Tuesday 26 April 2016

ஜெய் ஜக்கம்மா.. (26.08.2014)



“தம்பி..!! இன்னொரு ப்ளேட் சில்லி குடுப்பா…” மண்டைக்கு ஏறிய குருமாவின் காரத்தால் “சொர்ர்ர்ர்…” என்று மூக்கை உரிஞ்சிக்கொண்டே ஹோட்டல் ஊழியரிடம் கேட்டான் மருதாசலம். சிறிய கடைதான் என்றாலும் திருப்பூரில்  பிரியாணி என்றாலே பாபு பிரியாணிக் கடைதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு பிரபலமான கடை. நானும் என்னுடைய நன்பர்கள் குட்டி மற்றும் மருதாசலமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் மின்சாரமும் இல்லாததால் சொதசொதவென்று வியர்த்து ஊற்றியது.

தீவிர பிரியாணிப் பிரியனான (வெறியனான) மருதாசலம் ஒரு குடும்பமே திருப்தியாக சாப்பிடக்கூடிய அளவு உணவை ஒற்றை ஆளாக ஈவு இரக்கமின்றி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கோழியின் குடல் குண்டாமணி தவிற மற்ற அனைத்து பாகங்களையும் ஆர்டர் செய்து ‘காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி’ கொலைவெறியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனது கொலைவெறிக்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இந்த விருந்துக்கு ஆகும் செலவை நானும் குட்டியும் மட்டும்தான்  பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ’புரிந்துணர்வு’ ஒப்பந்தப்படி முடிந்த அளவுக்கு எங்களுக்கு அதிகமாக ’செலவு’ வைத்திடும் முயற்சியில் முக்கிக்கொண்டிருந்தான்.

முன்னதாகவே சாப்பிட்டு முடித்துவிட்ட நானும் குட்டியும் கடைக்கு வெளியில் மருதாசலத்துக்காக காத்திருந்தோம். நான் இரண்டே முக்கால் சிகரட்டை ஊதி முடித்திருந்தேன், குட்டி அரைப்பாக்கெட் ஹான்ஸை மென்று துப்பியிருந்தான். முக்கால் மணிநேரத்திற்குப் பிறகு இரைவிழுங்கிய மலைப்பாம்பைப்போல நெளிந்துகொண்டே வெளியே வந்தான் மருதாசலம். கை கால்கள் முளைத்த ஒரு எழுபத்தைந்து கிலோ அரிசி மூட்டைக்கு கட்டம் போட்ட சட்டை போட்டதுபோல இருந்தான்.

ஆள் பார்ப்பதற்கு ’மலைமாடு’ போல இருந்தாலும் குழந்தை மனசு. குழந்தை மனசு என்றால் நிஜமாகவே குழந்தை மனசுதான். ஒரு பதினெட்டு வருடம் முன்பு வரை பள்ளிப்பருவத்தில் எங்களுக்கு ஆண்டிபாளையம் வாய்க்காலில் சென்று குளிப்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. ஒவ்வொரு சனி ஞாயிற்றுக் கிழமையும் எங்கள் முழு பொழுதும் வாய்க்காலில் தான் கழியும். இந்த ’மலைமாடு’ செய்த ஒரு காரியத்தால் அதற்குப்பிறகு நாங்கள் வாய்க்கால் பக்கம் தலைவைத்துகூட படுக்க முடியாமல் ஆகிப்போனது.

வழக்கமாக மதியம் சாப்பாடு பார்சல் வாங்கிவந்து வாய்க்கால் கரையில் வட்ட வடிவில் கும்பலாக அமர்ந்து ஒருவரையொருவர் கேலி செய்துகொண்டே சாப்பிடுவது வழக்கம். அது ஒரு மறக்கமுடியாத ஞாயிற்றுக்கிழமை. அன்று மதிய உணவாக பிரியாணி பார்சல் வாங்கி வரப்பட்டது. குளித்த ஈரத்துடன் அனைவரும் வழக்கம்போல வாய்க்கால் கரையில் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எல்லோரும் சார்ட்ஸ் அணிந்திருந்தோம். நம்ம மருதாசலம் அன்று போட்டிருந்த தொளதொளவென்ற அவரது தாத்தா காலத்து ’பட்டாபட்டி’ குளிக்கும்போது வாய்க்கலோடு போய்விட, உடல் துடைக்க கொண்டுவந்திருந்த துண்டை இடுப்பில் கட்டியிருந்தார்.

மருதாசலம் மும்மரமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ராமன் என்கிற ஒரு நண்பன் விளையாட்டாக திடீரென்று மருதாசலத்தின் இலையிலிருந்த லெக்பீசை எடுத்துக்கொண்டு ஓடினான். லெக்பீஸ் பரிபோன கோபத்தில் மருதாசலம் ராமனைத் துரத்திக்கொண்டே ஓடினான். ஓடும்போது அவனது இடுப்பிலிருந்த துண்டு கழன்று விழுந்தது. “ நமக்கு எது முக்கியம், சோறா…? சொரணையா…?” என்று சிந்தித்த(!?) மருதாசலம் லெக்பீஸ் தான் முக்கியம் என்று முடிவு செய்து அப்படியே ஒட்டுத் துணியில்லாமல் ராமனை விரட்டிச் சென்றான். பட்டப்பகலில் ஒரு ’பிட்டுப்படம்’ அங்கே ஓடிக்கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்த ராமன் ’அதிர்ச்சியில்’ லெக்பீசை கரையில் வைத்துவிட்டு வாய்க்காலில் குதித்து உயிர் பிழைத்தான். (அடுத்த நாளிலிருந்து ராமன் மூன்று நாட்கள் கடும் காய்ச்சலில் விழுந்து, முத்தையன் கோவில் பூசாரியிடம் ’செறகடித்த’ பின்னரே குணமானான் என்பது வேறுகதை). இப்படி மருதாசலம் ”டங்..டங்..டங்…” என்று ஓடிவருவதைப் பார்த்து பக்கத்தில் கருவேல மரத்தில் கட்டியிருந்த பசுமாடு ஒன்று மிரண்டு போய் கயிரை அறுத்துக் கொண்டு ”திப்புறு… திப்புறு…”வென்று காட்டுக்குள் ஓடி மறைந்தது.

இந்தக் கன்றாவியை பார்த்த அந்த வழியே சென்ற உள்ளூர் பெண்கள்  ஊர்க்காரர்களிடம் போய் சொல்லிவிட, இரண்டு உள்ளூர் ஆட்கள் வந்து மருதாசலத்தை ’மானங்கெடத்’ திட்டிக்கொண்டிருந்தார்கள். நங்க தான் பத்து பணிரெண்டு பேர் இருக்கோமே..!! வந்த ஊர்க்காரர்கள் இருவரிடமும் நாங்கள் வீர வசனம் பேசி பில்டப் கொடுக்க அவர்கள் பயந்துபோய் ஓடிவிட்டனர்.

போனவங்க ஒன்னும் சும்மா இருக்கல, ஒரு ஐம்பது பேர கூட்டிட்டு தடிக் கம்போட திரும்பி வந்தானுக. அதப் பாத்து துண்டக் காணோம் துணியக் காணோம்னு எல்லாரும் எடுத்தோம் பாருங்க ’ரேசு…’ சும்மா பிச்சுக்கிட்டு ஓடினோம். எல்லாருமே ’சிங்கிள் பீஸ்’ உடையில் செக்சியாக வேறு இருந்ததால் பஸ்லயும் ஏற முடியல. வழியில நாயெல்லாம் கன்னா பின்னான்னு தொரத்துச்சு. ’பிளாக் ஹாக் டவுன்’ பட கிளைமேக்ஸ்ல அமெரிக்க ரானுவ வீரர்கள் ஓடுவாங்க பாருங்க, அந்த மாதிரி ஓடினோம். ”இதென்னடா ’டாப்லெஸ்’ மராத்தான் ரேஸ் மாதிரி ஓடரானுக..?” ன்னு ஊரே வேடிக்கை பாத்துச்சு. வெக்கமே படாம அப்படியே ஒரே தம்முல ஓடி வீட்டுக்கு வந்துதான் நின்னோம். அதோட சரி இன்னைக்கு வரைக்கும் வாய்க்கால் பக்கமே போகல. மருதாசலம் எப்படிப்பட்ட ஒரு பிரியாணி வெறியன்னு இப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும்.

இன்றைய ’புரிந்துணர்வு’ ஒப்பந்துத்துக்கும் ஒரு கதை இருக்கு. காலைல குட்டியோட கடைல மூனுபேரும் தெண்டமா உக்காந்திருந்தோம். அப்போ அந்த வழியா ஒரு நடுத்தர வயது பெண் ”கைரேக… ஜாதகோ… ஜோஸ்யம் பாக்கறதே… “ னு கத்திட்டு போச்சு. நம்ம ஆளு ஜோசியத்துல அபரிமிதமான நம்பிக்கை உள்ளவர். ’சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த’ கதையா, மருதாசலம் அந்த ஜோசியகார அம்மாவ உள்ள கூப்பிட்டாரு. ஆச்சா…!!

“நல்லா கைரேக பாப்பீங்களா..?” ன்னு மருதாசலம் கேட்டதுக்கு ”என்ன சாமி இப்பிடி கேட்டுட்டீங்க… நாங்க பாளையங்கோட்ட காரவங்க… கட்டபொம்ம பரம்பர… எங்க வாக்கு பொய்க்காது..” என்று கூறிக்கொண்டே வந்து ஒரு துண்டை விரித்து அதில் அமர்ந்தார். மனதுக்குள் ”இன்னிக்கு ஒரு அடிம சிக்கிடாண்டா…” என்று நினைத்திருக்கும் போல, வாயெல்லாம் ஒரே புண்ணகை. கைரேகை பார்ப்பதற்கு இருபத்தி ஒரு ரூபாய் என்று ஊதிய ஒப்பந்தம் செய்துகொண்டு வேலையைத் துவங்கினார் அந்தப்பெண். அது ஒர்க்சாப் தரை என்பதால் மருதாசலம் ஒரு பழைய செய்தித்தாளை விரித்து அதில் ’பப்பரப்பே..’ ன்னு பரப்பிட்டு அமர்ந்தார். கீழ உக்காந்தா பேண்ட் அழுக்காயிரும்னு தெரியர அளவுக்கு அவருக்கு பகுத்தறிவு வேல செஞ்சிருக்கு, சந்தோசம்..!!

