள் இரண்டு நாட்களாக இங்கு வேலை செய்தார்கள்.இவர்களுக்கு இனி எப்போது எங்கு வேலை கிடைக்கும் என்கிற நிச்சயமில்லை. இந்த பணத்தைக்கொண்டு இரண்டொரு நாளைக்காவது அவர்களது குழந்தைகள் பட்டினியின்றி இருக்கும் என்கிற 'ஈமான்' தான்" என்றார்.


மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினர் நல நிதியிலிருந்து இதுவரை ஒரு ரூபாய் கூட பெறாத பெரிய மனம் படைத்த 'வைபிரன்ட்' நாயகனை குஜராத் முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டதாக  ஊடக விபச்சாரிகள் தொடர்ந்து ஊதும் கோயபல்ஸ் பிரச்சாரத்துக்கு விளக்குப் பிடிக்கும் வேலையைச் செய்த அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக(?!) அரசியல் விபச்சாரிகளின் ஈமானுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.

காசில்லாதவர்கள் சாகத்தயாராகுங்கள்..(05.05.2014)

கடந்த வாரத்தில் நண்பர் ஒருவர் அவரது உறவினர் மகனை நாய் கடித்துவிட்டதாக பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அரசு மருத்துவமனையில் வெறிநாய்கடிக்கு மருந்து இல்லை என்றும் வெளியில் இருந்து வாங்கிவரச் சொன்னதாகவும் கூறினார், மேலும் அரசு மருத்துவமனையின் சேவைக்குறைபாடு, சுகாதாரக்குறைபாடு பற்றியெல்லாம் 'சமூக அக்கறையோடு' வெகுவாய் அங்கலாய்த்துக் கொண்டார். அரசின் வசமிருக்கும் பொதுத்துறைகளின் தரம் இப்படித்தான் இருக்குமென்றும் தனியார் மயமே அனைத்துக்கும் தீர்வு என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்தார்.


அப்போது அவரிடம் நான் "உங்களிடம் வெளி மருந்துக்கடைகளில் மருந்துகள் வாங்கும் வசதி இருப்பதால் வாங்கினீர்கள்,அந்த வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்டேன். ""அட என்னங்க நீங்க இந்தக்காலத்துல 350 ரூபாய் கூட செலவு பண்ண முடியாதவங்க இருப்பாங்களா?" என்றார். அவரது சமூக புரிதலின் அளவுகோல் இப்படித்தான் இருந்தது.


"நாய்க்கடிக்கு நான்கு முதல் ஐந்து ஊசிகள் வரை போட்டுக்கொள்ளவேண்டும் அப்படியானால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்யத் தகுதியுள்ளவர்கள் மட்டுமே உயிர் வாழத் தகுதி உடையவர்கள். அப்படி செலவழிக்க இயலாதவர்கள் செத்துப்போய் விடலாமா? மனித உயிர்களின் விலையை நிர்ணயிக்க இவர்களுக்கு யார் உரிமைகொடுத்தது?" என்றேன்.


"நீங்க உடனே அமெரிக்க சூழ்ச்சி, பன்னாட்டு நிறுவனங்கள் சதின்னு பேச ஆரம்பிச்சுருவீங்களே" என்றார்.கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பெரும்பாலானவர்களின் புரிதலின் அளவுகோல் இந்த ரீதியில் தான் உள்ளது.


இந்த நாய்க்கடி மருந்துக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் இடையில் இழையோடும் அரசியல் குறித்தும் இந்திய ஏழை மக்களின் உயிரின் விலையை நிர்ணயிக்கும் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் லாப வெறியையும் அம்பலப்படுத்தும் முயற்சியே இப்பதிவு.


உலகில் கண்டறியப்பட்ட நோய்களிலேயே மிகக் கொடுமையான நோய் எதுவென்று கேட்டால் நம்மில் பலர் உடனே எய்ட்ஸ் என்று கூறுவார்கள் ஆனால் அதை விட கொடுமையான நோய் இந்த வெறிநாய்க்கடி(ரேபிஸ்) நோய் என்பதுதான் உண்மை. நோயின் அறிகுறிகள் தென்பட்ட பிறகு இதை குணப்படுத்த வழியே இல்லை. இப்போது  போடப்படும் மருந்துகள் கூட நோயைத் தடுக்கும் தடுப்பு ஊசிகள் தானே தவிர நோயைக் குணப்படுத்தும் மருந்து அல்ல.


வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய், பூனை போன்றவை கடிக்கும் போது இந்த நோய் உண்டாகிறது.அத்தகைய விலங்குகளிடமிருந்து பரவும் வெறிநோய் வைரசின் பெயர் லைஸா வைரஸ் (Lyssavirus) என்பதாகும். இந்த வகை வைரஸ் நமது உடலில் ரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு அனுக்கலான வெள்ளை அணுக்களுக்கு தெரியாமல் மத்திய நரம்பு மண்டலத்தில் சேர்ந்து இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும்,


கொடுமை என்னவெனில் இந்த நோய் முற்றும் வரை அதன் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. நோய் முற்றிய பிறகுதான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.அறிகுறிகள் தென்பட ஆரம்பித்த  ஓரிரு நாட்களிலேயே மரணம் ஏற்பட வாய்ப்புண்டு.  


இந்த வைரஸ்கள் துவக்கத்தில் உடல்வலி, பின் தலைவலி அதன்பின் காய்ச்சல் என்று கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றும். ஒருகட்டத்தில் மூளை செல்களின் தன்மையை மாற்றி மூளை வீக்கத்தை ஏற்ப்படுத்துகிறது.மூளை நமது கட்டுபாட்டை இழந்து தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிக்கிறது, உடல்வலி, மன அழுத்தம், நீரைக் கண்டால் பயமும் வெறியும் ஏற்படும். உணவை விழுங்க முடியாது. ஆனால் நீர் வேண்டும் வேண்டும் என்று கத்துவார்கள். அவர்களுக்கு மனப்பிரமை ஏற்படும். ஏராளமாய் பிதற்றுவார்கள். மற்றவரைக் கண்டால் நாய் போலவே குரைப்பார்கள், ஓடிவந்து கடிக்க வருவார்கள். உடல் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும்.வாயிலிருந்து எச்சில் அதிக அளவு வழிந்துகொண்டே இருக்கும் . அந்த எச்சிலில் கோடிக்கணக்கான வைரஸ்கள் வெளியேறிக்கொண்டிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகள் சில செயலற்றுப் போய்விடும். பின் உடல் அசையாமை, சித்தம் மாறிய நிலை போன்றவை ஏற்படும். ஒரு கட்டத்தில் கோமா நிலையை அடைந்து  இறுதியில் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகையில் மரணம் நிகழ்கிறது.


இதுபோன்ற கொடிய வியாதியிலிருந்து நம்மை காக்கும் மருந்தில் பன்னாட்டு அரசியலைக் காண்போம்.இந்த நோய்க்கான மருந்தை 1885 இல் லூயி பாஸ்டர் கண்டறிந்தார்,அந்த மருந்தை மனித உயிர்களின் மேல் பரிசோதிக்க அவர் மிகுந்த தயக்கம் கொண்டார் காரணம் மனித உயிர்களின் மீது அவர்க்கிருந்த அக்கறையும், மனிதாபிமானமும் தான். அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை இன்று லாபவெறி பேய்கள் எப்படிப்பட்ட சூழ்ச்சியுடன் மனித உயிர்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆட்டின் மூலையில் ராபிஸ் கிருமியை செலுத்தி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'நரம்புத் திசு தடுப்பு மருந்து' இந்தியாவில் ரூபாய் 4 க்கு கிடைத்துக்கொண்டிருந்தது.வழக்கமாக தொப்புளைச் சுற்றிலும்  போடுவார்களே அந்த வகை மருந்து இது.


உலக சுகாதார நிறுவனம் திடீரென்று இந்த வகை மருந்துகள் பக்கவிளைவை ஏற்ப்படுத்துவதாகக் கூறி இந்த மருந்துகளை தடை செய்யவேண்டுமென இந்தியாவை நிர்பந்தித்தது.(இந்த உலக சுகாதார நிறுவனமென்பது பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் ஊதுகுழல் அதாவது அல்லக்கை என்பது குழந்தைக்கு கூட தெரியும்.)


