இரு தினங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா(?) விற்கு
அழைப்பிதழ் கொடுத்துச் சென்றனர் . அதில் பிரதானமான வாசகம் என்னவெனில்
" மதம் மாறுவதால் எண்ணிக்கை குறைவதாய் நினைக்காதே ,எதிரி அதிகமாகிறான்"
இதன் பொருள் என்ன? இந்த வாசகத்தின் நோக்கம் என்ன?
அதாவது ஹிந்துக்கள் அல்லாதவர்கள் அனைவரையும்
ஹிந்துக்களின் எதிரிகளாக சித்தரிக்கும் ஒரு கருத்தியலை
ஹிந்துக்களின் பொதுப் புத்தியில் திணிப்பதே ஆகும்.
'call the dog mad before shoot ' "ஒரு நாயை கொல்லும் முன்
அதற்க்கு வெறி பிடித்திருக்கிறது என்று அனைவரையும் நம்பச் செய் "
காவி வகுப்புவாதிகளின் அடிப்படை செயல் திட்டம் இதன் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது
அதாவது ஒரு நாயை காரணமின்றி கொல்லும்போது ஜனநாயக சமூகம் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உண்மை., ஆனால் அதே நாயைப் பற்றி ஒரு எதிர் மறை பிம்பத்தை சமூகத்தின் பொதுப் புத்தியில் திணித்து அந்த நாயை வெறி பிடித்த மோசமான நாய் என்றும் அது இது வரை பலரை கடித்திருக்கிறது என்றும் ஒரு பொய்யை தொடர்ந்து கூறுவதன் மூலம் மக்களின் பொதுப் புத்தியில் இத்தகைய கருத்தியலை திணிப்பதன் மூலமும் அந்த நாயைக் கொல்வதற்கு எதிர்ப்பு இருக்காது என்பதை விடவும் ஆதரவும் கிடைக்கும் என்பது காவிக் கூட்டத்தின் பிரதான செயல்பாடு
இதற்க்கு வலு சேர்க்கும் வகையில் அந்த நாயை, தொடர்ந்து ஆத்திரமூட்டலுக்கு உட்படுத்தும் போது அதன் இயல்பான எதிர்வினையை ஊதிப் பெரிதாக்க ஜனநாயக முகமூடி அணிந்த காவி ஊடகங்கள் துணை போகின்றன
இந்த சூழலையும் காவி பயங்கர வாதத்தின் சூழ்ச்சிகளையும் தெளிவாக புரிந்து கொள்ள இயக்கவியல் பார்வை கற்றுக் கொடுத்திருக்கிறது , அதாவது கடந்த வரலாறுகளில் கிடைத்த அனுபவங்களை சமகால நிகழ்வுகளோடு பொருத்தி எதிர்கால நிகழ்வுப் போக்கை உணரும் தத்துவமே இயக்கவியல் . இது மார்க்சியப் பகுப்பாய்வில் ஒரு பகுதி.
நமக்கு மிக அருகில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்வோம் கோவையில் நிகழ்ந்த நவம்பர் படுகொலைகள் ( கலவரமல்ல திட்டமிட்ட இனப் படுகொலைகள்) ஒரு பிற்போக்கு அடிப்படை வாத இயக்கத்தை சேர்ந்த ஒரு தனி மனிதன் செய்த தவறுக்காக ( காவல் துறை அதிகாரி செல்வராஜ் கொலை ) காவல் துறையும் காவித் துறையும் இனைந்து நிகழ்த்திய இனப் படுகொலைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது
இந்த கொலைகளுக்கு எதிர் வினையாக அந்த இஸ்லாமிய அடிப்படைவாத பிற்போக்கு அமைப்பு நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்பு ,அதன் விளைவாக நிகழ்ந்த கலவரங்கள் (பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை சகித்துக்கொள்ள முடியாது, இந்த குண்டு வெடிப்புகளுக்கு அப்போதே கண்டனம் தெரிவித்தது மட்டுமன்றி அந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை தடை செய்ததை வரவேற்கவும் செய்தோம்)
இந்த குண்டுவெடிப்பின் மூலம் அப்போதைய அரசியல் நிலையில் தமிழக அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியதை மறுக்க முடியாது , இந்த குண்டு வெடிப்பை பெரிய அளவில் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சென்றதில் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது , ஒரு அடிப்படை வாத இயக்கத்தினர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் அளவிற்கு ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது அதன் விளைவாக அப்போதைய பாராளுமன்ற தேர்தலில் மதவாதக் கட்சியான பிஜேபி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது .
நாம் இதை கூறுவது எந்த வகையிலும் அந்த இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்பை நியாயப்படுத்த அல்ல, அது போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் பின்னால் இஸ்லாமிய மக்கள் அணி திரள்வது எந்த வகையிலும் எதிரியை வென்றெடுக்கவோ அவர்களை அம்பலப் படுத்தவோ உதவாது என்பதை விடவும் எதிரிக்கு சாதகமான நிலைமைகளையே உருவாகும் என்பதை உணர்த்தவே ,
இந்த சம்பவங்களை நாம் இப்போதைய சமகால நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கையில், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வெறியில் தமது வழக்கமான அருவருக்கத்தக்க செயல் திட்டமான மக்கள் மத்தியில் மதத் தீயை விசிறி விட்டு குளிர் காயும் சூழ்ச்சியில் அதன் செயல் திட்டங்கள் இருப்பதை காணலாம் .
சமீபத்தில் இந்துத்துவ அமைப்பின் பொறுப்பாளர்களின் கொலைகளுக்கு அவர்களின் தனிப்பட்ட வியாபார ரீதியான போட்டிகளும் , தனிப்பட்ட ஒழுக்கம்(?) சம்பந்தப்பட்ட காரணங்களும் இருப்பினும் , இந்தக் கொலைகள் இஸ்லாமிய அமைப்பினர் திட்டமிட்டு நிகழ்த்திய கொலைகள் என்பதைப் போல ஒரு பிம்பத்தை உருவாக்க அவர்கள் செய்த சூழ்சிகளை பார்த்தோம், மூலைக்கு மூலை வீரவணக்கம் தாங்கி நிற்கும் பிளெக்ஸ் போர்டுகளும், படுகொலை புரிந்த இஸ்லாமிய தீவிரவாதிகளை கைது செய் என்கிற ரீதியிலான சுவரொட்டிகளும் ,ஹிந்துக்களிடமே வியாபாரம் செய்வோம் ஹிந்துக்களுக்கு மட்டுமே வாடகைக்கு வீடு கொடுப்போம் ஹிந்துக்களின் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்குவோம் இஸ்லாமியர்களை தனிமைப் படுத்துவோம் போன்ற பரப்புரைகளைத் தாங்கி வலம் வந்த நோடீஸ்களும் மெனக்கெட்டதைப் பார்த்தோம் ,
இன்னொரு ஹிந்துத்துவ அமைப்பின் நிர்வாகி தம்மை இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாகவும், அவர்களுடன் கராத்தே கலையை பயன் படுத்தி சண்டையிட்டு அவர்களை வீழ்த்தி தப்பி வந்ததாகவும், தமக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்றும் ஒரு பொய்யான புகாரை கொடுத்து பரபரப்பை ஏற்ப்படுத்தினார்
புலன் விசாரணை செய்த காவல் துறை, அவர் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றதை கண்டு பிடித்து பொய் புகாரை கொடுத்த குற்றத்திற்காக அவரை கைது செய்து சிறையில் தள்ளியது . அவர் இப்போது ஆயுதம் தாங்கிய காவலில் பத்திரமாக இருக்கிறார்
இப்போது அயோத்தியில் ராமர் ஆலையம் அமைக்க மீண்டும் ஒரு யாத்திரைக்கு திட்டமிட்டு அந்த மாநில அரசின் அனுமதி இல்லாமல் போகவே பல்வேறு கலவரங்களையும் கலேபரங்களையும் நிகழ்த்தியதோடு , நேற்றைய மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அமளி செய்தது
இது போன்று வெகுஜனங்களின் மத்தியில் இஸ்லாமிய எதிர்ப்பு பிம்பத்தை விதைக்கவும் ,சிறு சிறு உரசல்களை ஊதிப் பெரிதாக்கி வன்முறையை தூண்டி அரசியல் ஆதாயம் அடையவும் எல்லா வழிகளிலும் முயற்சி செய்கின்றன. ஒரு பெரிய மத மோதல் உருவாகாமல் இந்த மதவாத அமைப்பு ஆட்சியை பிடிக்க முடியாது , ஆக அன்றைய கலவரம் போல ஒரு கலவரத்தை எங்காவது அரங்கேற்ற முழு வீச்சில் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர் . வாய்ப்புகளுக்கு காத்திருக்கின்றனர் , வாய்ப்புகளை உருவாக்க செயல்படுகின்றனர் .