நம்ம ஆளோட பேரு வயசு எல்லாம் கேட்டு தெறிஞ்சுட்டு, கைய புடிச்சு ரேகையும் பாத்துட்டு நம்மாளப் பாத்து சோகமா ஒரு லுக்கு விட்டுச்சு அந்தம்மா. அப்புறம் கண்ண மூடி ஏதேதோ சாமியெல்லாம் கூப்பிட்டுச்சு. கடைசியா “ஜெய் ஜக்கம்மா… மருதாசலத்துக்கு நல்ல சேதி சொல்லும்மா..”ன்னு சொல்லி, ’ஸ்பின் பௌலிங்’ போடற மாதிரி கைய ரெண்டு தடவ சொழற்றி ’சோலி’ய சொளேர்னு உருட்டுச்சு. ஆறு விழுந்தது.

“ஆறு நட்டம்…”

சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினார் அந்தப் பெண். நம்ம ஆளு மூஞ்சி டக்குனு சோகமாயிடுச்சு. மறுபடியும் கண்களை மூடி ஜெய் ஜக்கம்மா.. சொல்லி இன்னொரு பௌலிங். இப்போ நாலு விழுந்துச்சு.

“நாலும் நட்டம்…” னு சொன்னதும் நம்ம ஆளு நெஜமாவே ஃபீல் ஆயிட்டாரு.

இருக்காதா பின்ன இப்போ தான் தொழில் தொடங்கறக்கு லோனுக்கெல்லாம் அப்ளை பன்னியிருக்காரு. அம்பானிக்கு அடுத்ததாவோ, பில்கேட்சுக்கு பக்கத்திலயே ஒரு தொழிலதிபர் ஆகனும்னு ’சின்னதா’ ஒரு ஆசைல இருக்காரு. அரசியல்வாதி ஆகனும்னு ஒரு கணவு வேற இருக்கு. விக்ரமன் படத்துல வர்ற மாதிரி ஒரே பாட்டுல பணக்காரனாகி எம்.எல்.ஏ.., எம்.பி னு டபக்கு டபக்குனு மேல வந்தறனும்னு ’நியாயமான’ கணவுல மெதந்துட்டு இருக்கிறவர்கிட்ட போய் ”நட்டம்… நட்டம்…” னா ஃபீல் ஆகாம என்ன பன்னுவாரு.

அடுத்ததா அந்தம்மா ஒரு ஓலைச்சுவடிய எடுத்துச்சு. நம்மஆளு கைல ஒரு சாக்கு தெக்கிற கோனூசியக் கொடுத்து. “குத்துங்க எஜமான்… குத்துங்க..” என்பது போல சைகை காட்டுச்சு. இவரு பவ்யமா கண்ண மூடி பயபக்தியா சாமியெல்லாம் கும்பிட்டுட்டு, ’சொளக்..’ ன்னு நடுவால குத்துனாரு. இவரு குத்துன இடத்துல அந்தம்மா ஓலைச்சுவடிய திறந்து காட்டுச்சு. அதுல பாம்பும் கீறியும் சண்டை போடுற மாதிரி ஒரு படம் இருந்துச்சு.

“ஒனக்கு நாக தோசம், செவ்வா பார்வ இருக்கு… தொட்ட காரியந் தொலங்காது, ஊட்டுல சண்டையே தீராது, மொத்தத்துல நிம்மதியே இருக்காது..” ஒரே போடா போட்டுச்சு. மறுபடியும் சாமி கும்பிட்டு சொளக்குனு குத்துனாரு நம்ம ஆளு. அந்தம்மா ஓலைச்சுவடிய விரிக்க.. மருதாசலம் ஆர்வமா பாத்தாரு. அதுல ஏசுநாதர் பாவமா சிலுவையில தொங்கிட்டு இருந்தார்.

“அடுத்தவம் பன்ற பழிபாவமெல்லா ஒம்மேலதா வந்து விழுகும்..” சாபம் விடுவது போல அந்தம்மா பேசியதும் நம்மாளு மகா கடுப்பாயிட்டாரு.

“அஞ்சு வெரல இறுக்கமா மூடிட்டு ஒரு வெரல நீட்டு..” ன்னு அந்தம்மா சொல்ல நம்மாளு நடுவெரல ”டொய்ய்ய்ங்ங்…” ன்னு நீட்டினாரு.

”பாத்தியா…!! அது பாம்பு வெரலு; வெசம்..”

அந்தம்மா இன்னிக்கு எதோ ஒரு முடிவோடதான் இருக்கு போல, சும்மா அடிச்சு விடுது. நம்மாளுதான் கிடுகிடுன்னு ஆடிப்போயிட்டாரு.

“இதுக்கெல்லாம் என்ன பரிகாரம்..?” மருதாசலம் அப்பாவியா கேட்டாரு. இந்தக் கேள்விக்குதான் இவ்ளோ நேரம் காத்திருந்த மாதிரி அந்தம்மாவுக்கு அவ்வளவு சந்தோசம்.

“எதோ துஷ்ட்டப்பொருளால உனக்கு வெசம் ஏறியிருக்கு, நீ கையால தொடல, காலால மிதிக்கல, தாண்டிப்போனதால வந்த வெண…, ஒரு சொம்பு தண்ணியில நிருபிச்சு காட்டறேன்…அதுக்கப்புறம் உனக்கு நம்பிக்க வந்தா.. உனக்கு சம்மதம்னா பரிகாரம் பன்னித்தறேன்” நம்பற மாதிரியே பேசுது.

”அதான் அந்தம்மா ’டெமோ’ காட்டறேன்னு சொல்லுதே அப்புறம் என்ன? ட்ரை பன்னிற வேண்டியதுதான்..” மருதாசலம் ஒரு முடிவோட சரின்னு சொல்லிட்டாரு. ஒரு சொம்புல தண்ணிய எடுத்து அது பக்கத்துல ஒரு பித்தளைல செஞ்ச பாம்பு சிலை, அப்புறம் இன்னொரு சாமி சிலைய வச்சாங்க. அப்புறம் அந்தம்மாவோட ஜோல்னா பையில இருந்து சில பொருள்கள எடுத்து பக்கத்துல வச்சாங்க.

அந்த சொம்புல இருந்து ஒரு கைல கொஞ்சம் தண்ணிய அள்ளி மருதாசலத்தோட உள்ளங்கையில ஊத்தி டேஸ்ட் பாக்க சொல்லுச்சு, நம்மாளும் ’சொர்ர்ரக்’ னு மோட்டார் போட்ட மாதிரி உறிஞ்சிட்டு தண்ணி ”பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு”ன்னு சொல்ற மாதிரி மண்டைய ஆட்டுனாரு.

மூணு வெரல தண்ணிக்குள்ள வை தம்பின்னு அந்தம்மா சொன்ன மாதிரியே தண்ணிக்குள்ள வெரல வச்சு அவரோட தோள்ல இருந்து மூணுதடவ புஸ்..புஸ்..னு ஊதினாரு. அப்போ கண்ண மூடி அந்தம்மா பயங்கர பில்டப்பெல்லாம் பண்ணிச்சு. மறுபடியும் கொஞ்சம் தண்ணிய அள்ளி நம்மாளு கைல ஊத்தி “இப்போ குடிச்சு பாருன்னு..” சொல்லுச்சு. தண்ணிய குடிச்ச மருதாசலம் அப்படியே ஷாக் ஆயிட்டாரு ஏன்னா தண்ணியில விபூதி வாசம் அடிச்சுது.

“பாத்தியா உன் ஒடம்புல வெசம் இருக்கு, அதான் தண்ணி துவர்க்குது. ஆயிரத்து ஐநூறு ரூபா குடு, வெசத்த எடுத்தர்றேன்” னு கரக்ட்டா மேட்டருக்கு வந்துச்சு. நம்மாளு தான் ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஆச்சே பேரம் பேசி நூத்தம்பது ரூபாய்க்கு பேசி முடிச்சாரு. அந்தம்மா கேட்டது போலவே மூனு பச்ச எல, மூனு கல்லு, ஒரு மொழம் நூல் இந்த மூனு பொருளையும் எடுத்துட்டு வந்து நம்மாளு அந்தம்மாகிட்ட கொடுத்தாரு. அதையெல்லாம் சொம்புக்கு பக்கத்துல வச்சு, ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கான்னு எதேதோ மந்திரமெல்லாம் சொல்லுச்சு.

அந்த சொம்பு மேல ஒரு கர்ச்சீப் வச்சு மூடி தலைகீழா திருப்பி காட்டுச்சு. என்ன ஆச்சர்யம் ஒரு சொட்டு தண்ணி கூட கீழ சிந்தல. எனக்கே ஆச்சர்யமா போச்சு.

“பாத்தியா ஜக்கம்மா சொல்லுக்கு தண்ணி கட்டுப்பட்டிருச்சு, வெசமெல்லாம் இந்த தண்ணியில எறங்கிடுச்சு. இதக்கொண்டுபோய் மரத்துக்கு ஊத்திட்டு,திரும்பி பாக்காம வந்துடு”

அப்படின்னா ஆப்பரேசன் சக்சஸ்னு அர்த்தமாம். நல்லபடியாக நாடகக் கம்பெனியை நடத்தி முடித்த நிம்மதியில் நூற்றைம்பது ரூபாயை சுருக்குப் பைக்குள் சொருகிக்கொண்டது. அந்தம்மா வந்து உக்கார்ந்ததிலிருந்து ஆப்பரேசன் முடியும் வரை குட்டி ஜக்கம்மாவையும் மருதாசலத்தையும் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தான்.