அவ்வாறு அந்த மருந்தை தடை செய்வதற்கு உ சு நிறுவனம் கூறிய காரணம் தான் ஜீரணிக்க முடியாததாக இருந்தது.அதாவது இந்த ஊசியைப் போட்டுக்கொண்டவர்களில் 1600 பேர்களில் ஒருவருக்கு அரிப்பு, தசைப்பிடிப்பு, மயக்கம் போன்ற பக்கவிளைவு ஏற்படுகிறதாம், இந்த ஊசி போட்டுக்கொண்டஒன்னரை லட்சம் பேர்களில் ஒருவருக்கு மரணம் நிகழ்கிறதாம் எனவே இது தரமற்ற மருந்து எனவே இதை தடை செய்துவிட்டு மனித திசுக்களிலிருந்து நவீன முறையில் தயாரிக்கப்படும் பன்னாட்டு நிறுவங்களின் தரமான (எனவே விலை உயர்ந்த)  மருந்தைப் பயன்படுத்தும்படி அன்பாக!? கட்டளை இட்டது. இந்த மருந்தின் விலை ரூபாய் 350 லிருந்து 750 வரை.(புது தில்லியின் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அகர்வால் இந்த வகை புதிய மருந்துகளும் அந்தப் பழைய மருந்துகள் போலவே பக்கவிளைவுகள் ஏற்ப்படுத்துகின்றன,என்கிறார்)


இந்த உலக சுகாதார நிறுவனத்திற்கு அப்படி நமது இந்திய மக்களின் மீது என்ன திடீர் கரிசனை என்று மண்டையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம் உலக அளவில் வெறிநோய் பாதிப்பு இந்தியாவில் மட்டும் 80 சதவிகிதம்.அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 35 லட்சம் பேர் ஆட்டுமூளைத் திசு தடுப்பு மருந்து மூலம் சிகிச்சை பெற்றுவந்தனர், இந்த 35 லட்சம் வாடிக்கையாளர்களை (நோயாளிகளை) பெற்று, அவர்களுக்கும் பன்னாட்டு மருந்துகளை பயன்படுத்தினால்  அந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஆண்டுக்கு 2000 கோடிக்கு மேல் கொள்ளை லாபம் அடைய முடியும் .இதற்காகத் தான் இந்த உ.சு. மையத்தின் இந்திய மக்களின் மீதான திடீர் கரிசனத்துக்கு காரணம்.


காலப்போக்கில் இந்த வகை பன்னாட்டு மருந்துகளை இந்திய அரசு நிறுவனமான மனித உயிரியல் கழகம் தயாரித்தது, ஆனாலும் இதற்கான மூலப்பொருள்களுக்கு அமெரிக்கா,பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனங்களை மட்டுமே நம்பி இருக்கவேண்டியதானது. இந்த மனித உயிரியல் கழகம் தயாரிக்கும் மருந்தை அரசு, ரூபாய் 138 க்கு பெற்று அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டது, (ஆனாலும் இந்த இழப்பு வரிகள் போன்ற வேறு வடிவங்களில் மக்களாகிய நம்மிடம் தான் வசூலிக்கப்பட்டு ஈடுசெய்யப்படும் என்பது வேறு கதை.) 


.2005 இல் அமுலுக்கு வந்த அறிவுச் சொத்துடைமை விதிகள் ஒப்பந்தம் மூலமாக இந்த வாசலையும் அடைத்து அரசு நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்திய பெருமை!? நமது  சின்ன அய்யா அன்புமணி ராமதாசையே சேரும்.அதன் பிறகு ஒட்டு மொத்த இந்திய சந்தையையும் சைடாஸ்   காடிலா,அவந்திஸ் பாஸ்டர்,அவச்திஸ் பார்மா, ஆகிய மூன்று ஏகபோக நிறுவனங்கள் கைப்பற்றிக்கொண்டன. இந்த வகை மருந்துகளின் ஏகபோக உற்பத்தியாளர்கள் இவர்கள் மட்டுமே, இவர்களே மருந்தின் விலையை அதன் மூலம் இந்திய மக்களின் உயிரின் விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது தான் இப்போதைய நிலை.அதாவது இப்போது ஒவ்வொரு வெறிநோய் பாதித்த இந்தியனின் உயிரின் விலை ஒரு ஊசியின் விலை ரூபாய் 350வீதம் ஆறு ஊசிக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய்.ஆக இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்ய முடியாதவர்கள் சாகத் தயாராகுங்கள் என்பது தான் இந்த நிறுவனங்களும் நமது(!?) அரசும் நமக்கு சொல்ல வரும் செய்தி.


தெருவில் திரியும் வெறிநாய்க்கடிக்கு மருந்து போட்டு விடலாம் தேசத்தைக் குதறும் லாபவெறி நாய்களை என்ன செய்யப்போகிறோம்???


பங்களா நாய்களால் பாதுகாக்கப்படும் வர்கத்தை தெருநாய்கள் கடிக்க வாய்ப்பில்லை,ஏழை நடுத்தர உழைப்பாளி வர்க்க மக்களின் உயிரை தெருவில் திரியும் வெறிகொண்ட நாய்களிடம் இருந்து மட்டுமல்ல நமது தேசத்தைக் கடித்துக் குதறும் இதுபோன்ற பன்னாட்டு வெறிநாய்க் கடியிலிருந்தும்,அதற்க்கு துணைபோகும் எலும்புத்துண்டுக்கு அலையும் இந்திய அதிகாரவர்க்க நாய்களையும் அடித்து விரட்ட புரட்சிகர அரசியலைப் புரிந்துகொண்டு புரட்சிகர  அமைப்புகளின் பின்னே உழைக்கும் வர்க்கமாய் அணி திரள்வோம் . வெறி நாய்க் கூட்டங்களை விரட்டி அடிப்போம்...

நோன்பு..(29.06.2014)

"பர்வீனு...,எலா பர்வீனு... எந்திரிலா...பள்ளியில சஹருக்கு கூப்பிடற சத்தம் காதுல விழலையா? நாளு கெழமையின்னு இல்லாம இப்படி 'மையத்து' கணக்கா தூங்கரத பாரு... சைத்தான்..., இருக்கிற 'பலா முசீபத்து' பத்தலண்டா இப்படி தூங்கற? சஹருக்கு நேரமாச்சி ,எந்திரி லா ..."


இளம் மருமகளைக் கரித்துக்கொட்டியபடி 'பொடக்காலி'யை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் கைருன்னிசா கிழவி.எழுபதை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வயது, மூன்று பிள்ளைகளைப் பெற்று ஐந்து வயதுக்குள் இரண்டை காலராவுக்கும், பெயர் தெரியாத ஒரு காய்ச்சலுக்கும் பலிகொடுத்தது போக, கடைசி மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்து , காலா காலத்துல ஒரு அடக்க ஒடுக்கமான பொண்ணா பார்த்து, நிக்காஹ் முடிச்சுவச்சும்..., சின்னஞ்சிறுசுக ரெண்டு வருசங்கூட சந்தோசமா வாழல.