இந்த சூழலில் அவர்களது சூழ்ச்சிக்கு பலியாகாமல் , அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இரையாகாமல் மதவாத அமைப்புகளை வென்றெடுப்பதே நம் முன் இருக்கும் சவால் , மிக முக்கிய சமூக ஜனநாயக கடமையும் கூட.
இத்தகைய சிக்கலான சூழலில் எதிரியை வென்றெடுக்க சிறுபான்மை சமூகத்தினர் செய்ய வேண்டியது என்ன?
1. வகுப்புவாதம் என்பது குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் ஆபத்தானது ,அந்த வகுப்பு வாதத்திர்க்கெதிரான ஈவிரக்கமற்ற போர்ப் பிரகடம் செய்வதும், அந்த போராட்டத்தில் தமது பங்களிப்பை செலுத்துவதும் அனைவருக்குமான சமூக கடமை , அந்த சமூக கடமையை நிறைவேற்றுவதிலிருந்து ஒதுங்கிச் செல்லுதல் மனிதசமூகத்திற்கு செய்யும் துரோகம் என்பதை உணருங்கள்
2. வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணருங்கள் , நமது கற்பனைக்கு எட்டாத அளவிற்கு எதிரியின் தொடர்புகளும் ஊடுருவல்களும் மிக மிக ஆழமாக பரவி இருப்பதை இனியும் புறந்தள்ளி விட முடியாது என்பதை உணருங்கள்
3.எதிரியை உணருங்கள் , எதிரி பலமானவன் மட்டுமல்ல அறிவானவனும் கூட , அவனை அறிவுத் தளத்திலும் எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிரியின் சித்தாந்தத்தை அறிந்து கொள்வதன் மூலமும் , அவர்களது சூழ்சிகளை புரிந்து கொள்வதன் மூலமும் அவர்களது கீழ்த்தரமான தந்திரங்களை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்த அறிவுத் தளத்தில் முழு வீச்சில் செயல் படத் தயாராகுங்கள்.
4. எல்லா இஸ்லாமியர்களையும் எதிரிகள்என்று பிரகடனப் படுத்தும் வகுப்புவாதிகளைப் புறக்கணிப்பது போல எல்லா ஹிந்துக்களும் எதிரிகள் என்று பிரகடனப் படுத்தும் வகுப்பு வாதிகளையும் புறக்கணிக்க வேண்டும்
5. இஸ்லாமியர்கள் எதிர்க்க வேண்டியது ஹிந்துக்களை அல்ல ஹிந்து வகுப்பு வாதத்தை என்பதை உணருங்கள்
6.இஸ்லாமியர்களின் சக்தி அடையாள அரசியல் அமைப்புகளின் பின்னால் அணிதிரள்வதன் மூலம் பிளவுற்று விரயமாவதை உணரவேண்டும்.
7. இடது சாரி அமைப்புகள், பெரியாரிய அம்பேத்கரிய சமூக ஜனநாயக அமைப்புகளோடு மட்டுமன்றி வகுப்புவாதத்தை வெறுக்கும் ஹிந்துக்களோடும் சேர்ந்து ஒரு பொது தளத்தில் (common platform) நின்று போராடுவதன் மூலம் மட்டுமே வலிமையான எதிரியை வெல்ல முடியும் , எதிரியை அம்பலப்படுத்தி தனிமைப் படுத்த முடியும்.
8.தேசிய அளவில் மதவாதக் கட்சியின் வாக்கு சதவீதம் ( கூட்டணி கட்சிகளையும் சேர்த்து ) 23 சதவீதம், மீதமுள்ள 77 சதவீதத்தில் இஸ்லாமியர்களின் ஒட்டு வீதமான 14 சதத்தை கழித்தாலும் மீதமுள்ள 63 சதவீத மக்கள் வகுப்பு வாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் ,நமது போராட்டத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்ளாமல் இருப்பது முதிர்ச்சியற்ற செயல் என்பதையும் உணருங்கள்.
No comments:
Post a Comment