“இப்போ அதே மாதிரி நானும் செஞ்சு காட்டறேன்னு குட்டி சொம்பில் தண்ணீர் ஊற்றினான், “ஜக்கம்மாட்ட வெளையாடாதே தொழில் வெளங்காது ஜாக்கிறத..” னு ஜக்கம்மாவின் ஜிங்குஜா மிரட்டியது.

“அத நான் பாத்துக்கறேன் இப்போ உங்க வேசத்த கலைக்கிறேன் பாருங்க..” என்று துனியால் சொம்பை மூடியதுதான் தாமதம். ஜக்கம்மா தலைதெறிக்க ஓடிவிட்டது. ஆனால் அப்பகூட நம்மாளு மருதாசலம் அதெல்லாம் செய்ய முடியாது அதுக்கெல்லாம்  சாமியோட அருள் இருக்கனும்னு சவால் விட்டாரு. பிரியாணி பந்தயம் டீலா நொ டீலான்னு கேட்டாரு.

முதல் முயற்சி தோல்வி. இரண்டாவது முயற்சியில் குட்டியின் ’சக்தி’க்கு தண்ணீர்  கட்டுப்பட்டது. முதல் முயற்சியில் தோற்றுப்போனதால் தான் இந்த பிரியாணி பார்ட்டி…

(தண்ணீரில் விபூதி வாசம் வீசக் காரணம் எதையோ தேடுவதுபோல ஜக்கம்மா அவரது ஜோல்னா பைக்குள் கையை விட்டு நக இடுக்கில் திருநீர் எடுத்திருந்தது, இரண்டாவது முறை தண்ணீரை குடிக்க கொடுக்கும்போது நகத்திலிருந்த விபூதி தண்ணீரில் கறைந்திருந்தது. ஆரம்பம் முதல் இதை வீடியோ எடுத்திருந்த நான் திருப்பி அதை போட்டுப்பார்த்தே அதை கண்டுபிடிக்க முடிந்தது.அவ்வளவு தொழில் நேர்த்தி ஜக்கம்மாவுக்கு….)

ஜெய் ஜக்கம்மா…!!

ஜெய் ஜக்கம்மா…!!

ஜெய் ஜக்கம்மா…!!...

அணுசக்தி வரமா சாபமா..? (19.03.2011)




''புத்தர் புன்னகைக்கிறார்''...

இது என்னவோ ஒரு அமைதி மாநாட்டின் பெயர் அல்ல இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது நிகழ்த்திய முதல் அனுகுன்டு சோதனையின் பெயர் (பொக்ரான் 1974 may 18).
"நாடுகள் சம வலிமை பெறும்போதுதான் போருக்கான வாய்ப்புகள் குறையும் அப்போதுதான் என்னால் புன்னகைக்க முடியும் என்று புத்தர்  கூறினார் ,இப்போது நாமும் அணு வல்லரசுகளின்  வலிமைக்கு நிகராக வலிமை பெற்றுவிட்டோம் எனவே இந்த பெயர் சூட்டப்பட்டது "என்று இந்திரா கூறினார் .
(இலங்கையில் பௌத்தம்  செய்த பாசிச படுகொலைகளை புத்தர் பார்த்திருந்தால் தற்கொலை பண்ணிக்கொண்டு செத்திருப்பார்).



"அணுவைக்கொண்டு அமைதி சமைப்போம் "...

இதை கூறியது ஏதோ அமைதியை விரும்பும் ஒரு நாட்டின் அதிபர் அல்ல
இரண்டாம் உலக போரில் ஜப்பானின் ஹிரோஷிமா,நாகசாகி,என்ற இரு நகரங்களின் மேல்  அணுகுண்டை வீசி இரண்டு இலச்சத்து பதினைந்தாயிரம்  அப்பாவி மக்களை கொன்றழித்த கொலைகார அமரிக்க அதிபர் ஐசனோவர் ..
உண்மையில் அந்த அணுகுண்டுகளை வீசவேண்டிய அவசியமே இல்லை ஜப்பான் சரணடைய தயாராகத்தான் இருந்தது ,ஆனால் உலகில் முதன் முதலில் கண்டுபிடித்த இந்த பேரழிவு ஆயுதத்தை பரிசோதனை செய்யவே அமெரிக்கா அணுகுண்டை வீசியது,அதுவும் சேத விபரம் முழுமையாக தெரிந்து கொள்வதற்காக அதுவரை பாதிக்கப்படாத ,தாக்குதலுக்கு ஆளாகாத இரண்டு நகரங்களை தேர்ந்தெடுத்து அழித்தது, லட்சக்கணக்கான மக்களின் மரண குரல்களுக்கு நடுவே வெட்கமின்றி சிரித்தது அமெரிக்க ஏகதிபத்தியம்.(1945 aug 6,9) .இந்த  விவரமெல்லாம்  இரண்டாம்  உலகப்போர்   வரலாறு  தெரிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும் ,சரி நாம மேட்டருக்கு வருவோம். 

அணு ,அனுசக்தினு சொல்லுறாங்களே அப்படின்னா என்ன?
அணுவின் மையதில் கருவாக புரோட்டானும்,நியுட்ரானும் இருக்கும்,எலக்ட்ரான் அதை சுற்றி வரும்,புரோட்டானில் இருந்து மொசான் எனும் துகள் பிரியும் போது நியுட்ரான் உருவாகிறது.மொசானும் நியுட்ரானும் சேர்ந்து புரோட்டான் உருவாகிறது.கருவை சுற்றிவரும் எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரானின் நிறைக்கு சமமான ஆனால் நேர் மின்னூட்டம் கொண்ட பாசிட்ரானும் இருக்கிறது  என்றெல்லாம் அணு விஞ்ஞானதுக்குள் சென்று உங்களை குழப்ப விரும்பவில்லை.

எளிமையாக சொல்லவேண்டுமென்றால்  ஒரு பொருளை தொடர்ந்து உடைத்துக்கொண்டே  சென்றால் இறுதியில் கிடைக்கும் கண்ணுக்கு புலப்படாத ஒரு துகளே அணுவாகும்.ஒரு குண்டூசியின் முனையில் மட்டும் 25 லட்சம் அணுக்கள் உள்ளது என்பதை வைத்து அணுவில் அளவை கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த அணுவையும் உடைக்க முடியும், அப்படி உடைக்கும் போது ஏற்ப்படும் நிறை இழப்பால் சக்தி வெளிப்படுகிறது ,அந்த சக்தியானது மீண்டும் மீண்டும் அணுப்பிளவை துரிதப்படுத்துகிறது .இது ஒரு சங்கிலித்தொடர் போல நிகழ்கிறது அப்போது வெளிப்படும் பிரம்மாண்டமான சக்தியே அனுசக்தியாகும் .இதை பயன்படுத்தி மின்சாரமும் தயாரிக்கலாம்,அணுகுண்டும் தயாரிக்கலாம்.அதாவது நெருப்பை பயன்படுத்தி விளக்கும் ஏற்றலாம்,வீட்டையும் கொழுத்தலாம் என்பது போல.


சரி இப்போது நாம் கேட்கும் கேள்வி என்னவெனில் அணுவைக்கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரம் யாருக்காக ?-மக்களுக்காக, அணுகுண்டு தயாரிப்பது எதற்க்காக -அதுவும் மக்களின் பாதுகாப்பிற்காக(!)சரி ஜப்பான் மக்களுக்காக கட்டப்பட்ட அணு உலையில் ஏற்ப்பட்ட விபத்தால் அதே மக்கள் ஆபத்தை சந்திக்கிறார்களே ஏன் ?இது யார் தவறு?

கடல் மட்டத்திலிருந்து 70 கி மீ தொலைவில் தான் அணு உலைகளை அமைக்க வேண்டும்,8 மீட்டர் உயரதிர்ற்கு பாதுகாப்பு சுவர்கள்  இருக்கவேண்டும் ,என்னும் விதிகளை மீறிய அதிகாரிகளின் தவறா?இல்லை அதற்கு அனுமதியளித்த அரசாங்கத்தின் தவறா?பாதுகாப்பு ஏற்பாடுகளை சரி பார்த்து சான்றிதழ் கொடுத்த விஞ்ஞானிகளின் தவறா?  ஆனால் ஒருவிசயம் என்னவெனில் தவறு யார் மீது இருந்தாலும் தண்டனை அனுபவித்து வருவது மக்கள் தான்.(நமது கூடங்குளம் அணுமின் நிலையம் கடற்க்கரையோரம் தான் அமைந்திருக்கிறது)


ஜப்பான் விபத்திற்கு பிறகு நமது விஞ்ஞானிகள் நமது அணு உலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்து ,நமது உலைகள் மூன்றாம் தலை முறை உலைகள் எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் நல்ல முறையில் உள்ளது என்று இந்திய அணுசக்தி கழக தலைமை நிர்வாக இயக்குனர் s. k .ஜெயின் கூறியுள்ளார் .இந்த ஆய்வு சம்பிரதாயமாக இல்லாமல் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட முழுமையான ஆய்வாக இருக்கவேண்டும என்பதே மனித நேயம் உள்ள எல்லோரின் எண்ணமாகும்.

அனுவிபத்து நிகழ்வது இது முதல் முறையல்ல,இதற்க்கு முன்பு பல விபத்துகளை உலகம் சந்தித்துக்கொண்டுதான் உள்ளது.1857 முதல் இன்று வரை சுமார் 4000 விபத்துக்கு மேல் நிகழ்ந்துள்ளது.
1957--யூரல் மலைத்தொடர் விபத்து ,1961--அமெரிக்க ,1969--சுவிஸ்,1974--ரஷ்யா,1975-89 மீண்டும் அமெரிக்கா(த்ரீ மைல்ஸ் ஐய்ச்லாந்து),1981 ஜப்பான்,1983-அர்ஜென்டினா ,1986-அமெரிக்கா ,,இது போல இன்றுவரை தொடர்கிறது .