பொறந்துவளந்த பொட்டல்காட்டுல பொழப்புக்கு வழியில்லன்னு குடும்பத்தோட திருப்பூர் வந்து,ஒரு சாயப்பட்டரைக்கு வேலைக்கு சேந்தான். அங்க சாயம்போடுற கண்டகண்ட கெமிக்கல்ல பொலங்கிப் பொலங்கி, என்ன 'தலீந்தராகி' வியாதிய சம்பாதிச்சுட்டு வந்தானோ ? லொக்கு லொக்குனு மூணுமாசமா இருமிட்டு இருந்தவன்,பொசுக்குனு ஒரு நாள் விட்டுட்டு போய்ட்டான். மருந்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் நக நட்டெலாம் வித்தும் பிரயோசனமில்லாம,பர்வீனு புள்ள மூளியா உக்காந்திருக்கு.கொஞ்சநாள் கைருன்னிசா வேஸ்ட்டு குடோனுக்கும்,பர்வீனு பனியன் கம்பெனிக்கும் வேலைக்கு போனதுல 'தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு'  குடும்பம் ஓடிட்டு இருந்துச்சு, 


வேஸ்ட்டு குடோன்ல மொத்தமா மூட்டையில கலந்து இருக்கிற துணிய சைஸ் வாரியா, கலர் வாரியா பிரிச்சு தனி தனியா மூட்டைபோட்டு  கட்டனும், அதான் வேலை. ஆனா இந்த துணி பிரிக்கும்போது பறக்குற தூசி தான் பெரிய இம்சை. அன்னிக்கி பிரிச்ச துணிக என்ன கலருன்னு அடுத்த நாள் காலைல வெளிக்கு போற கலர வச்சு சொல்லிரலாம், அவ்வளவு தூசி தெனமும் மூக்குலையும் வாயிலையும்  போகும்.ஆனா என்னிக்கி இந்த எளவெடுத்த ஆஸ்த்துமா வந்துதொலஞ்சுதோ , அன்னில இருந்து அந்த வேலைக்கும் போறதில்ல, 


இப்போ வீட்டோட மொடங்கிக் கெடந்து இந்த பர்வீன் புள்ளைய 'நொய் நொய்'ன்னு ஏதாவது ஒன்னு நொரண்ட பேசி உயிரை வாங்கறத மட்டும் முழுநேர வேலையா செஞ்சுட்டு இருக்கு. 'எம்புருசனும் கச்சேரிக்கு போறான்'கிற கதையா, தெரு குழந்தைகளுக்கு ஓதிக்கொடுத்து கிடைக்கிற சொச்ச 'வரும்படி'ல, ஆஸ்துமாக்கு மருந்து வாங்கரக்கே பத்தரதில்ல, இப்போ பர்வீனோட 'வரும்படி' மட்டுந்தான் குடும்பத்துக்கு அரைவயித்துக்கஞ்சி ஊத்திட்டிருக்கு.


அந்த புள்ளையும் பாவம் வாழவேண்டிய வயசுல புருசன பறிகொடுத்துட்டு பனியன் கம்பெனியில பேக்கிங் வேலைக்கு போகுது, பேக்கிங் வேலை இல்லாதப்போ டைலருக்கு கை மடிச்சு கொடுக்கணும்.வாரம் முழுசும் வேலை இருந்தா ஒம்பது சிப்ட்டு, சிப்டுக்கு தொண்ணூறு ரூவா மேல என்நூத்து பத்து ரூபாய் கெடைக்கும் , அதுல டீ கடை அக்கவுண்டுக்கு நூறுரூபா போக எழுநூற்று பத்து ரூபாய் இருக்கும்,காலைல சாப்பிடாம வர்றதால டீ டைம்ல ஒரு டீயும் ஒரு போண்டாவும் சாப்பிட்டா தான் பொழுதுக்கும் தாக்குபிடிக்க முடியுது. தெனமும் நைட்டு ஒருவேளை தான் சாப்பாடு, சில நாள்ல அதுவும் இருக்காது.அந்த புள்ள இப்படி சகிச்சுக்கிட்டு பசியோடவே வாழ்ந்து பழகிருச்சு.


அப்படி இப்படி மாசத்துக்கு ரெண்டாயிரத்து ஐநூறு ரூவாய்க்கு கொறையாது. வீட்டுவாடக, கரண்டு பில்லு, வார வட்டிக்காரனுக்கு, மாச வட்டிக்காரனுக்கு,அக்கம்பக்கத்துல அவசரத்துக்கு கைமாத்து வாங்கினது எல்லாம் கொடுத்து,புள்ளைக்கு பால் பவுடரு, கெழவிக்கு மருந்து மாத்திர, வாங்குனதுபோக மிச்சம் இருந்தாதான் சாப்பாட்டுக்கு.ஓவர் டைம் வேலைசெஞ்சா எரநூறு முன்னூறு சேத்திக் கிடைக்கும்,ஆனா எவ்வளோ அர்ஜெண்டா இருந்தாலும் நைட்டு வேலை செய்யக்கூடாதுன்னு கெழவி கண்டிசனா சொல்லி இருக்கு, அதோட சொல்பேச்சு கேக்கலன்னா பேசியோ கொன்னுரும், கெழவி வாய்க்குள்ள இருக்கிறதா நாக்குன்னா  நெனச்சுட்டு இருக்கீங்க..?, அது வெஷக் கொடுக்கு. கலிச்சல போனவளே, அந்த மோளே இந்த மோளேன்னு அவளோட ராதி நன்னியில இருந்து உம்மா வரைக்கும் எல்லாரையும் அசிங்கப்படுத்திட்டு  தான் ஓயும். அந்த வசவுக்கு பயந்துட்டே பர்வீன் வாயத் தொறக்கறதில்ல.


கெழவி சொல்லறது கூட ஒருவகையில நல்லது தான், பகல்ல வேலை செய்யும்போதே முன்னபின்ன பொம்பளைங்களயே பாக்காதமாறி இந்த ஆம்பிளைங்க பார்வை ஊசி மாறி குத்துது, எப்படா மாராப்பு வெலகும்னு நாக்க சொட்டிக்கிட்டு எதிரே உக்காந்திருக்குற கான்ட்ராக்ட் காரன், "என்ன பர்வீன் நீ மட்டும் நைட்டு வேலைக்கு வரவே மாட்டிக்கிற? கூட மாட ஒத்தாசையா இருந்தா உனக்கும் செலவுக்கு நாளு காசு கிடைக்கும்ல?" என்று இரட்டை அர்த்தத்தில் சலவாய் ஒழுக்கும் மேனேஜர். அடுக்கிக்கட்டிய பீசுகளை எடுக்கும் சாக்கில் 'பின்புறம்' உரசிச்செல்லும் பிசிர்வெட்டும் சிறுவன். வேணுமின்னே கத்திரிய கீழ போட்டுட்டு அவ குனிஞ்சு எடுக்கும்போது 'உற்று' பார்க்கிற டைலர். இவங்களையெல்லாம் சமாளிச்சு பகல்ல வேலை செய்யறதே பெரிய போராட்டமா இருக்கு.


காலைல இருந்து நிக்க நேரமில்லாம நாய் மாறி பாடுபட்டுட்டு, வீட்டுக்கு வந்து வீடுவாசல் கூட்டி, சமையல் செஞ்சு , துணிமணி தொவச்சுபோட்டு.புள்ளைய தூங்க வச்சுட்டு படுக்கும்போது மணி பனிரெண்டு ஆயிருது.தூங்கலாமுன்னு நெனச்சு கண்ணா மூடினா, சட்டுன்னு தூக்கமும் வர்ரதில்ல.கடன் தொல்ல, புள்ளையோட எதிர்காலம் இதெல்லாம் நெனெச்சு நெனச்சு கவலைப்பட்டு புரண்டு புரண்டு படுத்து எப்போ தூங்கரான்னே தெரியாம தூங்கிப் போனவளத்தான் கைருன்னிசா கெழவி கரிச்சுக்கொட்டிட்டு இருக்குது. 


கெழவியோட சத்தத்தகேட்டு எந்திருச்சு பார்த்தா குழந்த ஒண்ணுக்கடிச்சு சேலையெல்லாம் நனைஞ்சு கெடக்குது,சஹர் நேரம் முடிய இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு. அவசர அவசரமா குளிசுட்டுவந்து,நேத்து மிஞ்சிப்போயி  தண்ணிஊத்திவச்ச சாப்பாட்டுல தயிர ஊத்திக் கரைச்சு கெழவியும், பர்வீனும் ஆளுக்கு ரெண்டு கிளாஸ் குடிச்சு,சஹர் செஞ்சு முடிச்சாங்க. நோன்பு வைக்கும் நிய்யத்த கிழவி சொல்லச்சொல்ல பர்வீனும் கூடவே சொல்லிக்கொண்டிருந்தாள், 


" நவைத்து சவ்மஹதின் அன் அதாயி....."


" நவைத்து சவ்மஹதின் அன் அதாயி....."


சஹர் செய்து முடித்து பஜ்ர் தொழுகைக்கான பாங்கு சப்தம் கேட்டதைத் தொடர்ந்து,சுப்ஹூ தொழுகை முடித்துவிட்டு,உறங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தையின் தலையை வருடியபடி அருகில் படுத்திருந்தாள். 