"இதுபோன்ற ஆபத்தான அணு உலைகள் மனிதநேயம் அற்ற முறையில் உருவாக்கப்படுவதும்,பிற நாடுகளுக்கு விற்பதும் கூடாது "என்று முதல் அணு உலையை வடிவமைத்த விஞ்ஞானி டாக்டர் தேவில் லிலி கூறியுள்ளதை நினைவுகூர்வோம் .

அணு உலை கொண்டு மின்சாரம் தயாரிப்பதென்பது கச்சா முச்சாவென்று செலவு பிடிக்கக்கூடிய விஷயம்,ஆனாலும் நமது! அரசு  கண்டிப்பாக அணு உலை வாங்கியே தீர்வது என்றும் அதுவும் கொலை வியாபாரிகலான அமெரிக்காவிடம் தான்  வாங்குவேன் , என்று அடம் பிடித்ததையும் இது நமது இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு எப்போதுமே தடையாக இருக்க கூடிய(!) இடதுசாரிகள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றதையும் ,அதை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி(!)பெற்றதையும் நமக்கு தெரியும், இப்போது  m.p களுக்கு பணம் கொடுத்துதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வென்றது என்கிற உண்மை விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் குட்டு வெளிப்பட்டு,கோழி திருடுன மாதிரி அரசு முழிக்கிறது வேறு கதை



சரி அந்த ஒப்பந்தம் பற்றி ஒரு சின்ன பார்வை பார்க்கலாமா?
ஒரு சின்ன கதை சொல்லட்டுமா? நீங்கள் ஒரு வீடு கட்ட நினைக்கிறீர்கள்,ungal   ஊர் மேஸ்திரி வந்து உங்களிடம் பேசுகிறார்.சதுர அடிக்கு 1500 ரூபாய்  கேட்கிறார் ,கட்டிடத்தின் தரத்திற்கும் முழு பொறுப்பேற்கிறேன் என்கிறார்,ஆனால் நீங்கள் பக்கத்துக்கு ஊரில் இருந்து கோட் சூட் போட்ட ஒரு மேஸ்திரியை கூப்பிட்டு பேசுகிறீர்கள் ,அவர் சதுர அடிக்கு 4000 ருபாய் கேட்கிறார்.சில நிபந்தனைகளை உங்களுக்கு போடுகிறார்,என்னவெனில் நாளைக்கு வீடு இடிந்து உங்கள் தலையில் விழுந்தாலும் அதற்க்கு அவர் பொறுப்பில்லை,.வீட்டை கட்டி முடித்த பிறகு நீங்கள் குடியேறிய பிறகும் கூட அவர் எப்போது வேண்டுமானாலும் உங்கள் படுக்கை அறை வரை வந்துகூட  எட்டி பார்ப்பார் .காலம் முழுதும் அவர் செய்யும் எல்லா போக்கிரி வேலைகளுக்கும் ஆமாம் சாமி போடணும் . நீங்களும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் போடுகிறீர்கள் .

இந்த கதையோடு பொருத்தி அந்த ஒப்பந்தத்தை பார்ப்போம் ,அதாவது ரூபாய் 6 லத்சம் கோடி ருபாய் முதலீட்டில் நமக்கு 2020 இல் கிடைக்கக்கூடியதாக கணக்கிடப்பட்ட மின் அளவு இருபது ஆயிரம்  மெகாவாட் .அதே நமது பாரம்பரிய முறைகளான அனல்,புனல்,காற்றாலை மூலம் இதே தொகையை முதலீடு செய்தால் நமக்கு 90 ஆயிரம் மெகாவாட் கிடைக்கும்,இந்த 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நமக்கு ஆகும் செலவு 1.3 லத்சம் கோடி மட்டுமே என்பது தெளிவு .அதற்க்கான நிபந்தனைகள்,  1. அணுகுண்டு சோதனை செய்ய கூடாது ,2.இப்போது இருக்கும் அணு உலைகளை சிவில் ராணுவம் என பிரிக்க வேண்டும் (இதற்க்கு மட்டும் 4000 கோடி ரூபாய் செலவாகும்),3.நமது அணு உலைகளை அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யும் ,4.ஏதாவது விபத்து நேர்ந்தால் அதற்க்கு அமெரிக்கா பொறுப்பேற்காது (அவர்களின் அணு உலைகள் மேல் அவ்வளவு நம்ம்பிக்கை),5.அவசரமா வந்தா கூட கேக்காம பாத்ரூம் போகக்கூடாது ,என்பது போன்ற கையை முறுக்கும் நிபந்தனைகள் ,அதனையும் தாங்கிக்கொண்டு நமது அரசு வலிக்காத மாதிரியே நடித்து ஒப்பந்தத்தை நிறைவேற்றி விட்டது ,(ரொம்ப சந்தோஷம்)






1. நாட்டின் வளர்ச்சிக்கு என்று சொல்லப்படுகிற எந்த ஒரு திட்டமும் மக்களுக்கான திட்டமாக இருக்க வேண்டும்....
2. வினாடிக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈடும் 10 சதவிகித மக்களை மட்டும் கருதாமல் மீதம் 90 சதம் உள்ள ஏழை ,நடுத்தர மக்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்...
3, மக்களின் சமூக ,பொருளாதார,வாழ்க்கை பாதுகாப்பை கேள்விக்குறியாகி தீட்டப்படும் திட்டம் அறிக்கை அளவில் வெற்றிபெற்றாலும் உண்மையில் அது தோல்வியடைந்த திட்டமேயாகும் ,
4. இன்னும் சொல்லப்போனால் கமிசனுக்கும், லஞ்சத்துக்கும்,அடிமையாகி பேராசை காரணமாக போடப்படும் திட்டம் மூலம் மக்களுக்கு செய்யும் துரோகங்களை வரலாறு பதிவு செய்துகொண்டுதான் உள்ளது.

5 . மக்கள்விரோத கொள்கைகளுக்கும்,நடவடிக்கைகளுக்கும் மக்கள் மன்றம் தீர்ப்பு சொல்லும்...



ஒரு போராளியின் பதில் கடிதம் ... (27.1.2011)



சிறு குழந்தையின் அழுகுரலில்
சுத்த சங்கீதம்
நீ எப்படியடி எதிர்பார்ப்பாய் ...

தாய்பாலும் பசிதீர்க்கும்
புட்டிபாலும் பசிதீர்க்கும்,
புட்டிபாலை குடித்துவிட்டு
என்னிடம் தாய்பாசம் -நீ
எப்படியடி எதிர்பார்ப்பாய் .....

சொந்தங்கள் முள்முகாமுக்குள்
சிக்கியிருக்கும்போது -உன்
சிங்கார அழகில் நான்
சலனப்படுவேன் என்று -நீ
எப்படியடி எதிர்பார்ப்பாய் ...

தாய் மண்ணின் நிலை எண்ணி
நான் உறங்க போனால் ,
தொண்டை அடைத்து துக்கம் வரும்
இமை உடைத்து கண்ணீர் வரும்
இறுதியாக தூக்கம் வரும்
பிறகெப்படியடி காதல் வரும் ...

நம் தாய் மண்ணில் தமிழீழம்
நிச்சயம் மலரும்
காத்திரு என் கண்மணியே
கட்டாயம் வருவேன் ...

ஒருவேளை நான் சமரில்
சமாதி அடைந்தால்
உனக்கென்று  ஒரு வாழ்க்கை
உருவாக்கி வாழ்ந்துகொள் ...

எதிர்காலத்தில் உன் பிள்ளைகளுக்கு
சொல்லிகொடு மாவீரர்களின் தியாகத்தை ...

உனக்குள் மட்டும் சொல்லிக்கொள்
நானும் ஒரு மாவீரனை
காதலித்தேன் என்று......


அமெரிக்காவும் அடாவடிப் போர்களும்... (23.03.2011)



"அன்புள்ள அப்பா,நீங்கள் நலமாக இருப்பீர்கள் .எனக்கு இரண்டு  வேளை சாப்பாடு எப்படியும் கிடைத்துவிடும் என்பதால் நான் நலமாக இருப்பேன் என்றுதான் நினைதுக்கொண்டிருப்பீர்கள்.ரொம்ப நலம் ,இரண்டு வேளை சாப்பாடு கொடுத்து விடுகிறான் என் எஜமானன் .ஆனால் ஒரு  நாளைக்கு ஆறுவேளை அவனுடன் படுத்து எழவேண்டியிருக்கிறது .என் இடுப்பு எலும்புகள் ஒழுங்காக இருக்கின்றனவா? ,அல்லது நொறுங்கி தூளாகிவிட்டதா? என்று   தெரியவில்லை .வலி நிரந்தரமாகி விட்டது..படுத்து எழ வேண்டியிருக்கிறது என்றுதான் சொன்னேனே தவிர, உறங்கினேன் என்று சொல்லவில்லை என்பதையும் கவனிக்கவும்.

என் எஜமானன்  ஒரு மிருகம் ,அவனது மூர்கத்தனத்தை என்னால் விவரிக்கவே முடியாது ,விடிந்ததிலிருந்து நாலைந்து முறை உறவு கொள்ள அழைத்திருக்கிறோமே ,அந்த பதினேழு வயதுபெண்ணை கொஞ்சம் ஓய்வெடுக்க சொல்வோம் என்று கனவிலும் நினைக்க மாட்டான் .காரியமானதும் உடனே என்னை வேலைக்கு விரட்டுவான் .அவனை திருப்தி செய்த கையேடு அவனது  பண்ணை குதிரைகளுக்கும் சேவகம் செய்ய வேண்டும் .

ஆனால் அந்த குதிரைகளுக்கு என் மீது கொஞ்சம் இறக்கம் உண்டு .என் எஜமானன் எனக்குகொடுக்கும் உப்பு போட்ட ஒரு பிடி அரிசிப்பொரி எனக்கு போதாது என்று எப்படியோ அவை தெரிந்து வைத்திருக்கும் .அவற்றிற்கு வைக்கும் கொள்ளில் கொஞ்சம் எனக்காக மிச்சம் வைத்திருக்கும்,நான் அவற்றை தேய்த்து குளிப்பாட்டிய பிறகு பிடிபிடியாக அள்ளி சாப்பிடுவேன்.........."


இந்த கடிதம்  1756 அல்லது 1757 ஆம் வருடம் எலிசபத் ஸ்பிரிங் என்னும் விர்ஜீனிய அடிமை எழுதியது
(ஆதாரம் ;டாலர் தேசம் ,-பா.ராகவன் ,பக் ;100)

உலகிற்கெல்லாம் ஜனநாயகம் ,மனித உரிமைபற்றி வாய் கிழிய வகுப்பெடுக்கும் அமெரிக்கா ,அந்த மண்ணின்பூர்வ குடிகளான செவ்விந்தியர்களை நடத்திய முறைக்கு இது ஒரு உதாரணம் .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

உண்மையில் இன்று அமெரிக்கர்கள் என்று நாம் கூறுபவர்கள் அந்த மண்ணின் பூர்வ குடிகளல்ல ,அவர்கள் வந்தேறிகள் .பூர்வ குடிகளான செவ்விந்தியர்களை லட்சக்கணக்கில் கொன்று அவர்களின் பூமியை ஆக்கிரமிப்பு செய்துகொன்ட குடியேறிகள்.

நமது தஞ்சையை ராஜராஜ சோழன் ஆண்ட பொழுதெல்லாம் அமெரிக்கா என்று ஒருதேசமே  இல்லை .1492 இல் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கிறார் .அதன் பிறகு போர்த்து கீசியர்கள்,ஸ்பெயின்,இங்கிலாந்து நாடுகள் அந்த நிலப்பகுதிக்காக  அடித்துக்கொண்டு தத்தமது காலனிகளாக சிறு சிறு பரப்புகளை ஆக்கிரமித்து கொள்கிறது.இதில் இங்கிலாந்தை அப்போது ஆண்ட முதலாம் ஜேம்ஸ்   மன்னனின் நினைவாக அமெரிக்கா மண்ணில் ஜேம்ஸ்டவ்ன் என்ற
 ஒரு சிறு நகரம் உருவாக்கப் பட்டது.அதை சுற்றிதான் விர்ஜீனிய குடியேற்ற பிரதேசம் உருவானது .இந்த பகுதியில் இங்கிலாந்து குடியேற்றம் வேகமாக நடைபெற்றது.எதிர்ப்புகாட்டிய செவ்விந்தியர்களின் வில்லும்,கல்லும்,.இங்கிலாந்தின் துப்பாக்கிகளுக்கும்,பீரங்கிகளுக்கும் முன்னால் கொடுமையான முறையில் முறியடிக்கப்பட்டது.(உண்மையில் அந்த காலகட்டத்தில் அவர்களின் ஆயுதங்கள் வில்லும்,ஈட்டியும்,சில கல் ஐயுதங்களும்தான்).ஏராளமான செவ்விந்தியர்களை கொன்று அழித்தது போக எஞ்சிய சிலரை தாங்கள் உருவாகிய புகையிலை தோட்டங்களுக்கு வேளை செய்ய அடிமைகளாக ஆக்கிக்கொண்டனர்,சில ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் அடிமைகளை இறக்குமதி செய்துகொண்டனர்.

பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய மக்கள் இங்கிலாந்தின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக
1765 இல் போராட ஆரம்பித்து கடைசியில் சிதறிக்கிடந்த துண்டு துண்டு காலணிகள் எல்லாம்  ஒன்று சேர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான சுதந்திர போராட்டமாக பரிணாமம் அடைகிறது .1783 இல் அமெரிக்கா சுதந்திர தேசமாக ,அமெரிக்கா ஐயக்கிய நாடுகளென்று தம்மை அறிவித்துக்கொண்டது.

அமெரிக்கா சுதந்திரம்பெற்று சுமார் இரண்டுநூற்றாண்டுகளில் அத்தேசம் இதுவரை சுமார் நூருபோர்களிலாவது பங்கெடுத்திருக்கிறது.போருக்கான செலவுகளை விட போருக்கு பிந்தைய ஆதாயங்களையே குறிவைத்து போர்களை நடத்துகிறது .அந்த தேசத்தின் மொத்த அரசியலையும் போர்கள்தான் தீர்மானிக்கிறது.உலகிலேயே இந்த தேசம் மட்டுமே போர்களை ஒரு வருமானம் தரும் தொழிலாக வைத்திருக்கிறது .நினைத்தால் நடுக்கம் தரக்கூடிய இந்த செயலை மிக நிதானமாக திட்டமிட்டு ,கவனமாக செய்து கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள் .

நமது இந்திய கார்கில்போரில் வெற்றிபெற்றது ,ஆனால் அந்த  சிறிய போரே நம் பொருளாதாரத்தை எவ்வளவுதூரம்பாதிதது என்பதைநினைவு கூர்வோம்,    நம் தேசம்முழுதும்ஊருக்குஊர்,தெருவுக்குதெரு யுத்தநிவாரண நிதி நாம் துண்டேந்தி வசூல் செய்ததை ஒப்பிடும் போதுஇவ்வளவுபோர்களுக்கு பிறகும் அமெரிக்காவின் செல்வ செழிப்பிற்கும் ,பளபளப்பிர்க்கும்,என்ன காரணம்?யுத்தங்களின் முடிவில் அவர்கள் அடையும் ஆதாயமே .(உண்மையில் அமெரிக்காவின் செல்வ செழிப்பும் ஆடம்பரமும் ஒருகுறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு மட்டுமே செல்கிறது ,கடன்சுமையும்,வேலையில்லாத்திண்டாடமும் ,வறுமையும்,பட்டினியும்,அமெரிக்காவிலும் உண்டு, ஆனால் அது  திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.)

அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகளும் ,வெளியுறவு கொள்கைகளும்,அப்பட்டமான மோசடிதனங்களும்,திருட்டுத்தனங்களும் ,சுயநலமும்,மட்டுமே கொண்டதுஎன்பது அதன் வரலாறு முழுதும் காணக்கிடைக்கும் உண்மைகளாகும்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலுள்ள எண்ணெய்வளத்தை எடுக்காமல் தன்எதிர்கால தேவைகளுக்கு பதிரப்படுதிக்கொண்டு குவைத் ,ஈராக்,......இன்று லிபியா என எண்ணெய் வளமுள்ள நாடுகளின்மேல் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடுத்து தன் எண்ணெய் திருட்டை  கொஞ்சமும் உறுத்தல் இன்றி  இன்றுவரையிலும் செய்துவருகிறது.

தனக்கு லாபமில்லாத  எந்த தேசத்துடனும் அமெரிக்கா உறவு வைத்துக்கொண்டதுமில்லை ,உள்ள விவகாரங்களில் தலையிடுவதுமில்லை ,போர் தொடுப்பதுமில்லை.ஆனால் உலகில் யுத்தம் நடந்துகொண்டே இருப்பதை எப்போதுமே ஊக்குவித்துக்கொண்டு இருக்கும் சண்டையிடும் இரு தேசங்களுக்குமே ஆயுதங்களை விற்று கொள்ளைலாபம் சம்பாதிக்கிறது.(உம ;இந்தியாவுக்கும் ஆயுதம் விற்கும்,பாகிஸ்தானுக்கும் ஆயுதம் விற்கும் ) நமது நாடு கூட சமீபத்தில் ஆயுத கொள்முதலில் முதலிடம் என்றுஊடகங்களில் செய்தி வெளியானதும் கொஞ்சம் எதிர்ப்புகள் வெளிவர துவங்கியதும் ,உலகக்கோப்பை போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி என்று நமது உளவுத்துறை செய்தி வெளியிட்டு ஆயுத கொள்முதல் அவசியமானதுதான் என்று எதிர்ப்பாளர்களின் வாயை அடைத்ததும்சென்ற வாரத்தில் ஊடகங்களில் பார்த்திருக்கலாம்..

.அமெரிக்கா பிற நாடுகளிடம் நிர்பந்திக்கும் விஷயங்கள் என்னவெனில்
1.அமெரிக்க பெருநிருவனங்களுக்கு கொள்ளைலாபம் கிடைக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது
2.தன் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு கூட்டாளியாக இருக்க செய்வது
3.ஐ நா சபையில் தனக்குஆதரவாக வாக்களிக்க செய்வது
4.அந்த நாடுகளில் தன்  ராணுவ தளங்களை அமைக்க அனுமதிக்க செய்வது.
இன்று உலகில் 70  நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளது

இந்த வகையில் பிற நாடுகளை தன்கைப்பிடியில் வைக்க அமெரிக்கா மேற்கொள்ளும் சூழ்சிகள்
,

1.பிற நாடுகளை உலகவங்கி,சர்வதேச நிதியம்,போன்ற அமைப்புகளமூலம்  கடன் கொடுத்து அந்த கடன்தொகையில் அமெரிக்கா பெரு நிறுவனங்கள் பெரும்லாபம் ஈட்டுவதற்கான ஒப்பந்தங்களை பெறுவது .மேலும் அந்த நாட்டை பெரும் கடன்சுமையில் அழுத்தி தன்மீதான விசுவாசத்தை உறுதி செய்துகொள்வது (உம ;இந்தியா-இன்றுவரை )

2.இந்த வலையில் விழாத நாடுகளின் அதிபர்களுக்கு எதிராக உள்நாட்டில் ஏதாவது குழப்பத்தை ஏற்ப்படுத்தி ,
செயற்கையாக கலகத்தை உருவாக்கி ,கலகக்காரர்களுக்கு ஆயுதம் பணஉதவி போன்றவற்றை செய்து அந்த ஆட்சியை கவிழ்த்து தனக்கு சாதகமான ஒரு பொம்மை அதிபரை அமர்த்தி தனக்கு விசுவாசமாக இருக்கும்படி செய்வது (உம;ஈரான்-அதிபர் மொசாடேக்-1951)

3.பொருளாதார தடைகள் விதித்து அந்த நாட்டை தனிமைபடுத்தி தன் வழிக்குக்கொண்டுவர முயல்வது (கியூபா)