வீட்டிற்கு வெளியே ஜமாத்தார்கள் யாரிடமோ, மார்க்க அறிவுரைகள் கூறிக்கொண்டிருப்பது தெளிவாக காதில் விழுந்தது.


''மூமின்களே...உங்களின் முன்னோருக்கு விதிக்கப்பட்டது போலவே உங்களுக்கும் (நோன்பு) விதிக்கப்பட்டிருக்கிறது...'' என்கிற குர் ஆன் வசனத்தை கூறி நோன்பின் அவசியத்தை கூறிக்கொண்டிருந்தார்.


"நோன்பு என்பது..., ஏழைகளின் பசியை அனைவரும் அறிந்து கொள்வதற்காக இறைவன் செய்திருக்கும் உன்னதமான ஒரு ஏற்பாடு..." 


இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே படுத்திறந்த பர்வீனுக்கு ஒரு கேள்வி எழுந்தது. 


" பசியின் கொடுமையை உணர்வதுக்கு தான் நோன்புன்னா , என் மீதும் எதுக்கு நோன்பு கட்டாயமா விதிக்கப்பட்டிருக்கு?"

துரோகத்தின் சம்பளம்.. (23.09.2015)

“மா.. இன்னும் எவ்ளோ நேரம் இப்பிடியே ஒக்காந்துட்டு இருப்ப..? எந்திரிச்சு போய் படும்மா..”

மகள் பர்வீனின் வார்த்தைகளைக் காதில் வாங்காமலேயே குத்துக்கல் போல அமர்ந்திருந்தாள் சாஜிதா. இரண்டு மணிநேரமாய் அதே தின்னையில் தான் அமர்ந்திருக்கிறாள். வழக்கத்துக்கு மாறாக சாஜிதாவின் முகம் பேயறைந்தது போல இருந்தது. கண்ணங்கள் கந்திப்போய் கருத்திருந்தது. உண்மையில் பேய் தான் அறைந்துவிட்டது. சாஜிதாவின் கனவன் பஷீருடன் நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து கண்மன் தெரியாமல் அடித்து நொருக்கியிருந்தான் பஷீர். வீட்டுக்கு வெளியே தின்னையில் கலைந்த தலைமுடியுடன் கலங்கிய கண்களுடன் அலங்கோலமாய் அமர்ந்திருந்தாள் சாஜிதா. பஷீர் அடித்ததில் பல் குத்தியதில் மேல் உதட்டில் ஆழமாக காயமாகியிருந்தது. அதிலிருந்து உதிரம் கசிந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது சேலைத்தலைப்பால் அதைத் துடைத்துக்கொண்டு இருந்தாள்.

பர்வீனுக்குத்தான் மனசே இல்லை. ’ச்சே… எப்படித்தான் அம்மா இந்த மனுசனோட இவ்வளவு காலம் வாழ்ந்து தொலைச்சாளோ’ என்று நினைத்துக் கொண்டாள். ’என்னவோ எதிரிய அடிக்கிற மாதிரி அடிக்கிறாரு இந்த மனுசன். தல முடிய இறுக்கிப் பிடிச்சுட்டு நாக்கக் கடிச்சுட்டு மூஞ்சி மூஞ்சியா தொம்மு தொம்முனு குத்தறாரு. தடுக்கப்போன என்னையும் ஒதச்சு கீழ தள்ளிவிட்டுட்டாரு.. கோவம் வந்தா இந்த மனுசனும் மசநாயும் ஒன்னு… ஊருக்குள்ள நல்லவராட்டம் வேசம் போடறது. மொஹல்லாவுல முக்கியமான மனுசன். அஞ்சுவேள தொழுகையாளி, இபாதத்தான மனுசன்னு பேரு.. பொழுது விடிஞ்சா ஊருக்கெல்லாம் பயான் சொல்லப் போயர்றது.. ஆனா வீட்டுக்குள்ள இருக்கறவங்களுக்குதான தெரியும் இந்த மனுசனோட உண்மையான மொகம். வாயத்தொறந்தா அந்த மோளே இந்த மோளேன்னு வண்டி வண்டியா கெட்டவார்த்த வேற நாராசமா வந்து விழும். எதுத்து ஒரு வார்த்த பேசிட்டா நாய அடிக்கிற மாதிரி அடிப்பாரு. நெஜமா இந்தாளு மனுசனே இல்ல.. சைத்தான்.
அம்மா பாவம்… சத்தம்போட்டு கத்துனா பக்கத்து வீட்டுக்காரங்களுக்கெல்லாம் தெரிஞ்சு மானம் போயிடும்னு சத்தமே இல்லாம அடிவாங்கியே சாகுது.. எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து அந்த மனுசனும் மாறவே இல்ல. அம்மாவும் அடிவாங்கி ஒதவாங்கி, அசிங்கசிங்கமா பேச்சு வாங்கியே காலந்தள்ளுது. இந்த முசீபத்து என்னிக்குதான் தீருமோ..? அல்லாதாங் காப்பாத்தனும்..’  என்னென்னவோ யோசனைகளுடன் தின்னையில் அமர்ந்திருந்த சாஜிதாவின் அருகில் சென்று அமர்ந்தாள். அவளைத் திரும்பியே பார்க்காமல் எங்கோ வெரித்துப் பார்த்தபடி இருந்தாள் சாஜிதா.

நீளமான காம்பவுண்டு வீடு. இடப்பக்கம் ஐந்து வீடுகள் வலப்பக்கம் ஐந்து வீடுகள். நடுவே ஐந்தடி அகலத்திற்கு குறுகலான கான்கிரீட் போடப்பட்ட நடைபாதை. வெளியே இரண்டடி அகலத்திற்கு நீளமான தின்னை. வலப்பக்கம் மூன்றாவது வீட்டில் சாஜிதா வாடகைக்கு குடியிருக்கிறாள். பத்துக்குப் பத்து அளவுள்ள ஒரு அறையும் அதைத் தொட்டதுபோல பத்துக்கு ஆறு அளவுள்ள சமையலறையும் கொண்ட சிறிய வீடுகள் கொண்ட காம்பவுண்டு அது. ஆனால் வாடகை இரண்டாயிரத்து நூறு ரூபாய். கரண்ட் பில், தண்ணீர் காசு என கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாதம் பிறந்தால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வேன்டும். திருப்பூர் நகரப்பகுதியில் உழைக்கும் மக்களின் ஊதியத்தில் பாதியை வாடகையே களவாடி விடுகிறது. அதுபோக வாரவட்டிக்காரனுக்கு மாசவட்டிக்காரனுக்கு மளிகைக்கட கணக்கு, நல்லது கெட்டதுக்கு போக வர செலவு, பர்வீனோட காலேஜு செலவு எல்லாஞ் சேர்த்தா மாசம் ஏழெட்டாயிரம் இருந்தாத்தான் சமாளிக்க முடியும். பசீர் வாரம் ஆயிரம் ரூபாய் மட்டும் வீட்டுக்கு கொடுப்பான். பத்தாத குறைக்கு சாஜிதாதான் சமாளிக்கனும்.

அதுவும் வீட்டுல சும்மா இருக்கிறதில்ல, தெரு முனைல இருக்கிற ஒரு கம்பெனில இருந்து பனியன் பீசுகள மூட்டை கட்டி கொண்டுவந்து கொடுப்பாங்க. அதுகள பிசிர் வெட்டி மடிச்சு கட்டி பாலிதீன் கவர்ல போட்டு பேக்கிங் பன்னிக்கொடுத்தா டஜனுக்கு அம்பது பைசா கெடைக்கும். எப்படியும் தெனமும் நாப்பது அம்பது டஜன் பிசிர் வெட்டி இருபது முப்பது சம்பாதிச்சுடும். அதுபோக பூ கட்டறது, எம்பிராய்டரிங் போட்டுத் தர்றது. துணிகள்ல பாசிமணி கோர்க்கறதுன்னு எதாவது வேல செஞ்சு மாசம் ரெண்டாயிரம் ரூபா சம்பாதிச்சுடும். ஆனா என்ன அந்தக் காசுக்கு நைட்டும் பகலும் தூக்கமில்லாம, சோருதண்ணியில்லாம பாடுபடும். அப்படி அரக்கப்பறக்கப் பாடுபட்டும் அவங்களோட தலீந்தராகி தீந்தபாடு இல்ல, சாஜிதாவுக்கு முதுகெலும்பு தேஞ்சுபோய் நோயாளியானதுதான் மிச்சம்.முதுகுவலியோடவே போராடி காலத்த தள்ளிட்டு இருக்கு. போதாததுக்கு இந்த மனுசனோட அடி ஒத.. அப்படியே காலம் ஓடுது.

சாஜிதாவுக்கு பர்வீன நெனச்சுதான் எப்பவுமே கவலை. ‘வயசுவந்த கொமரு வீட்ல இருக்கு. அத நெனச்சா நைட்டு கண்ணமூடி தூங்க முடியல. இந்த வருசத்தோட காலேஜு முடிஞ்சிரும். அவளுக்கு ஒரு நல்லது கெட்டது பன்னிப்பாக்கலாம்னா வீட்ல பொட்டுத் தங்கமும் இல்ல. அவளுக்கும் வயசு ஏறிட்டே போகுது. போனவருசமே பி.காம் முடிச்சுட்டா, கட்டிக் கொடுத்திடலாம்னு ஆசதான். பணம் வேனுமே.. என்ன பன்றதுன்னு கைய பெசஞ்சுட்டி நின்னப்ப, ’அம்மா நாம் பி.எட் பன்றம்மா..’ ன்னு சொன்னிச்சு. அப்படியாவது ரெண்டு வருசம் தள்ளிப் போகட்டுமே, அதுக்குள்ள அல்லா ஒரு வழி காட்டாமலா போயிருவான்னு சரின்னு அனுப்பி வெச்சாச்சு. கண்ணமூடி முழிக்கறதுக்குள்ள ஒரு வருசம் முடிஞ்சுபோச்சு. இதுவரைக்கும் ஒரு வழியுங் காணோம்.

இந்த மனுசனுக்கு வீட்ல கொமரு இருக்கிற நெனப்பே இல்ல. வாரம் ஆயிர ரூபா வீசியெறிஞ்சுட்டா கடம முடிஞ்சதுன்னு நெனச்சுட்டு இருக்குறார். அம்பது வயச முழுங்கியாச்சு, இன்னும் விதவிதமா அலங்காரம் பன்னிட்டு திரியுது, மனசுக்குள்ள எளங்காளனு நெனப்பு. யாரு எப்படிப்போனா எனக்கென்னன்னு அதுபாட்டுக்கு சுத்திட்டு இருக்குது. மனுசனுக்கு குடும்பத்துமேல ஒரு புடிப்பே இல்ல.

பஷீருக்கு தெரியாம வாயக்கட்டி வயித்தக்கட்டி ஒரு அம்பதாயிரம் ரூபாய் சீட்டு போட்டிருந்தா சாஜிதா. போனவாரம் சீட்டு விழுந்துச்சு. கமிசன் பணம் போக நப்பதாயிரத்தி சொச்ச ரூபாய் கைக்கு வந்துச்சு. அத வெச்சு பர்வீனுக்கு ஒன்ற பவுன்ல தோடு ஜிமிக்கி ஒரு செட் எடுத்தறனும்னு ஈமானோட இருந்தா சாஜிதா. இத எப்படியோ மோப்பம்பிடிச்சுட்ட பஷீரு, அந்த பணத்தக் கேக்கப்போய் வீட்ல பெரிய சண்டை. தரமாட்டேனு மொரண்டு புடுச்சு சாஜிதாவ அடிச்சு ஒதச்சு அந்தப் பணத்த பிடுங்கிட்டுப்போய் பழைய மொபெட்ட குடுத்துட்டு புதுசா ஒரு வண்டி வாங்கிட்டு வந்துட்டார். கைனடிக் ஹோண்டா. இப்ப ரொம்ப முக்கியம்.

இப்படியெல்லாம் பன்றதால பஷீருக்கு வருமானம் இல்லைனு நெனச்சராதீங்க. யேவாரத்துல அது சரியான மலமுழுங்கி. கருங்கல்லக்கூட தங்கம்னு சொல்லி வித்துப்புடுவாரு. பேங்களூரு போயி சேலைகள வாங்கிட்டு வந்து இங்க கடனுக்கு கொடுத்து வியாபாரம் பன்னுறாரு. நல்ல வருமானம் கெடைக்கற தொழில் தான். எப்படியும் வாரத்துக்கு நாலஞ்சாயிரத்துக்கு கொறையாம வசூலாகும். அதுபோக பக்ரீத்து, பெருநாள் இப்படி எதாவது சீசன் யேவாரம் வரும்போது லம்ப்பா ஒரு அமௌண்ட பாத்துடுவாரு. ஆனாலும் எவ்வளவுதான் சம்பாதிச்சாலும் வீட்டுக்கு வாரம் ஆயிரம் ரூபாய் தான். இத்தனைக்கும் பீடி சிகரெட், தண்ணிகின்னி எந்த பழக்கமும் இல்ல. குடும்பத்துக்கு சோத்துக்கு இருக்குதோ இல்லையொ விதவிதமா டிரஸ் பன்னிக்குவாரு, கண்ணுக்கு சுருமா, தாடிக்கு மருதானி, உடுப்புக்கு அத்தர் பூசிட்டு நவாபு சுல்த்தான் கணக்கா சும்மா கமகமான்னுதான் சுத்துவாரு. நல்லபடியா பேசியும் பாத்தாச்சு, சண்டைபோட்டும் பாத்தாச்சு, அழுது புலம்பியும் பாத்தாச்சு ஒன்னும் வேலைக்காகல அந்த மனுசங்கிட்ட. அடிவாங்கி அடிவாங்கி ஒடம்பும் மனசும் மரத்துப்போனதுதான் மிச்சம். “நான் என்ன நெனைக்கிறனோ அததான் செய்வேனு” மல்லுக்கட்டிக்கிட்டு திரியிற மனுசங்கிட்ட இதுக்குமேல என்ன பன்றதுனு சடஞ்சுபோய் விட்டுருச்சு சாஜிதா. இதுக்கு மேல அல்லா விட்ட வழின்னு அதுபாட்டுக்கு அதோட வேலைகளப் பாக்க ஆரம்பிச்சுருச்சு.

அப்புறம் அந்தப் பணமெல்லாம் எங்கதான் போகுதுனு கேக்கறீங்களா..? ரொம்பநாளா அதே சந்தேகந்தான் சாஜிதாவுக்கும் மனசப்போட்டு கயிராட்டம் அறுத்துக்கிட்டு இருக்கு. இந்த மனுசன் சீட்டுகீட்டு ஆடுறாரா, இல்ல எதாவது தொடுப்புகிடுப்பு இருக்குதானு ரொம்பநாளா சந்தேகம்.. பேங்களூருக்கு சரக்கு வாங்க போற எடத்துல ஏதோ ஒரு பொம்பளயோட சகவாசம் இருக்குங்கிற விசயம் சாடமாடையா தெரியவந்துச்சு. வியாபாரத்துக்கு கூடப்போகிற மைதீன் பாய் ‘பாத்து சூதானமா இருந்துக்கம்மா, பஷீர்பாய் போக்கே சரியில்ல;னு நாலஞ்சு மாசம் முன்னமே எச்சரிக்கை கொடுத்திருந்தாரு. அது போனமாசந்தான் அப்பட்டமா தெரிஞ்சது.  

போனமாசத்துல ஒருநாள் பர்வீனுக்கு காலேஜ் டெர்ம் பீஸ் கட்டலன்னு வெளிய நிக்க வெச்சுட்டாங்களாம். வீட்லவந்து சொல்லிட்டு ஓ….னு அழுதுச்சு. கம்பெனியில நாலாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டிருந்த பணம் இன்னும் கைக்குவந்து சேரல. காலேஜ்ல போய் நிர்வாகிககிட்ட விசயத்த சொல்லி கைலகால்ல விழுந்து அடுத்தவாரம் கண்டிசனா கட்டிர்றோம்னு கெஞ்சிக் கூத்தாடி டைம் வாங்கிட்டு பர்வீனும் சாஜிதாவும் வீட்டுக்கு வந்தாங்க. வீட்டுக்குள்ள இருந்த பஷீர் யார்கிட்டயோ போன்ல பேசிட்டிருக்கிற சத்தம் கேட்டுச்சு. பர்வீனு சாஜிதாவோட கையப்புடிச்சு அழுத்தி அங்கேயே நிக்கவெச்சா. உள்ள யார்கிட்ட என்னதான் பேசறார்னு வெளிய அமைதியா நின்னு கேட்டாங்க ரெண்டுபேரும்.

“ளா.. நீ ஒன்னுங் கவலப்படாத.. பெருநா வரைக்கும் பொருத்துக்க, கண்டிப்பா நான் ஒன்ன நிக்கா பன்னி இங்கயே கூட்டிட்டு வந்தர்றேன்.”

“………………………”

“அவளப்பத்தி நீ ஒன்னுங் கொழப்பிக்காதளா.., நாஞ்சொன்னா அவ மறுத்துப் பேசமாட்டா.. அதையும் மீறி பேசுனா அவளுக ரெண்டுபேரையும் முடுக்கிவிட்டுட்டு நான் ஒன்ன சேத்திக்கறேன்..”

“………………”

“அல்லா சத்தியமா சொல்றேம்ளா.. எனக்கு ஒன்னவிட வேற யாரும் முக்கியமில்ல.. புரிஞ்சுதா..?”

வெளியில் நின்று இந்த வார்த்தைகளைக் கேட்ட பர்வீனும், சாஜிதாவும் நொறுங்கிப்போனார்கள். அன்று வீட்டில் பயங்கர சண்டை. வாக்குவாதம் பெருகி சாஜிதாவின் இடுப்பில் பஷீர் எட்டி மிதித்ததில் சுருண்டு விழுந்தவள் மயக்கமாகிப்போனாள். ஏற்கனவே நேரம்காலம் பார்க்காமல் உக்கார்ந்து வேலை செய்ததில் தேய்ந்துபோயிருந்த இடுப்பு எலும்பு லேசான விரிசல் விட்டுப்பானது. ஆஸ்பத்திரியில் சேர்த்து ரெண்டுவாரம் ஓய்வுக்குப்பின்னால்தான் சாஜிதாவால் நடக்கவே முடிந்தது. அதிலிருந்து சாஜிதா பஷீரிடம் பேசுவதில்லை. பர்வீனும்தான். அப்படியே காலம் கடந்தது. எல்லாருக்கும்தான் தெரிந்துவிட்டதே இனி என்ன பயம் என்று பஷீர் இப்போதெல்லாம் அடிக்கடி பேங்களூர் செல்லத்துவங்கினான். கேள்விகேட்க ஆளில்லாமல் அவிழ்த்துவிட்ட கழுதைபோல அவன் நடவடிக்கை தொடர்ந்துகொண்டே இருந்தது.

’அடிக்கடி சண்டைபோட்டு இந்த விசயம் அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சா, மானம் மரியாதையெல்லாம் போயிடும் அப்புறம் கொமர கட்டிக்க யாரு வருவா..?’ என்ற கவலை சாஜிதாவின் மனதைப் பிசைந்துகொண்டே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வரன்கள் வருவதும் போவதுமாக இருந்தது. பொண்ணப்பத்தி ஒரு கொற சொல்ல முடியாது. அப்சரஸ் மாதிரி இருக்கிற புள்ளைய யாருக்குதான் பிடிக்காது..? பிரச்சனை என்னன்னா, பதினைந்து பவுன், இருபது பவுன் என்ற பேரங்கள் படியாமல் ஒவ்வொன்றும் தவறிக்கொண்டு இருந்தது. ராவும் பகலுமா அழுதழுது கேட்ட சாஜிதாவின் துவா வீன் போகல. அல்லாவோட கிருபைல ஒரு நல்ல வரன் கைகூடி வந்துச்சு.

அதே தெருவுல இருக்கிற ஒரு பையன் பாஷித். சவுதியில வேலைபார்க்கிறான். நல்ல அழகான பையன். கைநிறைய சம்பளம். ரெண்டுமாச லீவுல போனவாரம்தான் ஊருக்கு வந்திருந்தான். அவனுக்கு பர்வீன புடிச்சுப்போய் அவங்க வீட்ல சொல்லியிருக்கான். அந்தப் பையனோட பெத்தவங்க நேத்து சாயந்திரம் பர்வீனப் பொண்ணுபாக்க வந்தாங்க. அவங்களுக்கும் பர்வீனத் தெரியும் என்பதால ஒன்னும் அதிகமா பேசல.

“எங்க பையன் ஆசப்பட்டுட்டான், பர்வீன நாங்க கொழந்தைல இருந்து பாக்குறோம். நல்ல தங்கமான பொண்ணு. அல்லாவோட கிருபைல எங்களுக்கு காசுபனத்துக்கு ஒன்னுங் கொற இல்ல. நல்ல ஈமானுள்ள குடும்பத்துல சம்மந்தம் வெக்கனும்னுதான் நெனச்சிட்டிருந்தோம். உங்க குடும்பமும் நல்ல இபாதத்தான குடும்பம். அதுவும் பஷீர்பாய் இந்த மொஹல்லாக்கே முன்மாதிரியா இருக்காரு.. எங்களுக்கு முழு சம்மதம். எல்லா செலவுகளையும் நாங்க பாத்துக்கறோம். ஒங்க பொண்ணுக்கு நீங்க என்ன முடியுமோ அத பன்னுங்க.. பையனுக்கு ரெண்டுமாசந்தான் லீவு. அதுக்குள்ள நிக்கா முடிக்கனும். வீட்ல மஷோரா பன்னிட்டு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க.’ என்று சொல்லிவிட்டுப் போனதிலிருந்து சாஜிதாவுக்கு தலைகால் புரியவில்லை. ஒரு நல்ல இடத்தில் பொண்ணுக்கு வாழ்க்கை அமைந்திருக்கிறது என்ற சந்தோசம்.

ஊர்ல இருந்த அரை கிரவுண்டு இடத்தை வித்து, அங்க இங்க கடன ஒடன வாங்கி நிக்காவுக்கான வேலைகள ஜரூரா பாக்க ஆரம்பிச்சுட்டா சாஜிதா. அம்மா வீட்டு சொத்துனு அவளுக்குனு இருந்தது அந்த ஒரு எடந்தான். எவ்வளவோ கஸ்டநஸ்ட்டத்திலும் அத விட்டுடாம பாதுகாத்து வெச்சது இப்ப புள்ள காரியத்துக்கு உதவியிருக்கு. என்னதான் மப்பிள்ளை வீட்ல ஒன்னும் வேண்டாம்னு சொன்னாலும், வெறுங்கழுத்தோடவா கொமர அனுப்பமுடியும்? அப்படி இப்படினு நாலஞ்சு பவுன் வாங்கியாச்சு. நிக்காவுக்கு இன்னும் ஒரு மாசந்தான் இருக்கு. பத்திரிக்கை கொடுக்கறது, பண்டம் பாத்திரம் வாங்கறதுனு பரபரன்னு பம்பரமா சுத்திட்டு இருந்தா சாஜிதா.

ஆனா, மைனர் பஷீருக்கு எந்தக் கவலையும் இல்லை. போனில் மணிக்கணக்காக காதல்மொழி பொழிவதும், வாரத்துக்கு ஒருமுறை பேங்களூர் போவதுமாக அவனது காலம் சென்றுகொண்டு இருந்தது. பர்வீனுக்கு நிக்கா முடியறவரைக்காவது இந்த மனுசன் பேசாம இருந்தா பரவாயில்ல. யாராவது இந்த மனுசனோட போக்கப்பத்தி மாப்பிள்ள வீட்ல எதாவது சொல்லிட்டா எல்லாமே கெட்டுவிடுமே என்ற பயம் வேறு சாஜிதாவை அரித்துத் தின்றுகொண்டு இருந்தது. அவள் பயப்பட்டதுபோலவே நடந்தும் தொலைத்து விட்டது.

இன்று மாலை பாசித் வீட்டுக்கு வந்திருந்தான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பர்வீனும் வீட்டில்தான் இருந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் கட்டிலில் அமர்ந்திருந்த பர்வீன் எழுந்து விறுக்கென்று எழுந்து சமையலறைக்குள் ஓடினாள். பாஷித் வந்திருப்பதை சாஜிதாவிடம் சொல்லிவிட்டு தொங்கிக்கொண்டிருந்த பர்தாவுக்குப் பின்னால் நின்றுகொண்டாள். காற்றாடியின் புன்னியத்தால் அவ்வப்போது விலகிய பர்தாவின் இடைவெளியில் பாஷித்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். தலையில் முக்காடைப் போட்டுக்கொண்டபடி சாஜிதா வெளியே வந்தாள்.

”வாங்கத்தா… ஒக்காருங்க..”

என்றபடி ஒரு பிளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டாள். அவன் எதுவும் பேசாமல் அதில் அமர்ந்தான்.

“இரீங்கத்தா வரீன்..”

என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவள் ஒரு தட்டில் கொஞ்சம் மிக்சரும், இன்னொரு தட்டில் நாலைந்து பிஸ்கட்டுகளும், ஒரு சொம்பு நிறைய தண்ணீரையும் கொண்டுவந்து அவனுக்குப் பக்கத்திலிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு எதிரிலிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

“எடுத்து சாப்பிடுங்கத்தா.. பர்வீனு டீ போடுது..” என்றாள்

நிமிர்ந்தே பார்க்காமல் பிஸ்கட்டின் முனையை உடைத்து வாயில்போட்டு மென்றான். அவனது மௌனம் சாஜிதாவின் அடி வயிற்றைக் கலக்கிக்கொண்டு இருந்தது. அந்த இருக்கத்தைக் கலைக்க

“அம்மா, அத்தாவெல்லாம் நல்லா இருக்காங்களாத்தா..?

என்று எதையோ சடங்காக கேட்டு வைத்தாள். அவன் அதற்கும் வாய் திறக்காமல் பிஸ்கட்டை மென்றபடி தலையசைத்தான். ஏதோ குழப்பத்தில் இருப்பதை அவனது முகம் காட்டியது. நேரம் போகப்போக சாஜிதாவுக்கு இரத்த அழுத்தம் எகிரிக்கொண்டே இருந்தது.

“ம்ம்மா..”

பர்வீனின் குரலைத் தொடர்ந்து சமையலறைக்குள் நுழைந்தவள் கையில் தேநீர் டம்ளருடன் வெளியே வந்தாள். அவனுக்கு எதிரே வைத்துவிட்டு மீண்டும் அதே சுவற்றில் சாய்ந்துகொண்டாள். நெஞ்செல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டது அவளுக்கு. ஒரு வழியாக அவனே வாய் திறந்தான். சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாகப் பேசினான்.

“பர்வீனோட அத்தாவப்பத்தி என்னன்னவோ செய்தியெல்லாம் கேள்விப்பட்டேன். எனக்கு புரியுது.. இதுல உங்க தப்பு ஒன்னுமில்ல. எப்படியிருந்தாலும் நிக்கா முடிஞ்சு நாலஞ்சு மாசத்துல நான் பர்வீனுக்கு விசா ரெடிபன்னிட்டு அவள கூப்பிட்டு சவூதி போயிடுவேன். ஆனா எங்க அம்மா அத்தா இங்கதான் இருந்தாகனும். இந்த விசயமெல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சா அவங்க தலைநிமுந்து வாழமுடியுமா..? எனக்கொரு தங்கச்சி இருக்கால்ல அவளுக்கு எதாவது நல்லது கெட்டது பன்ன முடியுமா? எது எப்படியோ பர்வீனோட அத்தாட்ட பேசி இன்னியோட இந்த முசீபத்தயெல்லாம் தல முழுகச் சொல்லுங்க. ஒருவேள அவரு ஒத்து வரலைனா.. பர்வீனுக்கு வேற இடம் பாத்துக்கங்க. எனக்கு வேற வழி இல்ல. இந்த நிக்கா நல்லபடியா நடக்கறதும், நடக்காததும் ஒங்க கைலதான் இருக்கு..”

சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து வெளியே சென்றுவிட்டான். தேநீரில் ஆவி பறந்துகொண்டு இருந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே போனாள் சாஜிதா. உடைந்து அழுதுகொண்டிருந்த பர்வீனைத் தோளோடு சாய்த்துக்கொண்டு தேற்றினாள்.

“அழாதளா.. நல்லபடியா எல்லாம் நடக்கும்.. அல்லா இருக்கான்.”

“இல்லமா நான் எனக்காக அழலமா.. நீ இப்பதான் கொஞ்சநாளா சந்தோசமா இருந்த, மறுபடியும் அல்லா உன்ன இப்படி சோதிக்கிறானேம்மா..”

இருவரும் அழுதழுது ஓய்ந்து ஆளுக்கொரு மூலையில் தூங்கிப்போனார்கள். நேரம் போனதே தெருயவில்லை. பர்வீன் நன்றாகத் தூங்கிப்போனாள். திடீரென டமார் டிமீரென்று பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு விறுக்கென பயந்து எழுந்தாள். சமையலறையில் பாத்திரங்கள் மீது சாஜிதா விழுந்து கிடந்தாள். அவள் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு வெறிகொண்ட மிருகம் போல பஷீர் அவளை அடித்துக்கொண்டு இருந்தான். தடுக்கப்போன பர்வீனையும் உதைத்துத் தள்ளினான்.

“களிச்சல்ல போனவளே.. எவ்வளவு தெகிரியம் இருந்தா எனக்கு கண்டிசன் போடுவ.. மார்க்கத்துல நாலு நிக்கா பன்னிக்க அனுமதி இருக்கு தெரியுமா ஒனக்கு. ஒரு பய என்னிய கேள்விகேக்க முடியாது. பெருநா முடிஞ்சு நான் அவள சேத்துக்கப்போறேன். மரியாதியா இருந்தீனா ஒன்னையுங் கூட வச்சுப்பேன். இல்லாட்டி ஒன்ன தலாக் பன்னிட்டு அவள சேத்துப்பேன்.. அப்புறம் நீயும் ஒம்புள்ளையுஞ் சோத்துக்கு சிங்கியடிக்கனும் நெனப்பிருக்கட்டும்..” என்று கத்தியபடி வெளியே சென்றான்.

இந்தக் காட்சிகள் மனதில் நிழலாட எங்கேயோ வெறித்துப்பார்த்தபடி தின்னையில் அமர்ந்திருந்தாள் சாஜிதா.

“மா.. இன்னும் எவ்ளோ நேரம் இப்பிடியே ஒக்காந்துட்டு இருப்ப..? எந்திரிச்சு போய் படும்மா..”

என்றபடி அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள் பர்வீன். இருவரும் வெகுநேரம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. முந்தானையால் உதட்டில் வழியும் உதிரத்தைத் துடைப்பதும், கண்களைத் துடைப்பதும் விசும்புவதுமாக இருந்தாள் சாஜிதா.

இந்த மனுசனைப்பற்றி ஜமாத்தார்களிடம் சொல்லி நியாயம் கேட்கலாம்தான், இந்தாளு அதுக்கெல்லாம் பயப்படற ஆள் இல்லியே.. ஒரேயடியா கெளம்பி பேங்களூருக்கே போய்ட்டார்னா..? ஒருவேள இந்த மனுசன் ஜமாத்துக்கு பயப்பட்டாலும் ஊரே கேள் நாடே கேள்னு எல்லாருக்கும் விசயம் தெரிஞ்சிடும். அப்புறம் பர்வீனின் நிக்கா..?.. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஆகிப்போனது அவளுக்கு. குழப்பத்தில் அவளுக்கு பைத்தியமே பிடித்துவிடும்போல இருந்தது. ஊரே அடங்கிவிட்டது. மணி எப்படியும் பதினொன்றைத் தாண்டியிருக்கும்.

“மா.. விடுமா, சும்மா கவலப்பட்டுட்டு இருக்காத. இனியும் இந்த மனுசங்கோட வாழ்ந்து என்னத்த பன்னப்போற.. நாம வேற எங்காவது போயிடலாம்மா. இந்த ஊரே வேண்டாம்மா.. சென்னைல என் காலேஜ் மெட்டோட அப்பா பெரிய ஆடிட்டர்மா. அவர்கிட்ட பத்துப்பதினஞ்சுபேர் அசிஸ்ட்டெண்ட்டா வேலை பாக்கிறாங்க. அங்க எனக்கும் வேலை கிடைக்கும்மா. நான் வேலைக்கி போய் உன்ன நல்லா பாத்துக்குவம்மா. எனக்கு இப்போதைக்கு நிக்கா எல்லாம் வேண்டாம்மா.. அது அல்லா விட்ட வழி. நடக்கும்போது நடக்கட்டும்”

“நீ பெரிய மனிசியாட்டம் பேசிட்டு இருக்காத.. அல்லா இருக்கான்.. எல்லாம் நல்லபடியா நடக்கும். இன்ஷா அல்லா ஒனக்கு பாசித்தோட நல்லபடியா நிக்கா நடக்கும்.. நீ போய் படு..” எரிந்து விழுந்தாள்.

“எப்படிம்மா.. இந்த மனுசன் திருந்திட்டார்னு அவங்ககிட்ட பொய் சொல்லப்போறியா..? நாளைக்கு உண்ம தெரிஞ்சா என்னோட வாழ்க்கையே நரகம் ஆயிடும்மா.. அதோட அந்தக் குடும்பத்தோட நிம்மதியக் கெடுத்துட்டு நான் எப்படிம்மா நிம்மதியா வாழ முடியும்? நான் சொல்றத கேளு.. எனக்கு இப்ப நிக்கா வேண்டாம்மா.. நாம சென்னை போயிடலாம்..”

“என்னளா கூடக்கூட பேசிட்டு இருக்க... அந்தாளு போனா என்ன.. நான் இன்னும் மௌத் ஆகலைல..? ஆண்டவன் நமக்கு ஒரு வழி காட்டாமயா போயிடுவான்.. நீ போ ளா.. போய்ப்படு..”

மூக்கை உறிஞ்சியபடி தழுதழுத்த குரலோடு வெடித்த சாஜிதாவுக்கு பதில்சொல்ல முடியாமல், அமைதியாக இருந்துவிட்டாள். சிறிதுநேரத்தில் பஷீரும் வந்துவிட்டான். அவன் முகத்தைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது பர்வீனுக்கு. சாஜிதா அவனை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. அவர்களைக் கடந்து சென்று ஜலதாரியில் கைகால் முகம் கழுவிக்கொண்டு உள்ளே சென்றான்.

“என்னங்களா நடுசாமத்துல ஒக்காந்து மீட்டிங் போட்டுட்டு இருக்கீங்க.. ஏய் சாஜிதா வந்து சாப்பாடு எடுத்து வையிளா..”

குரலைக் கேட்டதும் சாஜிதா எழுந்து உள்ளே சென்றாள். அடுப்படியில் அப்பளம் பொரிக்கும் சத்தம் கேட்டது. பர்வீனுக்கு எரிச்சலாக இருந்தது. இவ்வளவு நடந்த பிறகும் இந்த மனுசனுக்கு சேவகம் செய்ய எந்திருச்சு ஓடுது பார்.. இந்த அம்மாவ என்னன்னு சொல்றது..? கொஞ்சங்கூட சொறனையில்லாம இவ்வளவு அடிமையாவா இருப்பாங்க..? பொண்டாட்டி புள்ளைங்களவிட கண்டவளுக கொடுக்குற சுகம்தான் முக்கியம்னு நினைக்கிற ஆளுகளோட எப்படித்தான் சமரசம் பன்னிட்டு வாழ்றாங்களோ.. கருகுமணிய அத்து மூஞ்சில வீசிட்டு போறத விட்டுட்டு, போய் சேவகம் பன்னிட்டு இருக்கு.. புருசன் என்ன பன்னுனாலும் சகிச்சுட்டு போகனும்னு எதாவது இருக்கா..? புருசன்னா என்ன பெரிய மயிரா..? மனதுக்குள் கடிந்துகொண்டபடி எழுந்து உள்ளே சென்றாள். அடுப்பங்கறையில் பாய்விரித்து படுத்தாள். பக்கத்தில் சாஜிதாவுக்கான இடம் வெறுமையாக இருந்தது.

ஏதேதோ நினைவுகள் மனதுக்குள் ஓடி அவளை இம்சித்தன. அவளது நிக்கா கணவுகள் உடைந்து நொறுங்குவது போன்ற பிம்பங்கள் அவளது மணக்கண்ணில் ஓடியது. லட்சக்கணக்கான புழுக்கள் மண்டைக்குள் நெளிவதுபோல இருந்தது. பாஷித்தின் முகம் கண்களுக்குள் வந்துவந்து மறைந்தது. கோபம் ஆற்றாமை அழுகை என மாறிமாறி வந்தது. படுக்கையில் வெகுநேரமாக புரண்டுபுரண்டு படுத்துக் கொண்டிருந்தவள் எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை.

அடுத்தநாள் காலை யாரோ அழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். பர்தாவை விலக்கிவிட்டு வெளியே வந்து பார்த்தாள். வீடே களேபரமாக இருந்தது. கட்டிலில் பஷீர் கட்டிலில் அசைவின்றிக் கிடந்தான். அருகில் அம்மா அழுதுகொண்டு இருந்தாள். ஏனோ அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வரவில்லை. சுற்றிலும் ஏழெட்டு பெண்கள் நின்று அழுதுகொண்டிருந்தனர்.

“நைட்டு சாப்பிட்டு படுத்தாராம், விடியக்காலைல மூனுமனிக்கு நெஞ்சக்கரிக்குதுனு சொல்லி காப்பி வெச்சுக்கேட்டிருக்காரு. காப்பியக்குடிக்கும்போதே நெஞ்சப்புடிச்சுட்டு சாஞ்சுட்டாராம்..”

”பாவம் நல்ல மனுசன்.. பொண்ணோட நிக்காவக்கூட பாக்காம போய்ட்டாரே..”

“நம்ம கைல என்ன இருக்கு..அல்லா நாடிட்டான்..”

ஆளாளுக்கு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். பர்வீனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தலை சுற்றுவதுபோல இருந்தது. முந்தையநாள் கோபமெல்லாம் ஒருநொடியில் காணாமல் போனது. ஓடிவந்து பஷீரின் உடலைக் கட்டிக்கொண்டு அழுதாள். அத்தா.. அத்தா.. என்று அவள் கதறிய கதறல் வெகுதூரம் எதிரொலித்துக்கொண்டு இருந்தது. அவள் அழுவதைப்பார்த்து அதுவரை அழாதவர்கள் கூட அழ ஆரம்பித்தனர். ’ஜனாசா மேல கண்ணீர்த்துளி படக்கூடாது’ என்று யாரோ ஒருவர் சொல்ல அவளை பஷீரின் உடலிலிருந்து பிரித்தனர்.

“ளா.. அழாதளா.. ஆனது ஆகிப்போச்சு அல்லா நாடிட்டான்.. இனி அழுது என்னாகப்போகுது..?”

ஆளாளுக்கு அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தனர். எதுவுமே அவள் காதுகளில் விழவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. அழுது அழுது களைத்துப்போன பர்வீன் திடீரென மயங்கி விழுந்தாள். பக்கத்தில் இருந்த பெண்ணொருத்தி அவளைத் தாங்கிப்பிடித்தாள். சாஜிதா பதறியபடி எழுந்து பர்வீனின் அருகே ஒடி வந்தாள்.

“யாராவது தண்ணி கொண்டாங்க..”

கூட்டத்தில் யாரோ கத்த சமையலறைக்குள் நுழைந்தாள் சாஜிதா. சில்வர் குடத்திலிருந்த தண்ணீரை ஒரு சொம்பில் மெத்திக்கொண்டு ஓடிவந்தாள். சட்டென ஏதோ நினைவு வர ஒரு வினாடி நின்று திரும்பிப் பார்த்தாள்.  
ஜன்னலின் வழியே வெளியே தெரிந்த குப்பைத்தொட்டியில் மூடியில்லாமல் ஒரு கண்ணாடி பாட்டில் அநாதையாகக் கிடந்தது. அதில் மண்டையோடு படம்போட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது

23.10.2015