4.அதுவும் எடுபடாத போது தன்கொலை  படையான
C.I.A.வை கொண்டு  அந்த நாட்டின் தலைவரை கொலை செய்வது (உம ;ஈக்வடார்  அதிபர் ரோல்டோஸ் -1981)


5.அதுவுமியலாத பட்சத்தில் ஏதாவது ஒரு பொய்யான காரணத்தை கூறி அந்த நாட்டின்மேல் யுத்தம் தொடுத்து அந்த அதிபரைமாற்றுவது (உம ;ஈராக் அதிபர் சதாம்-2003 )




அமெரிக்கா தன்னிச்சையாக உலக நாடுகளில் தலையிட்டு நிகழ்த்திய போர்களில் முக்கியமான சில ;
சீனா1945-46,       கொரியா1950-53,    கவ்தமாலா 1954,   பிரான்ஸ்1947,    இத்தாலி1947-70,   கிரீஸ்1947-49,   பிலிப்பின்ஸ் 1945-53,  ஈரான்1953 ,    கோஸ்டா ரிகா1970-71  இந்தோனேஷியா1958,  ஈராக்1958 -63,     பிரேசில்1961-64,    கிழக்கு ஜெர்மனி1950,    லாவோஸ்1957-73,      கியூபா1959-61,     காங்கோ1964,     பெரு1968,     லாவோஸ்1967-73 ,   வியட்நாம் 1961-73,    கம்போடியா1969-70,      க்ரானடா1983,     லெபனான்1983-84,     லிபிய1986,    எல் சல்வடார்1980,     ஈரான்1987,   பனாமா1989,    ஈராக்1991,    குவைத்1991,   சோமாலியா1993,  போஸ்னியா1994-95,  சூடான்1998,    ஆப்கானிஸ்தான்1998,    யுகோஸ்லேவிய1999,    ,   ஹென்டுராஸ்1980 ,    காங்கோ1977-78,    சிலி1964-73,   போர்சுகல்1974-76,     கிழக்குதைமூர்1975-1999,    பல்கேரியா1990-91,   அல்பேனியா1949-53,   டொமினிக் குடியரசு1964-65,   உருகுவே1969-72,       கானா1966,   ஹைதி1959,  அல்பேனியா1949-53,     பொலிவியா1964-75,    அங்கோலா1975-80,   சூரி நாம்1982-84 ,  கொலம்பியா1990,   மெக்ஸிகோ1990,    பெரு1990,    ஆப்கானிஸ்தான்2001,     ஈராக்2003,     லிபியா 2011 .

  உலக நாடுகளின் போலீஸ் காரன் என்று சொல்லிக்கொள்ளும் பக்கா திருடனான அமெரிக்கா உலக நாடுகளில்தன்னிசையாக தலையிட்டு சண்டித்தனம் செய்கிறது ,உண்மையிலேயே அதற்க்கு மக்கள் நலனின் அக்கறை இருந்தால் இலங்கையில்நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்கு தன் வாய் திறக்காதது ஏன்?லிபியா மக்களின்பாதுகாப்பிர்க்கு என்று சொல்லிக்கொண்டு போர் தொடுத்த அமெரிக்காவின் கண்களுக்கு இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு முக்கியமாக படவில்லையே ஏன்?ஏனென்றால் லிபியாவில் எண்ணெய் இருக்கிறது ,இலங்கையில் என்ன இருக்கிறது?


சில இஸ்லாமிய அடிப்படை வாதிகள் கூறுவதுபோல் அமெரிக்கா இஸ்லாமுக்கோ அல்லது இஸ்லாமிய நாடுகளுக்கோ எதிரியல்ல ,அமெரிக்கா ஏகாதிபத்தியம்  ஒட்டு மொத்த மனித இனத்துக்கே எதிரி ,அமெரிக்கா தன் எதிரியையோ  அல்லது நண்பனையோ ,மதத்தைகொண்டோ,இனத்தைகொண்டோ, நிர்ணயிப்பதில்லை  ,பணத்தைக்கொண்டும்,செல்வ வளங்களை கொண்டுமே நிர்ணயிக்கிறது .

உலகின் ஒரே ஏகபோக அதிபதியாக தன்னைநிலை நிறுத்திக்கொள்ள எந்த ஒரு கொலை பாதக செயலையும் அஞ்சாமல் செய்யும் .உலகின் செல்வமெல்லாம் ஒட்டுமொத்தமாக உறிஞ்சிக்குடிக்கும் தணியாத ஏகாதிபத்திய தாகத்தோடு அலைகிறது .வர்த்தகமும் லாபமும் மட்டுமே குறிக்கோள் எனக்கொண்டு உலகின் கோடிக்கணக்கான மக்களை வறுமையிலும்,பட்டினியிலும்,நோய்களிலும்,இரக்கமின்றி கொள்ளும் தனது தாராளமய,உலகமய சூழ்ச்சி வலையை உலகம் முழுதும் விரித்துவைத்து வைத்து காத்திருக்கிறது .

தனது நாட்டில் தானியங்கள் மிகை உற்பத்தி ஏற்ப்பட்டு விலைவீழ்ச்சி ஏற்ப்பட்ட பொழுது உலகின் பல பகுதிகளில் பஞ்சத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்த போது கூட அவர்களுக்கு கொடுக்க மனமின்றி கடலில் கொட்டி அளித்தது தானே இந்த ஏகதிபத்தியம் ,இன்று மக்கள் நலன் பற்றி நாடகம் ஆடுகிறது .

அமெரிக்காவின் இந்த தறிகெட்ட ஆட்டமானது பழைய ரோமானிய பேரரசின் அடாவடித் தனங்களையே நினைவு படுத்துகிறது.அந்த ரோமானிய பேரரசு வீழ்ந்ததுபோல் ,இந்த ஏகாதிபத்தியமும் முற்ப்போக்கு சக்திகளால் முறியடிக்கப்படும் காலம் தூரமில்லை,.இந்த ஏகாதிபத்திய சக்திகளின் முதுகெலும்பை உடைத்து உலகில் பாட்டாளிவர்க சர்வதிகாரம் நிலைபெறும் நாளும்  தூரமில்லை....


மேற்கத்திய மோகமும் தொலைந்துபோகும் சுய அடையாளங்களும்.. (07.04.2011)



இந்த  தலைப்பில் விவாதிக்கும் போது கயிற்றின் மேல் நடக்கும் சாகசக்காரன் போல மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது,
என் கருத்துக்களின் மேல் விவாதம் செய்யும் என் முதல் விமர்சகியான என் அன்பு மனைவி முதல்,சக தோழர்கள் வரை என் கருத்துக்களுக்காக
(இந்த தலைப்பில் மட்டும்)ஆணாதிக்க சிந்தனை வாதி என்றும்,சனாதன பழமைவாத கோட்பாடு என்றும்,ஒரு படி மேலே சென்று தீவிர இந்துத்துவா வாதியின் கருத்துபோல உள்ளது என்றும் பல்வேறு விமர்சனக்கணைகளை சந்தித்திருக்கிறேன்.கடந்த வாரத்தில் நான் சந்தித்த ஒரு சம்பவமும் ,ஒரு இணையதள சகோதரியின் விண்ணப்பமும், என்னை மீண்டும் இந்த தலைப்பை தொடவேண்டி நிர்பந்திக்கிறது.


கடந்த வாரத்தில் என் நண்பரின் சகோதரி ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து "அண்ணா hospital போகணும் என்னோட வண்டி பஞ்சர் ஆகிவிட்டது ,என்னை hospital கூட்டிபோக முடியுமா "என்று கேட்டார்  .நானும் சரி என்று  நான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அவரை அழைத்துச்சென்றேன்.

அது ஒரு தோல் மருத்துவமனை,  அங்கு சென்று  மருத்துவரிடம்  அவர் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார் .    ஆலோசனை முடிந்த பிறகு மருத்துவர் என்னை உள்ளே அழைத்து என்னிடம் கூறிய விஷயம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.
அந்த பெண்ணிற்கு வாயில் நுழையாத ஏதோ ஒரு வியாதியின் பெயரை சொல்லி அந்த வியாதியின் ஆரம்பக்கட்டம் என்றும்,இது கிட்டத்தட்ட தோல் கேன்சரை போன்றது ,ஆரம்ப நிலையிலேயே வந்துவிட்டதால் குணப்படுத்தி விடலாம் பயப்பட தேவையில்லை என்றும் கூறினார்.ஆனால் கண்டிப்பாக இனிமேல்  'பொடாக்ஸ்' ஊசியை போட்டுக்கொள்ள கூடாது என்றும் எச்சரித்தார் .

வீட்டுக்கு சென்ற பிறகு அந்த பெண்ணிடம்  போடாக்ஸ் ஊசியை பற்றி விசாரித்தபோது அவர் கூறியது என்னை முன்னை விட அதிர்ச்சியடைய செய்தது .
அதாவது இந்த ஊசி நோய் வந்த பிறகு போடும் ஊசியல்ல ,நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியுமல்ல,இது வியர்வை வராமல் தடுக்கும் ஊசி.அக்குள் பகுதியில் வியர்க்காமல் இருப்பதற்காக அந்த பகுதியில் இந்த ஊசி போடப்படுகிறது .மருத்துவத்தின் சாதனையை (!?)என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை
(அந்த சகோதரியிடம் அனுமதி பெற்றே இதை எழுதுகிறேன்)வியர்வை என்பது உடலின் நீர்ச்சமநிலைக்கு, வேப்பச்சமநிலைக்கு ,அதிகப்படியாக உள்ள உப்பு கழிவை வெளியேற்றுவதற்கு இயற்கை செய்த ஏற்பாடு,   .இதை தடுப்பதற்காக ஊசி போட்டுக்கொண்டு  அதன் மூலம் விளையும் பக்க விளைவுகளில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்  படித்த(!?) இளைய தலைமுறை மக்களை என்னால் எந்த கணக்கிலும் வைக்க முடியவில்லை. இது மட்டுமல்ல இதுபோல எவ்வளவோ விசயங்களை மேற்கத்திய கலாசாரம்  என்கிற பெயரில் வலிந்து ஏற்றுக்கொண்டு பின் விடுபட முடியாமல் அவதிப்படுகிறார்கள் .


மேற்கொண்டு  போகுமம் முன்  கலாசாரம்,நாகரிகம்,பண்பாடு போன்றவை பற்றி ஒரு சிறு குறிப்பை பார்ப்பது நமக்கு உதவும்.

நாகரிகமும் பண்பாடும்  சேர்ந்ததுதான் கலாசாரம் .
நாகரிகம் என்பது வரலாற்று வழியில் மனிதன் அடைந்த ஒவ்வொரு வளர்ச்சிக்கட்டமும் நாகரிகம் என்று சொல்லப்படுகிறது .
அதாவது,அறிவியலும் அதோடு தொடர்புடைய கண்டுபிடிப்புகளும் மனிதன் பயன்படுத்த தொடங்கியதோடு தொடர்புடையது நாகரிகம்.
உதாரணமாக தாமிர நாகரிகம் ,இரும்பு நாகரிகம் .....என்கிற வரலாற்று வளர்ச்சியின் இப்போதைய நாம் இருக்கும் கட்டம் நவீன நாகரிகம்.

பண்பாடு என்பது  குரங்கிலிருந்து மனிதன்  பிரிந்து வாழ தொடங்கியதிலிருந்து பிறக்கிறது.   ஒரு குழுவாக வாழ்ந்த மனிதர்கள்    இயற்கையுடன் நடத்திய போராட்டங்களின் மூலம் கற்றுக்கொண்ட அனுபவங்களை தன குழுவோடு பகிர்ந்துகொள்ள துவங்கியபோதுதான்
மொழி ,சடங்குகள்,பழக்கங்கள் ,உறவுகள் போன்ற பண்பாட்டின் கிளைகள் தோன்றுகின்றன . அதாவது தனியொரு மனிதன் தன குழுவிடமிருந்து உள்ள்வாங்கும் சமூக பாரம்பரியமே பண்பாடு எனப்படுகிறது .இன்னும் தெளிவாக சொன்னால் மனிதனின் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்காக செய்துகொண்ட ஒரு ஏற்பாடே பண்பாடு .


எனவே நாகரிகம் என்பது ஒட்டுமொத்தமனித குலத்துக்கும் பொதுவானது ,பண்பாடு என்பது நாட்டிற்கு நாடு மாறுபடும்.
  இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் இருப்பினும், உணவுப்பழக்கம்,உடை,மொழி,இனம்,மதம்,சடங்கு, சம்பிரதாயம்  என்று எவ்வளவோ
மாறுபட்டிருந்தாலும்,ஒட்டு மொத இந்தியர்களுக்கான வாழ்வியல் வழிமுறையே இந்திய பண்பாடு.
உதாரணமாக,மக்களுக்கிடையே பல வேறுபட்ட திருமண முறைகள் இருந்தாலும்,இந்தியாவில் திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில்லை .

அதாவது விலங்குகளிடமிருந்து மனிதன் மாறுபட்டவன் என்பதைக்காட்டுவது  பண்பாடு. விலங்குகள் குடும்பமாக வாழ்வதில்லை,தன்னுடைய துணையை
தன தேவைக்கேற்ப மாற்றிகொள்கின்றன. அதிலிருந்து மனிதன் மாறுபட்டு சமூகமாக,குடும்பமாக ,வாழ்கிற உயர்ந்த பண்பை பெற்றிருக்கிறான் .
இந்தவகையில் நமது இந்திய பண்பாடு விலங்குகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ,மேம்பட்ட பண்பாடாக இருப்பதில் நாம் பெருமை கொள்வோம்.
ஆனால் மேற்க்கத்திய நாடுகளில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதும்,தன தேவைக்கேற்ப தன துணையை மாற்றிக்கொள்வதும் நமக்கு விலங்குகளையே நினைவு  படுத்துகிறது
(இனி பண்பாடு என்பதை கலாசாரம் என்றே குறிப்பிடுவோம்)

இனி கலாசாரத் தாக்கம் பற்றி பார்ப்போம்,அதாவது உணவுப்பழக்கம்,உடை,சமூகத்தோடு  பழகும் பண்பு போன்றவை அந்தந்த மக்கள் வாழும் சூழ்நிலையும்,தட்பவெட்ப நிலையம்,சமூகத்தையும் பொருத்தது. நாம் வெப்பமண்டலத்தில் இருக்கிறோம் அதனால் மெல்லிய ஆடைகளை அணிகிறோம், இங்கு விளையக்கூடிய தானியங்களை உண்கிறோம்,நமது சமூகம் கற்றுத்தந்த வழியில் பயணிக்கிறோம்.
அதே போல் மேற்க்கத்திய நாடுகள் குளிர் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் குளிரை தாங்கும் கனமான ஆடைகளை அணிகிறார்கள். நாமும் அவர்களைபோலவே கனமான ஆடைகளை இந்த கொளுத்தும்  வெய்யிலில் போட்டுக்கொண்டு அலைய நினைப்பது தான் மேற்கத்திய தாக்கம்.


உண்மையில் நாம் எதிர் கொண்டிருக்கும் பிரச்னை மேற்க்கத்திய தாக்கமா?அல்லது மேற்க்கத்திய திணிப்பா?
பிறர் வாழ்க்கை முறையை நாம் விரும்பி ஏற்ப்பது தாக்கம்,ஆனால் நாமே அறியாமல் நம் மீது திணிக்கப்படுகிறது என்பதே உண்மை .
இதை உணர்ந்து இந்த ஆபத்திலிருந்து  நம்மை நாமே மீட்டெடுப்பதே நம் முன் இருக்கும் முக்கிய கடமை .

ஒரு காலத்தில் உலகம் முழுதும்  ஒதுங்க இடமின்றி விரட்டப்பட்ட யூதர்கள் தமக்கென்று இஸ்ரேல் என்ற ஒரு தேசத்தை அமைதுக்கொண்டதர்க்கு (குறுக்கு வழியிலேனும்)  அவர்களது பாரம்பரிய மொழியான ஹுப்ரு மொழியை அழியும் தருவாயில் இருந்து மீட்டெடுத்து  மறு கட்டுமானம் செய்தது, மிக முக்கிய பங்கு வகித்தது.இது இஸ்ரேல் வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும், இதை ஏன்சொல்கிறேன் என்றால் ஒரு சமூக மக்களின் இணைப்பு கண்ணிகளே கலாசாரம்,அதை அந்நிய மோகத்தில் துருப்பிடித்து அறுந்துபோக அனுமதிப்பது நமக்கு நாமே குழி வெட்டிக்கொள்வது போன்றது.


மேற்க்கத்திய நாடுகள் மெனக்கெட்டு நம் மீது அவர்களின் கலாசாரத்தை திணிக்க என்ன காரணம் :?இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தை
இங்கு நாம் நம் கலாசாரத்தை பாதுகாத்து வைத்திருந்தோமென்றால் மேலை நாடுகளால் இங்கு வந்து ஒரு சோடா கூடவிற்றிருக்க  முடியாது .
லாப வேட்கை மட்டுமே கொண்ட வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே நமது கலாசாரத்தை சிதைத்து அவர்களது வாழ்க்கை முறையை நம் மீது திட்டமிட்டு  திணிக்கிறார்கள் .கொஞ்சம் விவரமாக  பார்ப்போம்...



நமது பாரம்பரிய சத்தான உணவுகள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது பிஸ்ஸாவும் ,பர்கரும்,நூடுல்சும் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது.
ஒரு 10 வருடம் முன்புவரை கோலிசோடா இருந்தது ,கலர் என்றொரு பானம் இருந்தது,பொவண்டோ ,காளிமார்க்,பொடாரன் என்ற பானமேல்லாம் இன்று போன இடம் தெரியவில்லை.என்ன காரணம்.பெப்சி என்கிற பகாசுர பெரும் நிறுவனத்துடன் போட்டி போடா முடியாமல் நமது சுதேசி பானங்கள் மறைந்து விட்டன.
இன்று பெப்சிக்கு கோக் உடன் போட்டி ,7 up க்குsprite  உடன் போட்டி ,maazaa க்கு slice உடன் போட்டி என்று நாம் நினைதுக்கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மை என்னவெனில் இவை அனைத்திற்கும் ஒரே முதலாளி என்பது தான் ,வேறு யாரும் போட்டிக்கு வந்துவிடக் கூடாது என்று தான் தமக்குள்ளேயே போட்டி போட்டுக்கொண்டு நம்மையெல்லாம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது அந்த நிறுவனம்.

அடுத்தது விவசாயம், இந்தியாவின் முதுகெலும்பு .அது நாளுக்கு நாள் ஏழை தொழிலாளியின் முதுகெலும்பு போல் வழிந்துகொண்டே போகிறது.
ஏற்கனவே நமது(!?)அரசு விவசாயத்திற்கான மானியங்களை படிப்படியாக வெட்டிக்கொண்டே வந்து லட்சக் கணக்கான விவசாய்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு நிர்வாகம் செய்து விவசாயத்தை வளர்க்கிறது.(!?). போதாது என்று மான்சாண்டோ என்கிற பகாசுர நிறுவனத்திடம் pt பருத்தி, pt கத்தரி என்று விதைகளை வாங்கி இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனத்திற்கு அடமானம் வைக்க திட்டமிட்டது .நமது பாரம்பரிய விவசாய முறையை காவு கொடுக்க முயற்சி செய்தது, மக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக அந்த திட்டத்தை தள்ளிப்போட்டது .(note this point ;தற்காலிகமாக) அரசின் அந்த முயற்சி நிறைவேறியிருந்தால் நாம் இனிவரும் காலங்களில் விதைகளுக்காக அந்த நிறவனங்களை எதிர்பார்தே இருக்கும் நிலைக்கு தள்ளப்படிருப்போம்.ஏனெனில் அந்த விதைகளை விதைத்த நிலத்தில் வேறு எந்த விதையும் விளையாது .



அடுத்த முக்கியமான விஷயம் பெண்கள். மேற்க்கத்திய கலாசார வலையில் பெண்கள் தான் எளிதில் சிக்கி விடுகிறார்கள்.
முதல் இந்தியாவின் உலக அழகி dr ரீடா பரியா போவெல்(1966)
அடுத்தது ஐஸ்வர்யா(1994/ms.world),,  சுஸ்மிதா(1944/ms.universe),    டயானா ஹைடன்(1997/ms.wrld),      யுக்தா முகி(1999/ms.wrld),     பிரியங்கா சோப்ரா(2000/ms.wrld)   லாரா தத்தா(200/ms.univ),    தியா மிர்சா(2000/ms.asia) ,  நிகோல் பரியா (2010/ms.earth).
இந்த  பட்டியல i பார்த்தல்  என்ன  தெரிகிறது ?1991 க்கு பிறகுதான் இந்தியாவில்  அழகிகள் அதிகமாக் பிறந்திருக்கிறார்கள் ,அதற்கு முன்புவரை நம் நாட்டில் என்ன பெண்கள் யாரும் அழகாக பிறக்க வில்லையா ? அதுவல்ல காரணம் p.v. நரசிம்மராவ் தலைமையில் இந்தியா 1991 இல்  உலக மய,தாராள மய ,கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பிறகு நம் பெண்களை அழகிப்பட்டம் கொடுப்பதன் மூலம் அழகு என்கிற குறுகிய மாயையில் மூழ்கடித்து மேற்க்கத்திய நாடுகள் தன அழகுசாதன பொருட்களை இந்தியாவில் அதிக அளவில் விற்று சந்தையை பிடித்துக் கொண்டது.
fair and lovely என்கிற க்ரீம் பல வருடங்களாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது,எழு நாட்களில் சிவப்பழகு என்ற விளம்பரம் செய்யப்படுகிறது .இதுவரை யாராவது அந்த க்ரீமை பயன்படுத்தி சிவப்பானதாக எங்கேனும் செய்தி உண்டா?இல்லை ஆனாலும் இன்று வரை அது தான் விற்பனையில் முதலிடம்.சிவாஜி படத்தில் வருவது போல கிலோ கணக்கில் பூசினாலும் கருப்பு சிவப்பாகாது,பழுப்பு வெளுப்பாகாது.

அடுத்து பெண்களின் உடையணியும் முறை , அடா, அடா ,அடா,நாகரிகம் என்ற பெயரில் சில பெண்கள் முகம் சுளிக்கும் வண்ணம் உடையணிந்து செய்யும் லூட்டியை சகிக்க முடிவதில்லை..ஆதிகால மனிதன் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலை,தழை களைக்கொண்டு தன உடலில் முக்கிய பாகங்களை மட்டும் மறைத்துக்கொண்டான்,நாகரிகம் வளர வளர தன சுற்றுச் சூழலுக்கேற்ப முழு உடலையும் மறைக்கும் படி உடையனிய துவங்கினான் .அதன் தொடர்ச்சிதான் நாம். மீண்டும் ஆதிகாலத்தை நோக்கிய சிலரின் பயணம் மிகப்பலரை முகம் சுளிக்க வைக்கிறது என்பதே உண்மை.

மேற்க்கத்திய நாடுகளில் ஆபாசமாக உடையணிகிறார்கள் என்றால் அது அவர்களின் சமூக பழக்கம்,முன்பே சொன்னது போல அது பண்படாத பண்பாடு ,விலங்குகளை ஒத்தபண்பாடு,ஆனால் நமது பண்பாடு முற்றிலும் மாறுபட்டது ,மேம்பட்டது.இதை உணர பழக வேண்டும்.

இப்படி எழுதுவது தவறு, அது பெண் உரிமை,பெண் சுதந்திரம் என்று வாய் கிழிய பேசும் பலரும் தன வீட்டுப்பெண்களை  இப்படி உடையனிய அனுமதிக்க மாட்டார்கள் ,அல்லது உள்ளுக்குள் வருந்துவார்கள்.இது போன்று ஊருக்கு உபதேசம் செய்யும் இரட்டை வேட மனிதர்களை நாம் நிறைய சந்தித்திருக்கிறோம். ஆபாசமாக உடையணிவது எந்த வகையில்  சுதந்திரம் என்பது புரியவில்லை.

பெண்ணடிமைதனத்தை நான் நிச்சயம் ஆதரிக்கவில்லை,அது சமுதாயத்தில் நிச்சயம் கழுவப்பட வேண்டிய அழுக்குதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .ஆனால் உடலின் அழுக்கை போக்க சோப்பு போட்டுதான் குளிக்க வேண்டும் ,அதற்க்கு டிடர்ஜெண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்பதே என் வாதம்.

1.சோப்புக்கும் டிடேர்ஜெண்டுகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர பழகுங்கள்.

2.சமூகத்தின் அழுக்கை போக்குகிறோம் என்ற பெயரில் சமூகத்தை சீரழிப்பது குறித்து கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள்
3.மேற்கத்திய  கலாசார திணிப்புகள் அனைத்தும் வெறும் வியாபார உத்திகள் தான் என்பது குறித்து எச்சரிக்கை கொள்ளுங்கள்
4.வரட்டுத்தனமான பிடிவாதத்தை விட்டுவிட்டு இந்த பிரச்சனையை ஒரு மூன்றாவது கோணத்தில் அணுகுங்கள்
5.முகத்திரை முறையை எதிர்பதென்பது எந்த வகையிலும் ஆபாசமாக உடையணிவதை ஆதரிப்பது என்று அர்த்தமாகி விடாது....

i miss u.. (10.09.2011)



ஓயாமல் ஒலிக்கும் -உன்
கொலுசு சப்தங்களில்

நீ குளித்து முடிந்த பின்னே -உன்னை
அழுக்காக்கிய சில காலை பொழுதுகளில்,

எனக்கான பணிவிடைகள் செய்து -நீ
பட்டுக்கொள்ளும் ஆத்ம திருப்திகளில்,

உணவோடு சேர்த்து நீ பரிமாறும்
உன்னத அன்பினிலே 

என் வேலைகளின் நடுவே நீ செய்யும் 
தொலைபேசி  தொல்லைகளில்,           

எனக்கான உன் காத்திருப்புகளில்,

என் வண்டி சப்தம் கேட்டதுமே 
ஓடி வந்து எட்டி பார்க்கும் 
உன் எதிர்பார்ப்புகளில்,

தினமும் நீ சொல்லும்
i love u என்கிற வார்த்தைகளில்,

நேற்று படித்து பாதியில் வைத்த
 புத்தகத்தை ஒளித்துவைத்து -நீ 
செய்யும் குறும்புகளில்,

அடிக்கடி வரும் என் ஒற்றை தலைவலிக்கு 
தைலம் தடவும் உன் பூவிரல் ஸ்பரிசங்களில்,

அதிக புத்தக வாசிப்பே என் பார்வை குறைவுக்கு 
காரணம் என்று மருத்துவர் கூறியபோது -நீ
வெடித்துக் கதறிய அக்கறையில்,

ஏறத்தாழ நம் எல்லா விவாதங்களிலும்
வேண்டுமென்றே தோற்றுப்போகும்
உன் பெருந்தன்மைகளில்,

கோபம் தலைக்கேறிய சில நேரங்களில்
உன்னை கைநீட்டி அடித்துவிடும்-என் 
கோழைத்தனத்தை பொறுத்துக்கொள்ளும் -உன்
சகிப்புத் தன்மைகளில்,

காமம் வடிந்த பின்பு நீ பொழியும் 
காதல் முத்தங்களில்,

உன் கர்ப்ப கால வேதனைகளில்,

பிரசவ அறையில் நுழையும்போது 
"எனக்கு ஏதாவது ஆச்சுன்னா
 நீ வேற கல்யாணம் பண்ணிக்க"என்று கூறி 
நீ சிந்திய கண்ணீர்த்துளிகளில்,

இதுபோல எத்தனையோ தருணங்களில் ,,
இதுபோல எத்தனையோ தருணங்களில்,
நான் உணராத உன் காதலை,

உன்னோடு பேசிச் சிரித்த நம் அறையில்-நான்
தனிமையாய் இருக்கும்போதும்,

உன்னையே சுற்றிச்சுற்றி ஓடும் நினைவுகளில்
உறங்காமலே விடிந்துபோன சில இரவுகளிலும்,

முதல் முறையாய் அனுபவிக்கும்-இந்த 
மூன்றுமாத பிரிவில் அதிகம் உணர்கிறேனடி...

i miss u...

பிறந்தநாள் வாழ்த்துகள் மகளே.. (10.10.2011)



வேதம் பெரிது என்பார்
மனிதம் சிறிதென்பார்
தள்ளிடு மதங்களை மறுப்போடு ...

தொட்டால் தீட்டு என்பார்
பார்த்தால் பாவம் என்பார்
தூற்றிடு சாதியை வெறுப்போடு...

மத துரோகி என்பார் ஹராம் என்பார்
சாபம் விடுவார் சைத்தான் என்பார்
சகித்திடு அவர்களை சிரிப்போடு ...

ஏற்றதாழ்வுகள் இயல்பென்பார்
ஏகநாதனின் சித்தமென்பார்
ஏசி விடு அவர்களை கோபத்தோடு...

சட்டமென்பார் திட்டமென்பார்-தன்
சட்டைப்பைக்குள்ளே உலகமென்பார்...
எதிர்த்திடு ஏகாதிபத்தியத்தை தீரத்தோடு ...

புன்னகை  மட்டுமே பெண்ணுக்கு அணிஎன்று
பொய் சொல்லித்திரியும் போலிச்சமுதாயம்
காட்டிடு கோபத்தை கொந்தளிப்போடு ...

இன்னல் போக என்ன வழியென்று
உன்னிடம் உன் மனம் கேட்கும் நாளில்
மார்க்சியம் படி அக்கறையோடு
தெளிவாய்  உலகில் நடைபோடு...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகளே...